காயமே இது மெய்யடா 16: சளியை நீக்கும் ஒத்தடம்

காயமே இது மெய்யடா 16: சளியை நீக்கும் ஒத்தடம்
Updated on
2 min read

கடந்த இதழின் முடிவில், உள்ளி ழுக்கும் காற்றின் அளவை அதிகப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியைப் பற்றிப் பேசினோம். அத்தகைய பயிற்சியைத் தொடங்கும் முன்பு நம்முடைய அகம், புறச் சூழல் ஆகியவை குறித்த தெளிவு மிகவும் அவசியம். அவற்றைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, நாம் மேற்கொள்ளும் பயிற்சி பலன் தரும். அதற்கு மாறான அக, புறச் சூழலில் சுவாச அளவை அதிகரிக்கும் பயிற்சி மேற்கொண்டால் நிச்சயம் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

குறிப்பாக, தென்னிந்தியாவில் அதிகபட்சக் குளிர் நிலவும் இந்தக் காலச் சூழலில் (டிசம்பர் – ஜனவரி மாதங்கள்) சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சுவாச அளவை அதிகரிப்பதற்கான பயிற்சியைத் செய்வது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. இந்நாட்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்தப் பயிற்சியால் தும்மல், இருமல், மூக்கரிப்பு, கண்ணெரிச்சல் போன்றவற்றோடு நெற்றிப் புருவம் தொடங்கி பின்னந்தலை வரைக்குமான வலி சேர்ந்து கொள்ளும்.

சளி என்றால் என்ன?

சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீரலிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளியேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ‘ஷாக் அப்சர்வ’ராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின் (exhale) வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

தைலம் நல்லதா?

இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை (inhale) மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீரலுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட்டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

உடம்பைச் சூடேற்றும் ஒத்தடம்

சளியை (நீர், கோழை, ஈழை வடிவக் கழிவை) நிரந்தரமாக வெளியேற்றுவதே நாம் செய்ய வேண்டியது. சளியால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் சூடேற்றிக்கொள்ள உதவும் சில புறச் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதன்மூலம் உடலினுள் தேங்கியிருக்கும் குளிர்ச்சியைத் தவிர்ப்பதோடு சுவாசத்தையும் எளிதாக்கி, அதன் மூலம் முன்னிலும் கூடுதலாகச் சுவாசிக்க இயலும்.

kaayame-2jpg

குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்துவது நன்று. இவை அனைத்தையும்விட, நமது பாரம்பரிய வீட்டுச் சிகிச்சை முறையான ‘ஒத்தடம்’ நமக்கு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும். ஒத்தடம் கொடுக்கும் இந்த முறையை ஒரு வயதுக் குழந்தை தொடங்கி பெரியவர்கள்வரை யாருக்கும் செய்யலாம்.

மணல்ஒத்தடம்

சிமெண்ட் கலவைக்குப் பயன்படும் தூசி இல்லாத மணலை, கனமான இரும்பு வார்ப்பு வாணலியிலோ மண் வறு சட்டியிலோ நன்றாகச் சூடேறும் விதமாக வறுத்து, உடல் தாங்கும் அளவு சூடேறியதும், வேட்டி போன்ற தூய நிறமுள்ள, கெட்டித் தன்மையற்ற துணியில் கொட்டி, முடிச்சு போல் கையால் இறுகப் பற்றிக் கொண்டு தோள்பட்டை, நுரையீரல் அமைந்துள்ள பின் பாகம், முன் பாகம், முதுகுத் தண்டில் கழுத்தில் இருந்து அடிப்பாகம் வரை தொடர்ந்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குப் பாகம் மாற்றி மாற்றி ஒத்தடம் கொடுத்தால், உடனடியாக மூக்கடைப்பு நீங்கி சுவாசம் எளிதாகும்.

துணிஒத்தடம்

மணலுக்குப் பதிலாக அரிசித் தவிட்டையும் பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் மூக்கடைப்பு நேர்ந்துவிட்டது, அவசரத்துக்கு மணலோ தவிடோ இல்லை என்றால், வறுக்கும் பாத்திரத்தைத் தலை குப்புறக் கவிழ்த்து அடுப்பின் மீது வைத்துச் சூடேற்றி, டர்க்கி டவல் போன்ற கெட்டியான துணியைப் பாத்திரத்தின் மீது அழுத்திச் சூடேற்றி, அந்தச் சூடான துணியைக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

வீட்டில் உள்ள அரிசி, கோதுமை போன்ற பெருந்தானியங்களையும் ஒத்தடத்துக்குப் பயன்படுத்தலாம். மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் செய்யத் தகுந்த மற்றொரு சிகிச்சை முறை உண்டு. அதைப் பின்னர் பார்க்கலாம்.

நடைப் பயிற்சி

சளித் தொல்லை மிதமாக உள்ள ஆரம்ப நிலையில் வேகநடை, மெது ஓட்டம். போன்ற உடற்பயிற்சிகள் நல்ல பலன் தரும். புறச் சூழலில் பனி அடங்கிய காலை ஏழு மணிக்கோ மாலை ஐந்து மணிக்கோ தூசிப்படலம் இல்லாத வாகனப் போக்குவரத்து இல்லாத வெளியில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். நன்கு மூச்சை விடுவதற்கு ஏதுவாக, நன்றாகத் தோள்பட்டை அசையும்படி கையை வீசி நடக்க வேண்டும்.

ஓடும்போது முழு உடலும் அதிரும்படி முன் பாதத்தில் உடலின் மொத்த எடையும் குவியும்படி மெதுவாகக் குதித்து ஓட வேண்டும். இந்தப் பயிற்சிகளால், உடம்பு சூடேறி, அடர்ந்த நிலையில் உள்ள சளிக்கழிவை இளக்கி மூச்சின் வழியாகக் காற்று வடிவத்தில் வெளியேற்றும். சளித் தொல்லையை நீக்கும் மேலும் சில வழிமுறைகள் குறித்தும் குழந்தைகளுக்கான சளி நீக்கம் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in