

கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவரது சிறுவயது லட்சியம். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வறுமையில் உழன்றாலும் கஷ்டப்பட்டுப் படித்து மருத்துவரானார்.
1971-ல் ‘சிகிச்சைக்கு வருபவர்கள் விருப்பப்பட்டால் இரண்டு ரூபாய் தரலாம்’ என்றே தனது மருத்துவ சேவையைத் தொடங்கினார். 44 வருடங்களாகத் தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சையை நோயாளிகளுக்கு அளித்தார். அந்த மருத்துவச் சேவை அவரது இறுதிக்காலம் வரை எந்தவிதத் தொய்வுமின்றி நடந்தது. கால ஓட்டத்தில், இரண்டு ரூபாயாக இருந்த கட்டணம் மூன்று ரூபாயாக உயர்ந்து ஐந்து ரூபாயாக நிலைத்தது.
ராயபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகச் சேவை ஆற்றுவதிலேயே கழித்துவிட்டார். இவரது சேவைக்கு உறுதுணையாக இருந்த இவரது மனைவி வேணியும் ஒரு மருத்துவரே.
தனது வாழ்நாளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். உடல்நிலை குன்றியிருந்த அவர் கடந்த புதன் அன்று இயற்கை எய்தி, ராயபுரத்தைச் சேர்ந்த மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்.