செயலி என்ன செய்யும்? 14 - புத்தரைப் போன்று வாழலாம்

செயலி என்ன செய்யும்? 14 - புத்தரைப் போன்று வாழலாம்
Updated on
2 min read

நாம் ஒருவரின் மேல் கோபப் படுகிறோம். அந்தக் கோபம் அவருடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. ஆனால், அவர் எந்த நிலையில் அந்தத் தவறைச் செய்தார் என்றோ ஏன் அப்படி நடந்துகொண்டார் என்றோ நாம் புரிந்து அவர் நிலையிலிருந்து யோசித்தால் அந்த உறவில் ஏற்பட்ட விரிசலைத் தடுத்திருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Emapathy என்பார்கள். இப்படி நம்மைச் சுற்றி நம் சமூகத்தில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் மற்றவர்களின் நிலையை உணர்ந்து கொள்வதை Social intelligence- சமூக நுண் அறிவு என்றழைக்கிறார்கள்.

சமூக நுண்ணறிவின் அவசியம்

நாம் சமூகத்தில் அனைவரின் அன்பையும் பெற்று வெற்றிகரமான மனிதராக வலம் வரவும் நம் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் வேலைகளைத் திறம்பட இணைந்து செய்யவும் இந்தச் சமூக நுண் அறிவு தேவையாக இருக்கிறது. ஒருவரின் சமூக நுண்ணறிவு எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவரால் வெற்றிகரமாகப் பிறருடனான உறவைப் பேண முடியும், பிறரின் மீது அன்பு செலுத்த முடியும், பிறரின் அன்பை வென்றுவிட முடியும், யாரையும் வெற்றிபெற வைக்க முடியும். வீட்டிலும் அலுவலகத்திலும் சமூகத்திலும் உறவுகளைப் பேண இந்தச் சமூக நுண்ணறிவு அவசியமாகிறது.

வெற்றியை நோக்கி நகர்வோம்

நாம் நிதானம் இழக்கும் தருணம் இந்தச் சமூக நுண்ணறிவுக்குப் பேராபத்து ஏற்படுகிறது. காரணத்தை அறிய முற்படாமல், தவறு செய்தவரின் நிலையை உணராமல், சற்றும் யோசிக்காமல் கோபத்தை அப்படியே வெளிப் படுத்துவதால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. சமூக நுண்ணறிவு இருப்பதால் நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்பது அர்த்தமல்ல; நிச்சயம் கோபப்படுவீர்கள். ஆனால், உங்களின் கோபம் உறவில் விரிசலை ஏற்படுத்தாது, அது அந்தச் சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டு வெற்றியை நோக்கி நகர்த்துவது என்பதாக இருக்கும்.

புத்தரின் மூளைக்கு ஒரு செயலி

சற்றும் நிதானமின்றிச் செயல்படும் மூளையால் தான் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. அதாவது, உங்களின் சமூக அறிவைப் பெருக்க உங்களின் மூளையைச் சற்றே கட்டுப் படுத்துவது அவசியம் ஆகிறது கட்டுப்படுத்தப்பட்ட மூளையைத்தான் புத்தரின் மூளை என்கிறார்கள்.

அமெரிக்காவில் பிரபல மனநல மருத்துவரான ஜான்சன் என்பவரால் எழுதப் பட்ட புத்தகம்தான் ‘புத்தரின் மூளை’. இன்று அந்தப் புத்தகத்தின் பெயரில் அவர் ஒரு செயலியையும் உருவாக்கி யிருக்கிறார். இந்தச் செயலி ஆப்பிள் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டில் இந்தச் செயலி இன்னும் உருவாக்கப்படவில்லை.

பீரிட்டு எழும் மகிழ்ச்சி

இந்தச் செயலியின் செயல்பாடு, நாம் சென்ற வாரம் பார்த்ததுபோல் புத்தரின் தியான முறையை அடிப்படையாகக்கொண்ட அறிவியல்பூர்வமான எளிதான பயிற்சிகளின் மூலம் உங்கள் மன நலனை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதே இந்தச் செயலியின் முக்கிய நோக்கம். ஒரு வேலையைச் செய்யும் போது அதிகக் கவனத்தைக் குவிக்க வும் உங்களின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் மன அமைதியை ஏற்படுத்தவும் உற்சாகத்தை அதிகரிக் கவும் இந்தச் செயலி உதவுகிறது. இதனால் மனத் துள் பீரிட்டு எழும் மகிழ்ச்சி ஒருவரை அவர் குறிக்கோளை நோக்கி உந்தி நகர்த்துகிறது.

அறிவியல் முறையி லான பயிற்சிகள்

அது மட்டுமல்லா மல், அந்தச் செயலி அளிக்கும் சிறு சிறு பயிற்சிகள், மெல்ல மெல்ல உங்களின் மூளையில் உருவாகும் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், பிற மனிதர்களின் செயலுக்குப் பின்னிருக்கும் காரணத்தையும் அவர்களைப் புரிந்து கொள்ளவும் இந்தச் செயலி அளிக்கும் பயிற்சிகள் உதவுகின்றன.

இந்தச் செயலி அளிக்கும் பயிற்சி களை மேற்கொள்வதன் மூலம் உங்களின் சமூக நுண்ணறிவை அதிகரிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், சமூக உறவுகளை நல்ல முறையில் பேணி, வெற்றிகரமான மனிதராக வலம்வர இந்தச் செயலியின் பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.

கோபத்தைக் கட்டுப்படுத்தலாம்

கோபத்தைக் கட்டுப்படுத்த இது பல பயிற்சிகளைக் கொண்டிருக்கிறது. நாம் கோபப்படுவதால் நம் உடலில் கணிசமான சக்தியை இழக்கிறோம். தொடர்ந்து கோபப்படுவதால் நம் இதயம், மூளை ஆகியவை சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. கோபம் உங்கள் உடலையும் கெடுத்து உறவுகளையும் கெடுத்துவிடுகிறது.

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்து வது என்பதற்கான பயிற்சிகளை நம் வாழ்வில் மேற்கொள்வதே இல்லை ஆலோசனைகளும் நமக்குப் பெரிதாக உதவுவதில்லை. ஆனால், இந்தச் செயலியில் இருக்கும் சில எளிதான பயிற்சிகளின் மூலம், அறிவியல்பூர்வமாகப் படிப்படியாக உங்களை உணர்ந்து உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் உங்கள் கோபத்தை எந்த இடத்தில் எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அது சொல்லிக்கொடுக்கிறது. உங்களுக்கே தெரியாமல் மெல்ல மெல்ல உங்களது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, உங்களைச் சாந்தசொரூபியாக மாற்றுவதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம், உணரலாம்.

நிம்மதியாக வாழ்வோம்

இணையச் சந்தையில் கிடைக்கும் பல செயலிகளின் உதவியுடன் புத்தரின் வாழ்வியல் பயிற்சிகளை நம்மால் எளிதாகச் செய்ய முடிகிறது. இந்தப் புத்தரின் வாழ்வியல் முறையைத் தெரிந்துகொண்டால், நம்மை அமைதிப்படுத்தி நம் உறவுகளை மேம்படுத்தி வெற்றியை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கலாம். நிம்மதியாக வாழலாம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in