

பிறந்த குழந்தை காற்றை உள்ளிழுத்து முழு ஆற்றலோடு ‘வீல்’ என்று பெருங்குரல் எடுத்து அழுகிறது. அந்த முதல் அழுகையில் இருந்துதான் குழந்தையின் உடல், தனித்து இயங்கத் தொடங்குகிறது.
வீரிடலில் ஆரம்பிக்கும் உடலியக்கம், இறுதியாக அடங்கும்வரை உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைத் தன்னியல்பாக வழங்கிக்கொண்டே இருக்கிறது நுரையீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலில் பெரும்பங்கு, காற்றின் வாயிலாகவே ஈடு செய்யப்படுகிறது.
நமக்குத் தாகமெடுக்கிறது, நீரைக் குடிக்கிறோம். பசிக்கிறது உண்கிறோம். சுவாசிக்குமாறு எந்த சமிக்ஞையும் நமக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தன்னுணர்வு இல்லாமல் நிமிடத்துக்குப் பதினைந்தில் இருந்து இருபது முறை சுவாசித்துக்கொண்டே இருக்கிறோம்.
தாகத்துக்குத் தண்ணீர் தராமல் தள்ளிப் போட்டுவிடலாம். பசிக்கு உண்ண ஏதுமின்றி உலகில் கோடிக்கணக்கான மக்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனால், சுவாசிக்காமல் (பயிற்சி இன்றி) இரண்டு நிமிடங்கள்கூட இருக்க முடியாது.
உடலை வளர்க்கும் காற்று
பிறந்த குழந்தையின் உடலைக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியின் லட்சத்தில் ஒரு பங்கே அளவுள்ள விந்தணுவில் இருந்து, தாய் சராசரியாக, இரண்டரை முதல் மூன்றரை கிலோ வரை வளர்த்துக் கொடுக்கிறாள். தாயின் வயிற்றிலிருந்து வெளியே தனித்து விடப்பட்ட பின்னர், உடலை வளர்த்தெடுப்பதில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை வகிப்பது காற்றுதான்.
பிறந்த நொடியில் பத்திருபது மில்லி அளவு சுவாசிக்கத் தொடங்கி முழு மனிதனாக வளர்ந்த பிறகு 1,200 மில்லி முதல் 1,800 மில்லி வரை சுவாசிக்கிறான். இயற்கையிலேயே அளவில் சிறியதான பெண் உடல், சுவாசிப்பது 800 முதல் 1,400 வரை. இந்த அளவு, விளையாட்டுப் பயிற்சியில், தீவிர உழைப்பில் ஈடுபடுவோருக்கு மாறுபடும்.
இந்த அளவுகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு 6 லிட்டர் சுவாசித்திருக்கிறோமா என்று நாம் சரி பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால், நமது சுவாச அலைவின் அளவும், நுரையீரலின் கொள்ளளவும் குறையக் குறைய நமது உடலின் இயங்கு ஆற்றல் குறைகிறது என்பதை நாம் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட ஆயுளுக்குத் தூய்மைக் காற்று
சுவாசத்தை உள்ளிழுக்கும் நேரம் குறைவாகவும், காற்று அடர்த்தியாகவும் இருக்கும். சுமார் 600 மில்லியில் இருந்து 800 மில்லி உள்ளிழுக்கிறோம். ஆனால், சுவாசத்தில் வெளியேற்ற நேரம் அதிகமாகவும் காற்றின் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். உள்ளிழுக்கும் காற்று முற்றிலும் தூய்மையானதாக இருந்தால், சுமார் 78.1 நைட்ரஜனும், கார்பன் டை ஆக்ஸைடு .033 என்ற அளவிலும் அர்கோன், மீத்தேன் போன்ற கூறுகள் மிக மிகக் குறைவான அளவிலும் உயிருக்கு ஆற்றலை வழங்கும் ஆக்ஸிஜன் எனும் உயிர் வளி 21 சதவீதமும் அடங்கி இருக்கும்.
வெளியேறும் காற்றில் அதே 78 சதவீதம் நைட்ரஜனும் மீதமுள்ளதில் மிகக் குறைவான அளவில் ஆக்ஸிஜனும் பெரும்பகுதி கார்பன் டை ஆக்ஸைடும் அடங்கி இருக்கும். புறச்சூழலில் ஏற்படும் எந்தச் சிறுமாற்றமும் உடனடியாக அது நமது சுவாசத்தையும் அதன் வாயிலாக நமது உடல் ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை விளைவிக்கிறது.
காற்றின் தூய்மையே நமது ஆயுளைத் தீர்மானிக்கிறது. மனிதன் இறக்கிற நொடியில் இருதயம் இயங்குவது நின்று, ரத்தம் ஓடாமல் உறைந்துவிடும். ஆனால் உடலுக்குள், நுரையீரலில் இருந்து காற்று உடனே வெளியேறி விடுவதில்லை. வேறு மாற்றங்கள் அடைய நேரம் எடுத்துக்கொள்கிறது உடல். இந்த மாற்றத்துக்கான நேரம் அந்த உடல் உயிர்த்திருக்கும்போது எவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததோ அதைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக, அது சுவாசித்த காற்றின் தூய்மையைப் பொறுத்து இருக்கும்.
