

ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் சபதம் எடுப்பதும் பின் அதை மறப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கையாக உள்ளது. நமக்குக் கைகொடுக்க இன்று தொழில்நுட்பம் கை நீட்டுகிறது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில், பல செயலிகள், புத்தாண்டு குறிக்கோளை எளிதாக அடைவதற்குப் பாதையமைத்துத் தருகின்றன.
வெற்றியின் ரகசியம்
நம் குறிக்கோளை அடைவதற்கு நிறைய உழைப்பும் திட்டமிடலும் தேவையாக உள்ளது. அந்தத் திட்டமிடலை நிறைவேற்ற நல்ல பழக்கவழக்கங்கள் தேவை. எந்த ஒரு செயலையும் இடைவிடாது தினமும் செய்யும்போது சில மாதங்களில் அந்தச் செயல் நமக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும்.
வெற்றியாளர்கள் தம் குறிக்கோளை அடையத் திட்டமிடுதலையும் தங்களை அலசி ஆராய்ந்து கொள்வதையும் தினமும் ஒரு சடங்கைப் போல் செய்கிறார்கள். வெற்றிக்கான அவர்களின் செயல்கள் அவர்கள் வாழ்வின் பழக்கவழக்கங்களாகவே மாறிவிட்டன.
உதாரணத்துக்கு நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் வேலையைத் திட்டமிடுவதைத் தொடர்ந்து செய்தீர்கள் என்றால் 60 முதல் 90 நாட்களில் அது உங்களது ஒரு பழக்கமாக மாறியிருக்கும். காலை எழுந்து நீங்கள் திட்டமிடவில்லை என்றால் உங்களுக்கு எதையோ இழந்தது போன்று இருக்கும். அன்றைய பொழுதைத் திட்டமிட்டால்தான் உங்கள் மனது திருப்தி அடையும்.
பேராசை பெரும் நஷ்டம்
உங்கள் குறிக்கோளை அடைய உங்கள் வெற்றிக்குத் தேவையான பல பழக்கவழக்கங்களைச் செயலிகள் உதவியுடன் உங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். இந்தச் செயலிகள் முழுக்க முழுக்கப் உளவியல் பழக்கவழக்க நிபுணர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு செயலைப் பழக்கமாக மாற்ற, பல உளவியல் சிக்கல்களை நாம் வென்றாக வேண்டும். சாத்தியமற்ற அளவுக்கு மிகப் பெரிய குறிக்கோளை மிகக் குறைந்த நேரத்தில் திட்டமிடுவது தோல்வியில் முடியும்.
ஊக்குவிக்கும் குரல்
எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு, முதுகில் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்க நமக்கு ஒரு குரல் தேவை. ஒரு செயலைத் தொடர்ந்து செய்யும்போது நடுவில் சில நாட்கள் நம்மால் செய்ய முடியாமல் தடங்கல் ஏற்பட்டால், அதற்காகச் சோர்ந்துவிடாமல் நம்மை யாராவது ஊக்குவிக்க வேண்டும். ஊக்குவிக்கும் குரல் இல்லை என்றால் மிக எளிதாகச் சோர்வடைந்து நம் குறிக்கோளிலிருந்து விலகிவிடுவோம்.
வெற்றியாளர்களாலும் செல்வந்தர்களாலும் தங்களுக்கு என்று காரியதரிசி வைத்துக்கொள்ள முடியும். வெற்றியின் நுழைவுவாயிலில் இருக்கும் நம்மிடம், காரியதரிசியை நியமனம் செய்துகொள்வதற்குப் பணம் இருக்காது. இங்குதான் செயலிகள் மிக அற்புதமாகப் பல உதவிகளைச் செய்கின்றன.
HabitBull (ஹாபிட் புல்) எனும் செயலி உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது. மனிதனின் பழக்கவழக்கங்களைக் கச்சிதமாக உள்வாங்கி உருவாக்கப்பட்ட செயலி அது. உலக அளவில் பலருக்கு அவர்களின் செயல்களைப் பழக்கவழக்கமாக மாற்ற உதவிய வெற்றிகரமான செயலி அது.
அடுத்த வாரம் இந்தச் செயலியைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com