

மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது உணவுக்குழாய்ப் புற்றுநோய். இந்தியாவிலும் இது மரணத்தை உண்டாக்கக்கூடிய புற்றுநோய் வரிசையில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலமான மிசோராமில்தான் இந்தப் புற்றுநோயின் தாக்கம் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் வருகிறது.
உப்பால் வரலாம் புற்று
உணவுக் குழாய் அழற்சிக்கு (ரிஃப்ளக்ஸ்) அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை, உணவுக்குழாய்ப் புற்றுநோய். ‘ரிஃப்ளக்ஸ்’ பிரச்சினையில் வரக்கூடிய பாதிப் பிரச்சினைகள் இதிலும் உள்ளன. இது வம்சாவளியாக வரக்கூடிய பிரச்சினை அல்ல. மிகவும் குறைந்த அளவில்தான் வம்சாவளியாக உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருகிறது. பிறகு எந்த வகையில் இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது?
“மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களால்தாம் இந்தப் புற்றுநோய் அதிகம் வருகிறது. இரைப்பையிலும் உணவுக்குழாயிலும் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதுதான்.
இது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுமட்டுமல்ல; பழங்களே சாப்பிடாதவர்களுக்கும் உப்பு உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உணவுப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளின் ஒன்று” என்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன்.
இந்த உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும்கூட உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் பல மடங்கு அதிகம். இதுவும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
அலட்சியம்
உணவை விழுங்குவதில் சிரமமா?
‘ரிஃப்ளக்ஸ்’ இருப்பவர்களுக்கு எப்படி நெஞ்செரிச்சல் இருக்கிறதோ அதுபோலவே உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்துவது விழுங்குதலில் உள்ள பிரச்சினைதான். புற்று வளர்வதால் உணவுக்குழாய் சுருங்கிவிடுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கடின உணவான சப்பாத்தியோ பரோட்டாவையோ சாப்பிடும்போது அது இரைப்பைக்குச் செல்லாது. தண்ணீர் குடித்தால்தான் உள்ளே செல்லும். இல்லையென்றால் அப்படியே உணவுக் குழாயிலேயே தங்கியிருக்கும். இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?
“உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். எண்டாஸ்கோப்பி மூலம் நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், என்னுடைய அனுபவத்தில் சப்பாத்தி, பரோட்டாவைச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், எளிய உணவான இட்லி, தோசைக்கு மாறிவிடுபவர்கள் ஏராளம். இட்லி, தோசையும் சாப்பிட முடியாமல் போனால், கஞ்சிக்கு மாறிவிடுவார்கள். கஞ்சியும் குடிக்க முடியாமல் போனால், நீராகாரத்துக்கு மாறிவிடுவார்கள். மருத்துவரையே பார்க்காமல் தவிர்த்துவிடுவார்கள். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இடைப்பட்ட காலத்தில் புற்று நன்றாக வளர்ந்துவிடும்.
அதனால்தான் நம் ஊரில் ஆரம்ப காலத்திலேயே உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உணவு விழுங்கக் கஷ்டப்படத் தொடங்கிய பிறகு நான்கு மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே அதிகம். இதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இரைப்பை, உணவுக் குழாய் இரண்டுக்குமே பொருந்தக்கூடியது தான்” என்கிறார் சந்திரமோகன்.
அறிகுறிகள் உஷார்
அலட்சியத்தால் மருத்துவரைச் சந்திக்காமல் தள்ளிப்போடுவதால் புற்று இதர உறுப்புகளுக்கும் பரவிவிடும். புற்றை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதால், சிகிச்சை முறையும் சிக்கலாகிவிடுகிறது. எப்போதும் மருத்துவத்தில் புற்றுநோய் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஆராய்வது வழக்கம். ஆனால், பரவிய நிலையில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்போது அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், எளிய சிகிச்சையின் மூலம் உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்த வழி இருக்கிறது.
உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு விழுங்குவதில் ஏற்படும் தொந்தரவு மட்டுமே அறிகுறி அல்ல. புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் உணவுக்குழாய், இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள்தாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகும்போதுதான் உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.
பொரித்த உணவு வகைகள், உப்பு அதிகம் கலந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள், மது, புகை ஆகியவற்றைக் கைவிட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.
குழாய் காப்போம்..!
| உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி (4 பிப்ரவரி 2018) உலக சுகாதார நிறுவனத்தின் விழிப்புணர்வு வாசகமான ‘We can, I can' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. உணவுக்குழாய்ப் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ‘இஸோ இந்தியா’ நிறுவனம் இந்தப் போட்டியை நடத்துகிறது. தமிழில் ‘நம்மால் முடியும்’ என்ற தலைப்பில் கட்டுரையை எழுதலாம். கட்டுரைப் போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஜனவரி 10-க்குள் கட்டுரையை அனுப்பிவைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@esoindia.org. |