Published : 15 Dec 2018 12:57 PM
Last Updated : 15 Dec 2018 12:57 PM

செயலி என்ன செய்யும்? 12 - ‘ஸ்லீப்பர்’ செயலிகள்

சராசரி மனிதனின்  தூக்கத்தைக் கணக்கிட்டால்,  அவன் ஆயுளில் பாதியைத் தூங்கித்தான் கழித்திருப்பான்.  நம் ஆயுள் நீடிக்கக் காரணம், தூக்கம்தான். தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன் வருகைக்குப் பிறகு, நேரடியாக நாம் தூங்கும் நேரத்தைக் குறைத்து நம் ஆயுளையும் குறைத்துக்கொண்டிருக்கிறது.

நம் தூக்கத்தைக் களவாடிய ஸ்மார்ட்ஃபோன்களின் உதவியுடனே, நம் தூக்கத்தைச் சரிப்படுத்த முடியும் என்பது ஒரு நகைமுரண்.

களவாடப்பட்ட பொழுதுகள்

ஒரு மனிதன், நிச்சயம் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.  ஆனால், நம் அன்றாட வேலை நேரம் போக, தொலைக்காட்சிக்கும் ஸ்மார்ட்ஃபோனுக்கும் நாம் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. நாம் ஒதுக்கும் நேரம் முழுவதும் நாம் தூங்குவதற்காக வைத்திருக்கும் நேரத்திலிருந்து களவாடப்பட்ட நேரங்கள்.

போதுமான நேரத்துக்குத் தூங்குவதும் அந்தத் தூக்கம் ஆழமனத் தூக்கமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். நினைவாற்றல் அதிகரிக்கம். மன நலம் பேணப்படும். திட்டமிட்டு, வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கவனம் அதிகரிக்கும். மற்றவர்கள் மீது தேவையில்லாமல் எரிந்து விழமாட்டோம். இப்படி முறையான தூக்கத்தின் பலன்கள் அதிகம். உங்களுக்குப் போதுமான தூக்கம் இல்லையென்றால், நாம் மேலே பார்த்த பலன்களுக்குப் பதிலாகப் பாதகமே மிஞ்சும்.

சர்வதேச அளவில் பிரபலமான தூக்க நிபுணர் மேத்யூ வாக்கர், ‘பொழுது சாய்ந்ததும் நாம் தூங்கப் போவது சாலச் சிறந்தது’ என்கிறார். காரணம், சூரியன் அஸ்தமித்த உடனே நாம் தூங்குவதற்குத் தேவையான மெலடானின், நம் உடலில் சுரக்கத் தொடங்கிவிடும். எனவே, அப்போது தூங்கச் செல்வதுதான் சிறந்தது. தூங்கப் போகும் நேரத்தைத் தள்ளித் தள்ளிப் போட, மெலடானின் சுரப்பது குறைந்துவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

மன அமைதியும் தூக்கமும்

நம் வாழ்வில் விளக்குகள்தான், முதலில் நம் தூக்கத்தைக் களவாடின. பிறகு தொலைக்காட்சி. இப்போது, ஸ்மார்ட்ஃபோன்.  தூக்கம் வர முதல் அடிப்படை, நம் மனது அமைதியாக இருக்க வேண்டும். மனத்தை அமைதிப் படுத்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

இங்கு நாம் பார்க்கப் போகும் செயலிகள், எப்போதாவது உங்களுக்கு மன அமைதியின்மை காரணமாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டுமே உங்களுக்குக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களுக்கு உடல்ரீதியாக அல்லது மனரீதியாக நீண்டகாலப் பிரச்சினைகள் இருந்தால், இவை உதவாது. உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.

செயலி தரும் தூக்கம்

இந்தச் செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் இலவசமாகக் கிடைக்கும்.

ரிலாக்ஸ் மெலடீஸ் (Relax Melodies)

இந்தச் செயலியில் மிகவும் மென்மையான,  மனத்தை அமைதிப்படுத்தக்கூடிய,  இசைத் துணுக்குகள் குவிந்துள்ளன.  இயற்கை ஒலிகள்  முதல் பாரம்பரிய இசைக் குறிப்புகள் வரை சேமிக்கப்பட்டுள்ளது.  இரவில் படுத்தவுடன் இந்தச் செயலியின் உதவியுடன் குறிப்பிட்ட இசைத் துணுக்கை நீங்கள் கேட்டால் உங்கள் மனம் அமைதியடைந்து, உங்கள் மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நடந்து,  உங்களைத் தூங்க வைத்துவிடும்.

ஸ்லீப் டைம் (Sleep Time)

இந்தச் செயலி உங்கள் தூக்கத்தைக் கண்காணிக்கும். அதாவது இரவில் நீங்கள் தூங்க ஆரம்பித்ததிலிருந்து காலை எழுவது வரை உங்களது தூக்கத்தின் தரத்தை இது கண்காணிக்கும். இதன் சிறப்பு, உங்கள் தூக்கத்தின் தரத்தை வைத்து, உங்களை எந்த நேரத்தில் எழுப்பினால் சரியாக இருக்கும் என்று அதுவே ‘அலாரம்’ செட் செய்துகொள்ளும். இந்த அலாரம், வேலை நாட்களில் உங்களுக்குத் தேவையில்லை என்றாலும், விடுமுறை நாட்களில் நீங்கள் தரமான தூக்கத்தைப் பெற உதவும்.

திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைப்பது போல, நம் தூக்கத்தைச் சிதைக்கும் ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடனே நம் தூக்கத்தை மேம் படுத்தும் செயலிகள்  இருப்பது, தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பயன்படுத்தினால், எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்.

Relax Melodies செயலி - https://bit.ly/1ulGrjq

Sleep Time : Sleep Cycle செயலி - https://bit.ly/TrH3XB

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x