Published : 27 Oct 2018 10:42 am

Updated : 27 Oct 2018 10:42 am

 

Published : 27 Oct 2018 10:42 AM
Last Updated : 27 Oct 2018 10:42 AM

மூலிகையே மருந்து 28: ஆரோக்கியத்தின் ‘கற்பூரம்!’

28

மண் வாசனைக்கு நிகரானதொரு பிரத்யேக வாசனையை வெளிக்கொணரும் மூலிகை கற்பூர வள்ளி. மனதுக்கு உற்சாகத்தை அளித்து, வாசனையின் மூலமே பாதி நோய்களை விரட்டும் பேராற்றல்மிக்க மூலிகை இது.

தேகம், கேசம், ஆடைகளுக்கு நேரடியாக நறுமணமூட்டும் பரிமள மூலிகையாகக் கற்பூர வள்ளி முன்பு பயன்பட்டிருக்கிறது. சிறிய தொட்டி போதும், கற்பூர வள்ளி செழித்தோங்க! ‘வற்றாத மணற்கேணி போல’, அள்ள அள்ள இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.


பெயர்க் காரணம்: வாசனைமிக்க இலைகளை உடையதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.

அடையாளம்: ‘பிளக்ட்ராந்தஸ் அம்போய்னிகஸ்’ (Plectranthus amboinicus) எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்பூர வள்ளி, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. சதைப்பற்றுள்ள இதன் இலைகளில் வாசனைக்குக் குறைவிருக்காது. இலையின் விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். மெல்லிய ரோம வளரிகள் தாவரம் முழுவதும் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. நறுமண எண்ணெய்கள் (Volatile oils), கார்வாக்ரால் (Carvacrol), காரீன் (Carene), கொமாரிக் அமிலம் (Coumaric acid) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டது.

உணவாக: மழை, குளிர் காலத்தில் அனைவரது சமையல் அறைகளிலும் கோழையகற்றி செய்கையுடைய கற்பூர வள்ளியின் மணமிருந்தால், நுரையீரல் பாதை தொடர்பான நோய்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது. வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி போல, இதன் இலைகளால் செய்யப்படும் ‘கற்பூர வள்ளி பஜ்ஜி’, மழைக்கால ஸ்பெஷல்!

இலையை அவியல் செய்து சாறு பிழிந்து அல்லது இலைச்சாற்றைச் சட்டியிலிட்டு சுண்டச் செய்து, கப நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். அசைவ உணவு வகைகளைச் சமைக்கும்போது, இதன் இலைகளைச் சேர்த்துக்கொள்ள, செரிமானம் துரிதப்படுவதுடன், உணவின் சுவையும் மணமும் கூடும் என்பது சமையல் நுணுக்கம். கற்பூர வள்ளியோடு, தேங்காய், பருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து சட்னியாகச் செய்து சாப்பிடலாம்.

மருந்தாக: இதன் ‘வாலடைல்’ எண்ணெய்யில் உள்ள ‘பி-சைமீன்’ (p-cymene) ‘தைமால்’ (thymol) ஆகிய வேதிப்பொருட்கள், நோய்க் கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. இதிலிருக்கும் வேதிப்பொருட்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். அதிகக் கதிரியக்கத்தால் டி.என்.ஏ.வுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் திறன் கொண்டது இது என்று கூறப்படுகிறது.

இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கு, காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மை இருக்கிறது. இதில் உள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு, பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் வன்மை இருப்பதால், பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

வீட்டு மருந்தாக: ‘கற்பூர வள்ளியின் கழறிலை… நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே…’ எனும் தேரையர் காப்பியப் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது. கற்பூர வள்ளி இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

கற்பூர வள்ளி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்க்கலாம்.

இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும் மாலையிலும் கற்பூர வள்ளித் தேநீராகப் பருக, தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும் போதே, சிறிதளவு இலையை மென்று சாப்பிட, தொண்டையில் கட்டிய கபம் இளகும். உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் களேபரங்களைத் தடுக்க, கற்பூர வள்ளிச் சாற்றை, நீரில் கலந்து பருகலாம்.

தண்ணீரில் கற்பூர வள்ளி இலைகளைச் சிதைத்துப் போட்டு, ஆவி பிடிக்கலாம். குழந்தைகளுக்குச் சளி, இருமல் இருக்கும்போது கற்பூர வள்ளி இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவலாம். கொசுக்கள் வராமல் தடுக்கும் மூலிகைகளுள் கற்பூர வள்ளியும் ஒன்று. கற்பூர வள்ளி இருந்தால், கற்பூரம்போல ஆரோக்கியமும் ‘டக்’கெனப் பற்றிக்கொள்ளும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x