Published : 05 Jan 2019 11:52 AM
Last Updated : 05 Jan 2019 11:52 AM

மூலிகையே மருந்து 38: மன அழுத்தம் போக்கும் தொட்டாற்சிணுங்கி

தொட்டாற்சிணுங்கி, அற்புதங்கள் நிகழ்த்தும் மாய மூலிகை! ஒரு மனிதன் பார்த்து வியக்கும் முதல் மாயாஜாலம் தொட்டாற்சிணுங்கியின் சிணுங்கல்! தாவரத்துக்குள் இருக்கும் உட்கடிகாரமும் பல நுணுக்கமான செயல்பாடுகளும் அதன் சுருங்கி விரியும் தன்மையைக் (Seismonastic, Nyctinastic movement) கட்டுப்படுத்துகின்றன.

பெயர்க்காரணம்: தொட்டாற்சுருங்கி, இலச்சகி, தொட்டால்வாடி ஆகிய பொதுப் பெயர்களும் வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற சிறப்புப் பெயர்களையும் கொண்டது.

அடையாளம்: தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். இதன் தாவரவியல் பெயர் ‘மைமோசா புடிகா’ (Mimosa pudica). ‘மைமோசாய்டியே’ (Mimosoideae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஐசோ-குவர்செடின் (Isoquercetin), அவிகுலாரின் (Avicularin), டானின்கள், மைமோசைன் (Mimosine), அபிஜெனின் (Apigenin) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: மிளகளவு தொட்டாற்சிணுங்கி சூரணத்தைக் கறந்த பசும்பாலில் கலந்து ஒரு வாரம் பருக, மூலநோயில் ஏற்படும் குறிகுணங்களும் தோல் நோயின் தீவிரமும் குறையும் என்கிறது சித்தர் குறிப்பு. இனிப்பு, துவர்ப்பு, கைப்பு போன்ற முச்சுவைகளின் சேர்க்கை கொண்ட தொட்டாற்சுருங்கி, ‘சுவைத் தத்துவ’ அடிப்படையில் பல நோய்களைச் சுருக்கக்கூடியது. பாம்புக்கடி போன்ற விஷ உயிரினங்கள் தீண்டும்போது, கிராமங்களில் வழங்கப்படும் முதலுதவி மருந்துகளில் தொட்டாற்சிணுங்கியும் சேர்க்கப்படுகிறது.

ஜுரத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் ரத்தத்தைத் தூய்மைசெய்யவும் கருப்பைக் கோளாறுகளை நீக்கவும் பேதியை நிறுத்தவும் பாரம்பரிய மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. காமம்பெருக்கி செய்கையுடைய இதன் வேர், ஆண்மையை விந்தணுக்களை அதிகரிக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. உடலை உரமாக்க இதன் இலைகளை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மருந்தாக: தொட்டாற்சிணுங்கி, மன நோய்களின் தீவிரத்தையும் குறைக்கும் என்கிறது ஆராய்ச்சி. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘மனச்சோர்வு’ (Depression) நோயில் தொட்டாற்சிணுங்கி சிறப்பாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது. இலைகளில் உள்ள ‘பீனாலிக்’ பொருட்கள், புண்களை விரைந்து குணமாக்கும்.

ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், ‘மைமோசைன்’ போன்ற வேதிப்பொருட்கள், புற்று செல்களை எதிர்க்கும் தன்மையுடையன. உட்கொண்ட மருந்து குறிப்பிட்ட நேரத்தில் கரைந்து வெளியேற, (Sustained release of drugs) இதன் விதைகளிலிருக்கும் ‘குளுகுரோனோசைலான்’ எனும் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு மருத்துவம்: இதன் இலைச் சாற்றைக் குழிவிழுந்த புண்களில் பயன்படுத்த விரைவில் குணம் கிடைக்கும். ஊமத்தை இலைகளைக் கொண்டு செய்யப்படும் சித்த மருந்தான மத்தன் தைலத்தோடு, தொட்டாற்சிணுங்கி இலை சாற்றைக் கலந்து வெளிப்பிரயோகமாகத் தடவ, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்கள் படிப்படியாகக் குறையும்.

மூல நோயைக் கட்டுப்படுத்த தொட்டாற்சிணுங்கி இலைகளால் செய்யப்பட்ட புறமருந்து, பதினாறாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்திருக்கிறது. தடங்கல் இல்லா உறக்கத்தை வழங்கும் மருந்தாகவும் தொட்டாற்சிணுங்கியைப் பயன்படுத்தலாம். ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைக்கவும் இது உதவும்.

தொட்டாற்சிணுங்கி, வேப்பிலை, கற்றாழை, கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை, மூல நோய்க்கான வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். இடுப்புப் பொருத்து வலி மற்றும் விதைப்பையில் ஏற்படும் வீக்கத்துக்கு இலைகளை நீரில் காய்ச்சி ஒற்றமிடலாம். இலைகளை அரைத்து மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களில் பற்றுப் போடலாம்.

இதன் இலைகளை அரைத்துத் தேங்காய் எண்ணெய்யில் குழைத்துப் பூச, ஒவ்வாமையால் ஏற்படும் தடிப்பும் அரிப்பும் குறையும். தொட்டாற்சிணுங்கி இலைகள் ஊறிய நீரைக்கொண்டு கழுவ, விரல்களுக்கு இடையில் ஏற்படும் சிரங்கின் தீவிரம் குறையும். வலிநிவாரணி, வீக்கமுறுக்கி செய்கைகள் இதற்கு இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பெருக்கி செய்கையுடைய இதன் வேர்க்கஷாயம் கல்லடைப்பைச் சரிசெய்யும்.

‘ஓடு வாயு’ எனும் குறிகுணத்துக்கு தொட்டாற்சிணுங்கியை முயலலாம் எனச் சித்த மருத்துவம் சொல்கிறது. தொட்டாற்சிணுங்கியின் பொடியைச் சர்க்கரை நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தலாம். தொட்டாற்சிணுங்கியை ஆராய்ச்சிரீதியாகத் தோண்ட தோண்டப் பல மாயப் புதிர்கள் வெளிப்படும் என்பது உண்மை. மருந்தாக அதிக அளவில் பயன்படும் தொட்டாற்சிணுங்கியை, மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக ‘வசிய மூலிகை’ என நாம் ஒதுக்கி வைத்தாலும், நம்மோடு நேசமுடன் உறவாடும் மூலிகை மருந்து இது! தொட்டாற்சிணுங்கி... முட்களுக்குள் இருக்கும் மருத்துவக் குணமிக்க பஞ்சு மெத்தை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x