சுகாதாரத்தில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

சுகாதாரத்தில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்
Updated on
1 min read

தேசிய அளவில் சுகாதாரத்துக்கான தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அதில் 92 புள்ளிகள் பெற்று கேரளம் முதலிடத்திலும் 77 புள்ளிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன. தெலங்கானா 73 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் 71 புள்ளிகள் பெற்ற பஞ்சாப் நான்காம் இடத்திலும் உள்ளன. தேசிய சராசரி 52 புள்ளிகள். 10 மாதங்களுக்கு முன்பு தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 66 என்ற அளவில் உள்ளது. இதில் தேசிய சராசரி ஒரு லட்சத்துக்கு 130. கேரளத்தில் தாய் இறப்புவிகிதம் மிகக் குறைவாக, ஒரு லட்சத்துக்கு 46 என்ற அளவில் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கு 61. இந்த மூன்று மாநிலங்களும் 2030-ல் 70 என்ற அரசின் இலக்கைத் தற்போதே எட்டியுள்ளன.

இதயத்தைச் சீராக்கும் மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் கர்கியூமின் என்ற வேதிப்பொருளின் மூலம் இதய நோய்களுக்குத் தீர்வு காண முடியும் என, சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது. பொதுவாக, இதய நோயுள்ளவர்களுக்கு இதயத்தின் இடது பகுதி சரிவர வேலை செய்யாது. அதனால், உடலில் உள்ள தசை இயக்கத்திலும் சற்றுத் தொய்வு ஏற்படும். மஞ்சளின் அடிவேர் பகுதியில் இருக்கும் கர்கியூமின் நம் உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்டைத் தக்கவைக்க உதவுகிறது.

இதய நோயையும் அதனால் உண்டாகும் உடல் தசை இயக்கத்தின் தொய்வையும் கட்டுப்படுத்தும் என்ஆர்எஃ2 (Nrf2) புரதத்தை அது அதிகம் சுரக்கிறது. 12 வாரங்கள் கர்கியூமின் பயன்படுத்தப்பட்ட நிலையில் இதயக் கோளாறுள்ளவர்களின் உடலில் என்ஆர்எஃ2 (Nrf2) புரதத்தின் அளவு சீராகி இதயக் கோளாறு பிரச்சினை கட்டுப்பாட்டில் இருந்ததாக அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

தொகுப்பு: நிஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in