

ஸ்மார்ட் போன் இல்லையென்றால் இன்று நமக்குக் கையொடிந்ததுபோல் ஆகிவிடுகிறது. நமது தனிப்பட்ட வாழ்வின் அனைத்து ரகசியங்களையும் அதில் பொதிந்துவைத்திருக்கிறோம். நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் தகவல்களைப் பாதுகாப்பது அவசியம்.
பொது இடங்களில் கிடைக்கும் ஃவைஃபையுடன் நமது போனை இணைக்கும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பில்லாத, சந்தேகத்துக்கு இடமான பொது வைஃபைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஆன்டி வைரஸ் செயலிகள் எச்சரிக்கை செய்தால், உடனடியாக வைஃபையிலிருந்து போனைத் துண்டித்துவிடுங்கள். பயன்படுத்தாத நேரத்தில் உங்கள் போனில் உள்ள வைஃபை வசதியை அணைத்துவிடுங்கள். உங்களுடைய ரகசியத் தகவல்களை ஒருபோதும் பொது வைஃபை சேவையில் பகிராதீர்கள்.
செயலிகளின் தேர்வு
தேவையான செயலியை மட்டும் வைத்திருப்பது புத்திசாலித்தனம். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஐ ஸ்டோர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்திலிருந்து மட்டும் செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள். குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றில் வரும் இணைப்பின் மூலம் தரவிறக்கம் செய்வதைத் தவிருங்கள். உங்கள் ஸ்மார்ட் போனை உங்கள் குழந்தையிடம் கொடுக்கும்முன் குழந்தைக்கு உகந்த செயலிகள் மட்டும்தாம் ஸ்மார்ட்போனில் உள்ளதா என்பதை உறுதிசெய்தபின் கொடுங்கள்.
ஒவ்வொரு செயலியும் குறித்த காலத்தில் மேம்படுத்தப்பட்ட (Updates) மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தும். இது மிகவும் அவசியம். ஒருவேளை அந்தச் செயலியில் ஏதாவது பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் மேம்படுத்தல்களின் உதவியுடன் அந்தப் பாதுகாப்பு அம்சங்களை அது மேம்படுத்திக்கொள்ளும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆண்ட்ராய்ட் போன்ற இயங்குதளம் முதல் செயலிகள்வரை இத்தகைய மேம்படுத்தல்களைத் தவறாமல் அனுமதித்துவிடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் செயலியில் மேம்படுத்தல்களை நீண்டகாலத்துக்கு அந்த நிறுவனம் செயல்படுத்தாமல் இருந்தால், உடனடியாக அந்தச் செயலியை போனிலிருந்து அகற்றிவிடுங்கள்.
உங்கள் செயலி ஏதேனும் ஸ்மார்ட் போனில் உள்ள தகவல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டால், அந்தச் செயலுக்குத் தேவையான அனுமதியை மட்டும் கொடுங்கள். மிதமிஞ்சிய அனுமதிகளைக் கோரும் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம். உதாரணத்துக்கு உங்களின் ஒளிப்படத் தொகுப்புச் செயலி, கேமரா பயன்படுத்த அனுமதி கேட்கலாம். சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி கேட்கலாம். ஆனால் உங்கள் நண்பர்களின் தொடர்பு எண்களை அனுமதிக்கக் கேட்டால் தேவையற்றதுதானே?
வெப் பிரவுசர்களில் கவனம் தேவை
வெப் பிரவுசர்களைப் பயன்படுத்தும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு தளத்தைத் திறந்தவுடன் கூடவே பாப்-அப் விளம்பரங்கள் முளைக்கும். இப்படி வரும் விளம்பரங்கள் மிகவும் கவர்ச்சியான வாசகங்களையோ சலுகைகளையோ அறிவிக்கும். அதை கிளிக் செய்து பின்பற்றிச் செல்லும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உண்மையான நிறுவனங்களின் பெயர்களில் போலியான தளங்கள் பல உண்டு. அவை உங்கள் பயனர் கணக்கையும் பாஸ்வேர்டையும் பெற்று அதன் மூலம் உங்கள் பணத்தைத் திருட வாய்ப்பிருக்கிறது. எனவே, இணையதள முகவரியைச் சரிபார்த்து பின்னரே அவற்றுள் செல்லுங்கள், அதுதான் நல்லது.
எக்காரணம் கொண்டும் உங்கள் வெப் பிரவுஸரில் உங்களின் பயனர் கணக்கு மற்றும் பாஸ்வேர்டைச் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் பயனர் கணக்கை உள்ளீடு செய்து செல்வதுதான் சரியான முறை. ஒரு சில நொடிகள் சோம்பேறித்தனத்துக்கு நீங்கள் சேமித்துவைக்கும் உங்களின் அந்தரங்கத் தகவல்களை ஹேக்கர்கள் திருடிவிட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாது. அடுத்த வாரம் செயலிகளின் மூலம் நடக்கும் சைபர் கிரைம்களைப் பற்றிப் பார்ப்போம்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com