வாழ்க்கைச் சுற்றை முழுமையாக முடித்தவர்கள் இறந்த பின் அவர்களது உடல், இனம் பிரிக்க முடியாத ஒளியை வெளிப்படுத்தும். அது அவரவர் தமது வாழும் காலத்தில் கொண்டிருந்த நிறைவைப் பொறுத்து ஓரிரு மணி நேரங்களுக்கு நீடிக்கும். சிலருக்கு ஓரிரு நாட்களுக்கும்கூட நீடிக்கலாம்.
சில பூத உடலைப் பார்த்துவிட்டு ‘மனுசன் இறந்துட்டாருன்றத நம்பவே முடியலை. அப்பிடியே தூங்குறாப்புல இருக்கு’ என்று வியந்து கூறுவதைக் கேட்டிருப்போம். காரணம், அந்த உடலுக்குள் தங்கியிருக்கும் நல்ல காற்று.
பிறந்து, உடனே இறந்துவிடுகிற குழந்தைக்கும்கூட நுரையீரலில் காற்று தங்கி இருக்கும் என்ற ரகசியத்தை 1664-ம் ஆண்டிலேயே கண்டறிந்துவிட்டார் ஒரு உடலியலாளர். இறந்தே பிறக்கும் குழந்தையின் நுரையீரலை எடுத்து நீரினுள் போட்டால் அது மிதக்கும். அப்படி மிதக்காமல் நீரினுள் மூழ்கிவிட்டதென்றால் அந்தக் குழந்தை பிறந்த பின் இறந்திருக்கிறது என்று பொருள்.
நுரையீரல் கொள்திறனை அதிகரிப்போம்
சுவாசத்தின் அளவு குறையக் குறைய, நமது மூளையின் செயல்பாட்டிலிருந்து செரிமானம் வரையிலும் அனைத்து இயக்கங்களும் திறனில் குறைவதோடு உடலின் மொத்த இயக்கமும் வேகமாகக் குறைந்துகொண்டே போகும். அதாவது நமது உயிரின் ஆற்றல் குறைந்து வாழ்நாளின் நீளமும் சுருங்கிவிடும்.
முழு வளர்ச்சி பெற்ற மனித நுரையீரலின் அளவு சுமார் இரண்டரை லிட்டர் என்றால் உயர்ந்தபட்ச சுவாசத்தின் அளவு 6 லிட்டராக இருக்க முடியும். நுரையீரலில் உள்ள நுண்ணறைகள் காற்றை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும் திறன் பெற்றவை. அதன் அளவைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக சுமார் 6 லிட்டர் அளவுக்குக் காற்றைத் தன்னில் இறுத்திக்கொள்ளும் திறனுடையது நுரையீரல்.
உடலின் ஆதாரக் கட்டுமானம் வளர்ச்சி முப்பத்திரண்டு வயதில் முழுமை பெற்ற பின்னர் நுரையீரலின் அளவு கூடுவதில்லை. ஆனால், அதன் கொள் திறனைக் கையாளாதபோது சுவாச அலைவு குறைந்துகொண்டே போகலாம்.
அன்றாட உடற்பயிற்சி மேற்கொள்வோரும், லாரிகளிலிருந்து லோடு லோடாக அரிசி மூட்டை இறக்குகிற தொழிலாளர்களைப் போன்று கடின உழைப்பு மேற்கொள்வோரும் மட்டுமே நுரையீரலின் கொள்திறனை முழுமையாகக் கையாள்கின்றனர். மற்றபடி குறைவான உடலுழைப்பை மேற்கொள்கிறவர்களின் சுவாச அளவு அதிகபட்சம் 80 சதவீத அளவுக்குக்கூட இருப்பதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு.
அதிலும் நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்லும் உடலுழைப்பும் புறச் சூழலில் காற்றின் மாசளவு அதிகரிப்பும் ஒட்டுமொத்தமாக மக்களின் சுவாசத் திறனைக் குறைத்துக்கொண்டே வருகிறது.
பாதிப்படையும் உறுப்புகள்
சுவாசத் திறன் குறைகிறபோது சுவாசம் சார்ந்த சளி, தொடர் இருமல் மூச்சிளைப்பு (ஆஸ்துமா), மூச்சிறைப்பு (வீசிங்) போன்ற பிரச்சினைகள் மட்டுமல்லாது மன அழுத்தம் முதல் உடற் சோர்வு, குழந்தைப் பிறப்பின்மை வரை பல்வேறு பிரச்சினைகளும் தோன்றக் கூடும்.
மற்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளின் தொடர் விளைவாகப் பிற உறுப்புகள் பாதிக்கப்படச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். ஆனால், காற்று மூலகமான நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு உடனடியாகவே அதன் துணை உறுப்பான பெருங்குடலிலும் புற உறுப்பான தோலிலும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதன் சேய் உறுப்பான சிறுநீரகத்தையும் உடனடியாகவே பாதிக்கும்.
சிறுநீரகம் பாதிப்புற்றால் அதனால் ஏற்படும் உடலியல் விளைவுகளைப் பின்னர் பார்க்கவுள்ளோம். நுரையீரல், காற்றின் வழியாக ஆக்ஸிஜன் எனும் உயிர் வளியை ஒவ்வொரு செல்லிலும் ஏற்றுவதன் மூலம் மட்டுமே உயிர் இயக்கம் முழுமை பெற முடியும்.
அதிகபட்ச ஆக்ஸிஜனை எப்படிப் பெறுவது? அதற்குரிய ரகசியம் என்ன?
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com