Published : 22 Dec 2018 12:00 AM
Last Updated : 22 Dec 2018 12:00 AM

செயலி என்ன செய்யும்? 13 - புத்தர் ஆவதற்கு ஒரு செயலி..!

அமைதியே உருவான, ஆசையைத் துறந்த, அன்பைப் போதித்த புத்தனின் மூளை எப்படி வேலை செய்திருக்கும்? புத்தர் சிலையை வணங்குகிற, புத்தர் படங்களைக் கணினியிலும் ஸ்மார்ட்ஃபோனிலும் ‘வால் பேப்ப’ராக வைத்திருக்கிற பலரின் மனதுக்குள்ளும் ‘நாமும் புத்தனாகிவிட மாட்டோமா?’ என்ற ஆசை இருக்கத்தானே செய்கிறது?

வெறித்தனமான ஓட்டம், அலைச்சல், தேடுதல் போன்றவற்றால் உடலும் சீரழிந்து மனதும் அயர்ந்து போய், நோயாளிகளாக மாறிவிடுகிறோம். இப்படியிருந்தால் நம்மால் எப்படிப் புத்தராக முடியும்?

புத்தரைப் பின்பற்றலாமா..?

இதற்கெல்லாம் ஒரே வழி புத்தரைப் பின்பற்றுவதுதான். புத்தரின் பேரமைதி மட்டும் நம் மனதுக்குக் கிடைத்துவிட்டால், நம் மன உளைச்சல் குறைந்துவிடும். மன உளைச்சல் குறைந்தாலே, நாம் நம் குறிக்கோளை நோக்கி முழுக் கவனத்துடன் மனத்தைச் செலுத்தி வெற்றி பெறலாம்.

‘அமெரிக்காவில் பரபரப்பான, அதிக மன அழுத்தம் தரக்கூடிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களை மீட்க ஒரே வழி, புத்தர் போதனை களைப் பின்பற்றுவதுதான்’ என அமெரிக்க அறிஞரும் மருத்து வருமான ஜான் கபாட் ஜின் சொல்கிறார். அவரது அயராத உழைப்பின் காரணமாக, ‘மைண்ட்ஃபுல்னெஸ் மெடிட்டேஷன்’ எனும் தியான முறை இன்று மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதுபோன்ற பிரபலமான தியான முறைகள் பலவற்றைச் சொல்லித் தர இன்று சந்தையில், ஏராளமான செயலிகள் உள்ளன. அவற்றில், ஒரு செயலியைப் பார்ப்பதற்கு முன், ‘மைண்ட்ஃபுல்னெஸ்’ எனும் ‘முழுமை பெற்ற மனநிலை’ குறித்துச் சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்வோம்.

நிகழ்காலத்தில் இருங்கள்

மனிதரின் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணங்கள், ஒன்று, அவன் இறந்த காலத்தை நினைத்து வாடுவது. அல்லது, வருங்காலத்தைத் திட்டமிடாமல் கனவு காண்பது. இப்படி இறந்த காலத்தையும் வருங்காலத்தையும் கணக்கில்கொள்ளும் மனிதன் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான். இது மன அழுத்தத்தை உருவாக்குவது மட்டு மல்லாமல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. இதனால் இன்று நாம் முடிக்க வேண்டிய பல காரியங்களைச் சரியாக முடிக்காமல், வருங்காலத்தில் பெற வேண்டிய வெற்றியை நாம் தள்ளிப் போட்டுவிடுகிறோம்.

இதிலிருந்து தப்பிப்பதற்குச் சிறந்த வழி, ‘நிகழ்காலத்தில் இருப்பது’ (Being in present). எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலையில் முழுவதுமாக நம்மை ஈடுபடுத்திக்கொள்வது (Mindfulness). ஓஷோ முதல் இன்றைய கார்ப்பரேட் சாமி யார்கள் வரை போதிக்கும் விஷயம், இதுதான்.

உண்மையில், கீழைத்தேய நாடுகள் போதிக்கும் வாழ்க்கை முறை என்பது, எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் அந்த நொடியில் முழுமையாக லயித்து வாழ்வதுதான்.

இந்த வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற, நமக்கு ஒரு குரு அவசியம் வேண்டும். ஆனால், குரு கிடைக்காதவர்கள் என்ன செய்வது? குரு ஸ்தானத்தில் இருந்து இந்தச் செயலி அவர்களை வழிநடத்தும்.

ஆரா (Aura)

‘ஆரா’ என்றால் தலையைச் சுற்றி ஏற்படும் ஒளி வட்டம். இந்தச் செயலி, இலவசமாகக் கிடைத்தாலும் சில சிறப்புப் பயிற்சிகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால், இந்தச் செயலி கற்றுத் தரும் பயிற்சியை மூன்று நிமிடம் நீங்கள் செய்தால், உங்களுக்கு ஆழமான தூக்கம் வரும்.

நீங்கள் உங்கள் குறிக்கோளை நோக்கிச் சில வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மனத்தைப் புண்படுத்தும் அல்லது உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் பல செய்திகள் உங்களை வந்தடையும். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, கவனம் சிதறலாம். அப்போது இந்தச் செயலி கூறும் பயிற்சிகளைச் செய்தால் கவனம் ஓரிடத்தில் குவிந்து, உங்கள் வேலை சிறப்பாக முடியும்.

உங்களுக்கு உடல்ரீதியான அல்லது வேறு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தால் இந்தச் செயலி உங்களுக்கு உடனடியாக உதவ முடியாமல் போகலாம்.

இந்த நொடியில் நாம் செய்யும் வேலையில் முழுக் கவனம் செலுத்துவதுதான் வெற்றிக்கு அடிப்படை. சில நொடிகளுக்கு, நாம் இறந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து கிடைத்த பாடங்களை அசை போடலாம். வருங்காலத்தில் நாம் பெறப்போகும் வெற்றியை எண்ணிப் பார்த்து, சில நிமிடங்களுக்கு நம் கனவுகளை ‘சார்ஜ்’ செய்துகொள்ளலாம். ஆனால், வெற்றி என்பது உங்களின் நிகழ்காலத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x