எய்ட்ஸ்: இலவச சிகிச்சையால் நிமிரும் தமிழகம்!

எய்ட்ஸ்: இலவச சிகிச்சையால் நிமிரும் தமிழகம்!
Updated on
2 min read
உலக எய்ட்ஸ் நாள்  டிசம்பர் 1

உலகில் ஏற்படும் மரணங்களுக்கான முதல் பத்துக் காரணங்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. 2005-ல் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம். ஆனால், தற்போதோ இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. ஆம்… 2017-ல் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம்தான்.

ஐ.நா. சபையின் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான கூட்டுத் திட்டத்தின் அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்தான் இது. உலகை அச்சுறுத்திவரும் எய்ட்ஸ் நோய் மரணங்கள் இப்போது குறைந்துவருகின்றன.

தற்போது உலக அளவில் 3.7 கோடிப் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 21 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். ஆனால். 2005-ல் இந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக இருந்தது. இந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 46 சதவீதம் குறைந்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

விழிப்புணர்வால் அதிகரித்த வாழ்வு

எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூலமே எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலில் நிரந்தரப் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையத் தொடங்கிய பிறகு பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு, உடல் உருக்குலைந்து, பரிதாபகரமான நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இந்த நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்குப் பரவுதல் என மூன்று நிலைகளில்தாம் பரவுகிறது.

எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டவர் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்வரை அந்த நோயின் அறிகுறிகள் எவையும் தெரியாமலேயே வாழ்வதுதான் இந்த நோயின் விசித்திரம். எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகளைப் பாதிக்கப்பட்டவர் உணரும்போது, அவர் ஆபத்துக் கட்டத்தை எட்டியிருப்பார். இதன் காரணமாகவே எய்ட்ஸ் மரணங்கள் முன்பு உலக அளவில் அதிகமாக இருந்தன. ஆனால், தொடர் விழிப்புணர்வு, எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் சிகிச்சை முறைகள் போன்றவற்றால், எய்ட்ஸ் நோய் மரணங்கள் இப்போது குறைந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளும் அதிகரித்துள்ளது.

கைகொடுக்கும் ‘ஆர்ட்’ சிகிச்சை

இதர நோய்களைப் போல எச்.ஐ.வி. தொற்றை முற்றிலும் குணப்படுத்த முடியாது.  ஆனால், ‘ஏ.ஆர்.டி.’ (ART) என்று சொல்லப்படும் ‘ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி’ எனும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உலகில் 53 சதவீதத்தினர் இந்த சிகிச்சை பெற்றுக் கூடுதல் ஆயுட்காலத்துடன் வாழ்கிறார்கள். எச்.ஐ.வி.யின் தாக்கத்தைக் குறைக்கக்கூடிய மருந்துகள் தாராளமாகக் கிடைப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்த மருந்துகள் ரத்தத்தில் கலந்துள்ள எச்.ஐ.வி. வைரஸின் எண்ணிக்கையைக் குறைக்க வழி செய்கின்றன. இந்த மருந்துகள் கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, ஒவ்வாமையைக் குறைக்க இந்த மருந்துடன் கலப்பு சிகிச்சை முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பொதுவாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு நோய் தாக்கித்தான் உயிரிழக்க நேரிடுகிறது. குறிப்பாக டி.பி. எனப்படும் காசநோயால் உயிரிழக்கிறார்கள். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சையை மேற்கொண்டாலே எந்த நோயும் அண்டாமல் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும்.

காப்பாற்றும் இலவச சிகிச்சை

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ‘முக்கூட்டு சிகிச்சை’ என்ற முறையில் இதற்கான சிகிச்சைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ‘முக்கூட்டு சிகிச்சை’ முறை குறித்து திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீமிடம் கேட்டோம்.

“எய்ட்ஸ் சிகிச்சைக்கென சென்னை தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில் இதற்கெனச் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய தலைமை மருத்துவமனைகளில் இதற்கென  எய்ட்ஸ் சிகிச்சை மையங்கள் உள்ளன. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்க மூன்று வகையான எய்ட்ஸ் கிருமி எதிர்ப்பு மருந்துகளை  அரசு மருத்துவமனையில் இலவசமாகத் தருகிறார்கள்.

aids-2jpgடாக்டர் அலீம்

அதாவது, பாதிக்கப்பட்டவரின் சி.டி. கவுண்ட்டுக்கு ஏற்ப மருந்துகள் தரப்படுகின்றன. இவர்களைத் தனியாகக் கண்காணித்து, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பைவிட எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், தமிழக அரசு பல இடங்களில் ரத்த சேமிப்பு நிலையங்களைத் தொடங்கியிருப்பதுதான். ரத்தத்தைச் சுகாதாரமாகச் சேகரிக்கும்பொருட்டு இதைத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உட்படப் பலருக்கும் அறுவை சிகிச்சைகளுக்குப் பாதுகாப்பான ரத்தம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான பாலுறவு தொடர்பாகவும் இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயாளிகளை எளிதில் தாக்கக்கூடிய காசநோயை ஒழிக்க தேசிய அளவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எய்ட்ஸ் நோயாளிக்கு இரண்டாம் நிலைத் தொற்று ஏற்படுவது குறைந்துள்ளது. அதன் காரணமாக எய்ட்ஸ் இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது” என்கிறார் அலீம்.

இந்தியாவில் 2024-ம் ஆண்டுக்குள் புதிதாக எய்ட்ஸ் நோயாளிகள் உருவாவதை 80 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொடர் விழிப்புணர்வால் மட்டுமே இது சாத்தியமாகும். எய்ட்ஸ் இல்லாத உலகைப் படைக்க ஒவ்வொருவரும் கரம் கோக்க வேண்டிய தருணம் இது.!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in