மூலிகையே மருந்து 37: முறுக்கேற்றும் முருங்கை

மூலிகையே மருந்து 37: முறுக்கேற்றும் முருங்கை
Updated on
2 min read

‘ஆண்களுக்கு முருங்கை… பெண்களுக்குக் கல்யாண முருங்கை’ எனும் கிராமத்து வழக்குமொழி பிரபலமானது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ’மகளிர் நல மருத்துவர்’ கல்யாண முருங்கை! முருங்கை மரங்கள் ஆங்காங்கே காணப்படுவதைப் போல, முன்பெல்லாம் பலரது வீடுகளின் முகப்பில், நோய் போக்கும் கல்யாண முருங்கை மரங்கள் உடலுக்கு ஆதரவாக நின்றுகொண்டிருந்தன!

செந்நிறமான இதழுக்கு உவமை கூற கல்யாண முருங்கையின் மலர்கள் தகுந்தவை என இலக்கிய மாந்தர்கள் ‘கவிர் இதழ்’ எனும் பதத்தைக் கையாண்டிருக்கின்றனர். ‘அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்’ எனக் குறிஞ்சிப் பாட்டிலும், ‘அழுந்துபட்டு அலமரம் புழகு அமல்சாரல்’ என்று மலைபடுகடாமிலும் கல்யாண முருங்கை (புழகு) பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. விவசாய நிலங்களில் இயற்கையாக வேலி அமைக்கும் ஆயுதமாக முற்காலங்களில் கல்யாண முருங்கை இருந்திருக்கிறது.

பெயர்க்காரணம்: முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற வேறுபெயர்களைத் தாங்கியது கல்யாண முருங்கை. முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், ‘முள்’முருங்கை என்று பெயர். முருக்கு (பலாசம்) மற்றும் முள் முருக்கு ஆகிய தாவரங்கள், ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், வேறுபடுத்திக் காட்ட ‘முள்’முருக்கு எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

அடையாளம்: மணமில்லாத செந்நிற மான இதன் மலர்களின் அமைப்பை, சேவலின் கொண்டையோடு ஒப்பிடும் புலவர் குறிப்புகள் இருக்கின்றன. ‘இணரூழ்த்தும் நாறா மலரனையர்…’ எனும் வள்ளுவரின் குறளுக்கு உகந்ததாக இதன் மலரைக் குறிப்பிடலாம். இதன் மரப்பட்டை சற்று வெளுத்திருக்கும். மரக்கட்டையில் வலிமையிருக் காது. ஃபேபேசியே (Fabaceae) குடும்பத்தில் அங்கம் வகிக்கும் இதன் தாவரவியல் பெயர் எரித்ரினா வேரிகேடா (Erythrina variegata). எரிசோனைன் (Erysonine), எரித்ரடிடைன் (Erythratidine), ஸ்கொலெரைன் (Scoulerine), ரெடிகுலைன் (Reticuline) போன்ற தாவர வேதிப்பொருட்கள் உள்ளன.

உணவாக: மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, கல்யாண முருங்கை இலை மற்றும் சின்ன வெங்காயத்தை, அரிசி மாவோடு பிசைந்து, ’கல்யாண முருங்கை அடை’ செய்து ருசிக்கலாம். இது வளரிளம் பெண்களுக்கான சிறந்த உணவும் கூட. இதன் இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய் எண்ணெய்யின் உதவியுடன் பருப்புக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும். சிறுநீர் எரிச்சல் உண்டாகும்போது, இதன் இலைகளைப் பயன்படுத்தி சூப் தயாரித்துக் குடித்துவர, சிரமமின்றிச் சிறுநீர் வெளியேறும்.

இதன் மரத்தில் அரும்பும் மலர்களைக் குடிநீரிலிட்டு வழங்க, வயிற்றுப் புண்கள் எட்டிப் பார்க்காது. கீரைக் கடையலிலும் இதன் மலர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இலைச் சாற்றுடன் வெங்காயச் சாறு கலந்து, அரிசிக் கஞ்சியுடன் உறவாட வைத்துப் பருகப்படும் பானம், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். இருமல் மற்றும் மூச்சிரைப்பைக் குறைக்கவும் இந்தப் பானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருந்தாக: ‘எரிகிரிஸ்டாகேலின்’ எனும் வேதிப்பொருள் இருப்பதன் காரணமாக, கல்யாண முருங்கைக்கு பாக்டீரியாக்களைத் தடுத்தாட்கொள்ளும் சக்தி இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. தசைகளை இளக்கச் செய்யும் சக்தி இதன் மரப்பட்டைச் சாரங்களுக்கு இருப்பதால் தசைப் பிடிப்புகளுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும். என்புகளுக்கு வன்மை அளித்து, ‘என்பு அடர்த்திக் குறைவு’ நோயின் வருகையைத் தள்ளிப்போட இது உதவும். உடலுக்குத் தேவையான சுண்ணச் சத்தை உட்கிரகிக்கவும் பயன்படுகிறது. ’கருப்பையில் உண்டாகும் ரத்தக் கட்டிகளைப் போக்கும்’ எனும் அகத்தியர் குணவாகடக் குறிப்பு, கருப்பைக் கட்டிகள் சார்ந்து இதன் பங்குகுறித்து வெளிப்படுத்துகிறது.

வீட்டு மருந்தாக: மாதவிடாயின் போது உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்கும் சக்தி படைத்த இதன் இலைச் சாற்றை, மருந்தாகப் பயன்படுத்தலாம். விதைப் பொடியோடு பனைவெல்லம் சேர்த்து இரவில் சாப்பிட்ட பிறகு, அதிகாலையில் சிறிது விளக்கெண்ணெய் பருக, நீண்ட நாட்களாகப் பல உடல் உபாதைகளுக்கு அடிப்படைக் காரணமாகவிருந்த குடற்பூச்சிகள் வெளியேறும். இதன் வேர்ப் பட்டையை கஷாயமிட்டு குடிக்க, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனும் குறிப்பை வழங்குகிறது சித்த மருத்துவம்.

’முள்ளு முருக்கந்தான் மோதுகின்ற குன்மம்… அக்கரம்… வாய்வேக்காடு…’ எனும் பாடல், வாய்ப் புண்ணிற்கும் வயிற்றுப் புண்ணிற்கும் முள் முருங்கை சிறந்த மருந்து என்பதை எடுத்துக் கூறுகிறது. மணத்தக்காளி கீரையுடன் இதன் இலைகள் மற்றும் பருப்பு சேர்த்து கீரையாகக் கடைந்து சாப்பிட, மேற்சொன்ன பாடலில் உள்ள உண்மையை அறிந்துகொள்ளலாம்.

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு, இதன் இலைச் சாற்றோடு பனைவெல்லம் கலந்து அவ்வப்போது பருகலாம். குழந்தைப்பேறு சிக்கல்களை நிவர்த்தி செய்யும் மூலிகைக் குழுவில் கல்யாண முருங்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் கொடியிடை சாத்தியமாவதற்கு, இதை உணவுகளில் அடிக்கடி சேர்க்கலாம்.

இதன் மரப்பட்டையை வீக்கங்களில் வைத்துக்கட்டும் நடைமுறை பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு. கைப்பு கார்ப்பு சுவையுடனும் கோழையகற்றி, பித்தமகற்றி, புழுக் கொல்லி போன்ற செய்கைகளையும் தன்னகத்தே கொண்டது கல்யாண முருங்கை.

கல்யாண முருங்கை… உடலை முறுக்கேற்றச் செய்யும் கம்பீர முருங்கை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in