மூலிகையே மருந்து 25: நலம் வளர... ‘தண்ணீர்விட்டான்!’

மூலிகையே மருந்து 25: நலம் வளர... ‘தண்ணீர்விட்டான்!’
Updated on
2 min read

ஊசி போல் சிறுசிறு மெல்லிய இலைகள்… அவற்றை ஏந்திக்கொண்டு மேலேறும் முட்கள் கொண்ட நளினமான கொடி… பூமிக்குள் மறைந்திருக்கும் விரல் வடிவக் கிழங்கு… அந்தக் கிழங்குக்குள் புதைந்திருக்கும் எண்ணிலடங்கா ஊட்டங்கள்… இந்த விவரணைகளுக்குச் சொந்தமான தாவரம்… தண்ணீர்விட்டான்!

தனித்துவமான குணாதிசயம் கொண்ட தண்ணீர்விட்டான் கிழங்கு, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் மூலிகை ‘தண்ணீர்’. உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரணத்தைச் சரிசெய்யும் தண்ணீர்விட்டான், பெண்களுக்கான சிறப்பு மருத்துவரும்கூட! பெண்களுக்கு ஏற்படும் நோய்களைக் குணமாக்கப் பயன்படுவதால், ‘ராணிகளின் மூலிகை’ என இதற்குப் பட்டம் சூட்டலாம்.

பெயர்க் காரணம்: சதாவேரி, சதாவரி, நாராயணி,  உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கும் தாவரம் தண்ணீர்விட்டான். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு.

வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை நிறைந்த கிழங்கு என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.

அடையாளம்: வெள்ளை நிறத்தில் வாசனை மிக்கப் பூக்களை உடையது தண்ணீர்விட்டான். பழங்களின் நிறம் சிவப்பு. நீண்ட விரல் வடிவில் தோற்றமளிக்கும் வெண்ணிறத்திலான கிழங்கு, நீரையும் தனக்கான உணவையும் சேமித்து வைத்திருக்கும்.

‘அஸ்பராகஸ் ரெசிமோசஸ்’ (Asparagus racemosus) என்பது இதன் தாவரவியல் பெயர். லிலியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். அஸ்பராகமைன் (Asparagamine), சதாவரின் (Shatavarin), சரசபோஜெனின் (Sarasapogenin), ரெஸிமோசைட் (Racemoside) போன்ற தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: இதன் கிழங்கிலிருந்து 50 மி.லி. சாறு பிழிந்து, 50 மி.லி. வெண்ணெய் சேர்த்து, அரை லிட்டர் பால் கூட்டி நெய்யாக உருக்கி, அதனுடன் பனை வெல்லம், தேன், திப்பிலி கலந்து செய்யப்படும் மருந்து, உடலுக்கு வலுவைக் கொடுக்கும் ஊட்டச்சத்து டானிக்.

குளிர்ச்சித்தன்மையைக் கொண்டுள்ளதால், வேனிற் காலங்களில் இதன் கிழங்கைப் பொடி செய்து, பாயச வகைகளில் சேர்த்துப் பருகலாம். உடலை வளர்க்கும் இனிப்புச் சுவையுடைய தண்ணீர்விட்டான் கிழங்கு, வெப்பக் காலங்களில் உடல் இழந்த நீர்ச்சத்தை மீட்டுக் கொடுக்கும்.

கிழங்கை உலர வைத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து பருக, சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பானங்கள் கொடுக்காத பலன்களையும் பெறலாம். ‘நீரிழிவைப் போக்கும்… வெண்ணீர்பெய் சோம நோய்…’ எனும் தண்ணீர்விட்டான் சார்ந்த சித்தர் அகத்தியரின் பாடல், நீரிழிவு நோய்க்கு இதன் கிழங்கு நல்ல மருந்து என்பதைப் பதிவு செய்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கருப்பை சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகவும் தண்ணீர்விட்டான் கிழங்கு பயன்படுகிறது. நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கும் உணவாகவும் இது பயன்படுகிறது. அதிகமாகச் சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் தண்ணீர்விட்டான் உதவும்.

மருந்தாக: கிருமிகள் இரைப்பையைத் தாக்கும்போது, அதன் மென்படலத்தின் செயல்திறனை இந்தக் கிழங்கின் சத்துக்கள் அதிகரித்து, வயிற்றுப் புண்களைத் தடுக்கும் விதம் பற்றி ஆய்வு நடைபெற்று வருகிறது. நரை, திரை, மூப்பைத் தள்ளிப்போடக்கூடிய  மருந்தாகப் போற்றப்படும் இதன் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்தும் நிறைய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.

‘எண்டமீபா ஹிஸ்டோலைடிகா’ (Entamoeba histolytica) எனும் ஒட்டுண்ணி வளர்ச்சியை இதன் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் சாரங்கள் தடுக்கின்றன. புற்றுநோய் சார்ந்து எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், புற்று செல்களின் வளர்ச்சியை இதன் கிழங்கு கட்டுப்படுத்துவது தெரிய வருகிறது. மறதியைக் குறைக்கவும் மனச்சோர்வைப் போக்கவும் தண்ணீர்விட்டான் பயன்படும்.

வீட்டு மருந்தாக: இதன் சாற்றோடு தேன் சேர்த்துக் கொடுக்க, செரிமானப் பாதையில் உண்டாகும் பிரச்சினைகள் நிவர்த்தியாகும். குழந்தை ஈன்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்க, சதாவரி லேகியம் அற்புதமான மருந்து. வெள்ளைப்படுதல் அதிகமிருக்கும்போது, உணவிலேயே தண்ணீர்விட்டான் கிழங்கைச் சேர்த்து வரலாம். தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, அமுக்கரா கிழங்கு சேர்ந்த கூட்டு மருந்து, உடலுக்கு வலுவூட்டப் பயன்படும் ‘காம்போ’!

தண்ணீர்விட்டான்… நலம் கொடுத்தான்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in