

அமைதி நோபல் 2018
டெனிஸ் முக்வேகே காங்கோ நாட்டைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர். ‘அற்புதங்களை நிகழ்த்துபவர்’ என்றொரு புகழ்மொழியும் அவருக்கு உண்டு. மகப்பேறு மருத்துவர் அப்படி என்ன அற்புதத்தை நிகழ்த்திவிடுவார்?
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதே இவர் செய்யும் முழுநேர அற்புதம். அதுதான் அவரது வாழ்வும்!
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் போருக்கான ஆயுதமாக மாற்றும் மனிதாபிமானம் அற்றவர்களுக்கு எதிரான அவரது ஓய்வற்றப் போராட்டம், இன்று அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
போரால் முளைத்த மருத்துவமனை
முக்வேகேயின் தந்தை ஒரு மதபோதகர். அவர் நோயாளிகளுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் செல்லும்போது தானும் கூடச் செல்வார் முக்வேகே. அந்தப் பயணங்கள்தாம் மருத்துவராக வேண்டும் எனும் லட்சியத்தை அவருக்குள் விதைத்தன.
காங்கோ, ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு. போர்கள், காங்கோவுக்குப் புதிதல்ல. 1964-ல் மக்கள் புரட்சியால் ஒரு போர் நடந்தது. 1967-ல் ஊழலுக்கு எதிராக ஒரு போர் நடந்தது. 1996-ம் ஆண்டு முதல் இப்போதுவரை அங்கு முடிவிலாப் போர் ஒன்று நடைபெற்று வருகிறது. எண்ணற்ற தங்கச் சுரங்கங்கள் காங்கோவில் உள்ளன. அவற்றைக் குறி வைத்துத்தான் அந்தப் போர் நீள்கிறது. அந்தப் போர்களின்போது, நிறையப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். இதனால் ‘உலகின் வல்லுறவுத் தலைநகரம்’ என்ற களங்கம் காங்கோவுக்கு ஏற்பட்டது. அது இன்றுவரை மாறவில்லை.
அவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் பலர், முறையான சிகிச்சையின்றி பிரசவக் காலத்தில் அவதியுறுவதைக் கவனித்த முக்வேகே, மகப்பேறு இயலைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். 1999-ல் பான்ஸி மருத்துவ மனையைத் தொடங்கினார். மகப்பேறு சிகிச்சைக்காகவே அந்த மருத்துவமனையை அவர் தோற்றுவித்தார்.
மனதை நொறுக்கிய முதல் துயரம்
“இரவு பத்து மணி இருக்கும். குழந்தைகள் தூங்கிவிட்டனர். அப்போதுதான் என் வீட்டினுள் அவர்கள் நுழைந்தனர். என் கண்முன்னே, என்னுடைய குழந்தை களையும் கணவரையும் வெட்டிச் சடலமாக்கினர். நடப்பதைக் கிரகிக்கும் முன்பே என்னை அவர்கள் வரிசையாக வல்லுறவு செய்யத் தொடங்கினர். அவர்கள் ஐந்து பேர் என்று நினைக்கி றேன். சலிப்படைந்தவுடன் என்னைத் தூக்கி வெளியே எறிந்தனர். என் வீட்டுக்குத் தீ வைத்தனர்”. டேனிஸ் முக்வேகேயால் சிகிச்சையளிக்கப்பட்ட முதல் பெண் சொன்ன வார்த்தைகள் இவை.
“அதைக் கேட்டவுடன் வார்த்தை களால் விவரிக்க இயலாத கலக்கம் எனக்குள் பரவியது. ஒருவித அச்சம் மனத்தைக் கவ்வியது. எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உடனடியாகச் செயல்பட்டே ஆக வேண்டும், அவரது உயிரைக் காப்பாற்ற, அவரது வாழ்வை மீட்டெடுக்க, துடைத்தெறியப்பட்ட அவரது கண்ணியத்தை மீட்டெடுக்க, உடலின் சேதமடைந்த பாகங்களைச் செப்பனிட நான் செயல்பட்டே தீர வேண்டும் எனும் வெறி என்னுள் தோன்றியது” என்று முக்வேகே வேதனையுடன் அந்தச் சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறார்.
உயிரைக் கேட்ட உரை
அந்தப் பெண்களின் வாழ்வைப் புணரமைக்க, தான் தோற்றுவித்த பான்ஸி மருத்துவமனையை முக்வேகே மாற்றியமைத்தார். துணிந்து கேள்விகள் கேட்டார். ஆள்பவர்கள் கையாலாகாதவர் களாக இருப்பதைச் சில நாட்களிலேயே தெரிந்துகொண்டார். உலக நாடுகளின் கவனத்தைப் பெற முயன்றார். ஐ.நா சபையில் 2012 செப்டம்பரில் முக்வேகே பேசினார்.
பெண்களின் உடலைப் பகடைக்காயாக மாற்றும் இந்த முறையற்ற யுத்தம் குறித்தும் அதைத் தடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் காங்கோ அதிபர் ஜோசஃப் கபிலாவின் ஆட்சி குறித்தும் தனது கண்டனங்களை அந்த உரையில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
அதன் விளைவு, துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் அவர் வீட்டினுள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அவருடைய குழந்தைகள் சில மணிநேரம் பணயக் கைதிகளாயினர். அவருடைய உற்ற நண்பர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து தப்பியவர், ஸ்வீடனுக்குச் சென்று பின் பெல்ஜியத்தில் குடியேறினார்.
அவர் நாடு திரும்ப, காங்கோ நாட்டுப் பெண்கள் தங்களிடம் இருந்த சொற்பப் பணத்தைச் சேர்த்து அவருக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பினர். அந்தப் பெண்களின் அன்பில் நெகிழ்ந்த முக்வேகே நாடு திரும்பினார். இன்றுவரை பாலியல் வன்முறையில் உயிர் பிழைத்த 50 ஆயிரத்துக்கும் மேலான பெண்களுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் வாழ்வை மீட்டெடுத்துள்ளார்.
தாய்மையைப் போதிக்கும் தாயுமானவன்
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து எளிதில் மீள்வதில்லை. சுய கவுரவமும் தன்னம்பிக்கையும் இழந்து தவிக்கும் அந்தப் பெண்களுக்கு நம்பிக்கையளித்து மறுவாழ்வுக்கான பாதை அமைத்துக்கொடுத்து மீண்டும் அவர்களைச் சமூகத்தில் பொருத்துவதே இவரது மருத்துவமனையின் முக்கியப் பணியாக உள்ளது.
வல்லுறவுகளால் 13 வயதிலேயே சிறுமிகள் தாயாக மாறும் அவலங்கள் காங்கோவில் சாதாரணமாக நடக்கின்றன. அந்தச் சிறுமிகளுக்குத் தாய்மையைப் போதிப்பது மிகவும் சவாலான பணி. தாய்மையைப் போதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளை வளர்த்தெடுப்பதையும் தனது கடமையாக, வாழ்வாக முக்வேகே கொண்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் காங்கோவின் எதிர்காலம். அவர்களின் மனத்தில் வெறுப்பைக் களைந்து அன்பை விதைக்க முயல்கிறார்.
அந்த அன்புக்குத்தான் இந்த ‘அமைதி!’ விருது.