

ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகளால் நமக்கு ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கும் அளவுக்கு, அதனால் நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் சைபர் குற்றங்களைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
பிஷ்ஷிங் என்றால் என்ன?
பிஷ்ஷிங் என்பது குற்ற நோக்கத்துக்காக உருவாக்கப்படும் போலி இணையதளங்கள். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட வங்கியின் வலைத்தளத்தைப் போலவே அச்சு அசலான ஒரு வலைத்தளத்தை ஹேக்கர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். கூகுளில் வங்கியின் வலைத்தளத்தைத் தேடும்போது இந்தப் போலி வலைத்தளம் முதல் பத்து இடங்களுக்குள் வருவது போன்று அமைத்து விடுவார்கள்.
இந்த வலைத்தளத்தில் ஒருவர் நுழைந்து வங்கியின் பயனாளர் கணக்கு, பாஸ்வோர்டு ஆகியவற்றை அளித்ததும் இந்த இணையம் முடங்கிவிடும். நீங்கள் அதில் அளித்த பயனர் கணக்கு, பாஸ்வேர்டு சைபர் குற்றவாளிகளின் கைக்குச் சென்றிருக்கும்.
ஸ்மிஷிங்:
சிறப்புச் சலுகைகள் என்று ஆசை வார்த்தை கூறி ஒரு வலைத்தளத்தின் சுட்டியை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புவார்கள். நீங்கள் கிளிக் செய்து அந்த வலைத்தளத்தில் உள் நுழைந்தால் போதும் உங்கள் அந்தரங்கத் தகவல்களைக் கேட்கும். நீங்களும் மறந்துபோய் கொடுத்துவிட்டால் அந்த வலைத்தளம் பெரிதாக எந்த வேலையும் செய்யாது. ஆனால், பின்புறத்தில் உங்களுடைய தகவல்களைத் திருடி இருக்கும்.
விஷ்ஷிங்:
பொதுவாக, வங்கிகள் ஈரடுக்குப் பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தும். அதாவது நீங்கள் உங்கள் பயனர் கணக்குத் தகவல், கடவுச்சொல் ஆகியவற்றைக் கொடுத்து நுழைவது முதல் அடுக்கு சைபர் பாதுகாப்பு. அதற்குப்பின் பரிவர்த்தனைகளின் போது உங்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் otp இரண்டாம் அடுக்குப் பாதுகாப்பு. ஒருவேளை நம் பயனர் கணக்கின் கடவுச்சொல்லைத் திருடினாலும், இந்த otp இருந்தால் மாத்திரம்தான் குற்றவாளிகளால் பணத்தைத் திருட முடியும்.
அதற்காக அவர்கள் பயன்படுத்தும் நூதன முறைதான் இந்த விஷ்ஷிங். இந்த முறையின்படி உங்களுக்கு கால் செய்து உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களின் வங்கிக் கணக்கு அல்லது அந்தரங்கத் தகவல்களைச் சேகரிப்பது. மிகக் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட் போனுக்கு வரும் otp எண்ணைப் பெறுவது.
டிஜிட்டல் அறிவைப் பெருக்குவோம்
சைபர் கிரைம்களும் டிஜிட்டல் திருட்டுகளும் முழுக்க முழுக்க நமக்கு இருக்கும் டிஜிட்டல் அறிவின் போதாமையாலேயே நிகழ்கின்றன, நீங்கள் பயன்படுத்தாதபோது உங்கள் செல்போன் சூடாகிறது என்றால், தேவையற்ற செயலிகளால் உங்களின் முக்கியத் தரவுகள் நொடிக்கு நொடி ஹேக்கர்களுக்கு அனுப்பப்படுகின்றன என்று அர்த்தம். தேவையற்ற செயலிகளை நீக்குவது உங்கள் போனில் இருக்கும் முக்கியத் தகவல்களைப் பாதுகாக்க உதவும்.
ஒரு போதும் யாருக்கும் எந்தக் காரணத்துக்காகவும் உங்களின் வங்கிக் கணக்குத் தகவல்களையும் OTP எண்ணையும் கொடுக்க வேண்டாம். எந்த வங்கியும் எந்தவொரு காரணத்துக்காகவும் உங்களின் வங்கித் தகவல்களையும் OTP - ஐயையும் கேட்கவே மாட்டார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்போது போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தினால்தான் வாழ்வும் ஸ்மார்ட்டாக இருக்கும்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com