

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொழுநோய் முற்றிலும் அகற்றப் பட்டுவிட்டது என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை உலக சுகாதார மையத் திடம் தொழுநோயைத் தடுப்பதற்காக நிதியுதவி பெறப்பட்டுவருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் தொழுநோய் பிரிவு சார்பில் 2017-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி நாட்டில் 1,35,485 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
தொழுநோய் கண்டறியப்பட்டவர்களில் 67,000 பேர் நோய் முற்றிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2015, 2016 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 60 சதவீதத் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 13,456 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 3,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் பின்தங்கிய மாநிலங்களில்தான் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. 2005-ம் ஆண்டுக்கு முன்பு தொழுநோய் பாதிப்பு அதிகம் இருந்த டெல்லி, சண்டிகர், ஒடிஷா, மேற்குவங்கம், லட்சத்தீவு ஆகிய பகுதிகளின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. சுகாதாரத் துறையில் முன்னேறிய மாநிலமான கேரளாவில்கூட இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
- அன்பு
பதின்பருவ பெண்களைப் பாதிக்கும் சமூக ஊடகங்கள்
சமூக ஊடகப் பயன்பாட்டால், பதின்பருவ ஆண்களைவிடப் பதின்பருவப் பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுவதாகச் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘இகிளினிக்கல்மெடிசின்’ (EClinicalMedicine) என்ற இதழில், சமூக ஊடகங்களுக்கும் மன அழுத்த அறிகுறிகளுக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
பிரிட்டனின் ‘யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனை’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பதின்பருவத்தைச் சேர்ந்த 11,00 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த ஆய்வில், 14 வயதுப் பெண்கள் சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது. 40 சதவீதப் பெண்கள் ஒரு நாளில் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இவர்களுடன் ஒப்பிடும்போது, இருபது சதவீத ஆண்களே சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பதின்பருவ ஆண்களில் 10 சதவீதத்தினரும் பெண்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
சமூக ஊடகங்களைக் குறைவாகப் பயன்படுத்துபவர்களில் 12 சதவீதத்தினரிடமும், அதிகமாகப் பயன்படுத்துபவர்களில் 38 சதவீதத்தினரிடமும் (ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக) மன அழுத்த அறிகுறிகள் தீவிரமாக (மருத்துவ ரீதியான) இருந்ததை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிசெய்கின்றன. அத்துடன், 40 சதவீத பதின்பருவப் பெண்கள், 28 சதவீத ஆண்கள் ஆகியோரது தூக்கமும் சமூக ஊடகப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- கனி