காந்தி 150: ஆகாயம்… ஆகாரம்… ஆரோக்கியம்..!

காந்தி 150: ஆகாயம்… ஆகாரம்… ஆரோக்கியம்..!
Updated on
2 min read

காந்தியின் அகிம்சைக் கொள்கை பரவலாகத் தெரிந்த அளவுக்கு, ஆரோக்கியம் சார்ந்த அவரது சிந்தனைகள் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. அவரது மருத்துவச் சிந்தனைகள், அவர் பின்பற்றிய இயற்கை சிகிச்சை முறைகள் ஆகியவை ‘ஆரோக்கியத் திறவுகோல்’, ‘ஆரோக்கிய உணவு’ ஆகிய இரண்டு தலைப்புகளில் ஆங்கிலத்தில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

அவற்றை முறையே கு. அழகிரிசாமி மற்றும் ரா.வேங்கடராஜூலு ஆகியோரின் மொழிபெயர்ப்பில், மதுரையைச் சேர்ந்த காந்திய இலக்கியச் சங்கம், தமிழில் வெளியிட்டது. அதிலிருந்து இரண்டு முக்கியச் சிந்தனைகள் இங்கே…

‘நாம் ஆகாயத்தைப் பற்றி அறிந்திருப்பது மிக மிகக் கொஞ்சம் என்றுதான் சொல்ல வேண்டும். வைத்திய சிகிச்சைக்கு ஆகாயம் எவ்வளவு தூரம் பயன்படும் என்பதைப் பற்றி நாம் அறிந்திருப்பதோ அதைக் காட்டிலும் குறைவு. பொதுவாக, ஆகாயம் என்றால் உயரத்தில் இருக்கும் ஒன்று என்றும், நமக்கு மேலே இருக்கும் நீலவிதானம் என்றும் எண்ணிக்கொள்கிறோம். ஆகாயம் மேலே இருப்பது போலக் கீழேயும் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கிறது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் என்னவென்றால் நமக்கும் ஆகாயத்துக்கும் நடுவே எந்தவிதமான தடுப்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே. வீடுகள், கூரைகள், உடைகள் என்பனவற்றின் குறுக்கீடு இல்லாமல், நம் உடம்பு ஆகாயத்தோடு தொடர்பு கொண்டதாக இருந்தால் நாம் அதிகபட்ச ஆரோக்கியத்தை அனுபவிக்கக்கூடும்.

இந்த வகையான சிந்தனையின் பயனாக ஒருவன் தன்னைச் சூழ்ந்துள்ள இடத்தை முடிந்த வரையில் திறப்பாகவே வைத்துக்கொள்வான். மேஜை, நாற்காலி போன்ற தளவாடங்களில் அவசியமில்லாதவற்றைக் கொண்டுவந்து வீட்டை நிரப்ப மாட்டான். தேவைக்குப் போதுமானபடி குறைந்தபட்ச துணிகளையே உபயோகிப்பான். திறப்பான இடத்தில் தூங்க வேண்டியதை ஒவ்வொருவரும் முக்கியமானதாகக் கருத வேண்டும்.

மேலே இருக்கும் ஆகாயத்திலிருந்து இறங்கி, நம்முள்ளும் நம்மை ஒட்டியும் இருக்கும் ஆகாயத்துக்கு வருவோம். நம்முடைய உடம்பின் தோலில் கோடிக்கணக்கான துவாரங்கள் இருக்கின்றன. அந்தத் துவாரங்களை – அவற்றினுள் இருக்கும் காலி இடத்தை அடைத்துவிட்டால், நாம் செத்துப்போய் விடுவோம். அந்தத் துவாரங்களை அடைக்கக்கூடியவாறு அழுக்கு போன்ற ஏதாவது சேர்ந்தால், அது ஆரோக்கியத்தின் சமநிலையைப் பாதிக்கும்.

அதே போல ஜீரணக்குடலையும் நாம் அனாவசியமான உணவுப் பொருட்களைக் கொண்டு நிரப்பிவிடக் கூடாது. நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறோம் என்பதையும் அறியாமலேயே அடிக்கடி சாப்பிட்டு விடுகிறோம். அதனால் ஏகதேசமாக வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்று பட்டினி விரதம் இருப்பது நல்லது.

நாள் முழுவதும் பட்டினி கிடக்க முடியாவிட்டால், பகலில் ஒரு வேளைச் சாப்பாட்டையோ இரண்டு வேளைச் சாப்பாட்டையோ சாப்பிடாமல் இருந்துவிட வேண்டும். காலியிடத்தையே இயற்கை இடைவிடாது விரும்புகிறது. அதற்கு, நம்மைச் சுற்றியுள்ள மிகப் பரந்த காலியிடமே நிரந்தரமான சான்று’.

‘மீன் சாப்பிடுகிறவர்களுக்கு மீன் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது சரி எனில், மீன் சாப்பிடுகிறவரும், அவருக்கு மீன் கிடைக்கும்படி செய்பவரும் ஹிம்சையைச் செய்ததாகாதா?

இருவரும் ஹிம்சை செய்பவர் களேயாவர். இது போலவே காய்கறிகளைத் தின்பவரும் ஹிம்சை செய்பவர்களே. மீன் உண்கிறவனைவிட, அவன் மீன் உண்ணக் கூடாது என்று நிர்பந்தம் செய்கிறவன் அதிகமான ஹிம்சையைச் செய்பவனாகிறான். நிர்பந்தம் செய்வது மனிதத் தன்மையற்றது. மீன் சாப்பிடுகிறவரை, மீன் சாப்பிடலாம் என்று அனுமதிப்பது ஹிம்சை என்று நான் கருதவில்லை.

ஒரு சமயத்தில் ஒரே ஒரு தானியத்தை மட்டுமே உபயோகியுங்கள். கறிகாய், பழங்கள் ஆகியவற்றுடன் சப்பாத்தி, சாதம், பருப்புகள், பால், நெய், வெல்லம், எண்ணெய் முதலியவற்றைச் சாதாரணமாகச் சேர்த்துக் குடும்பங்களில் உபயோகிக்கிறார்கள். இந்தச் சேர்க்கை தேக ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதது என்று நான் கருதுகிறேன்.

மேலும், சாப்பிடும் தானியம் நீர் கலந்ததாக இருக்கக் கூடாது. உலர்ந்ததாக, குழம்பு ஊற்றிக் கொள்ளாமல் சாப்பிட்டால் பாதியளவு தானியமே போதுமானது. வெங்காயம், காரட், சிவப்பு முள்ளங்கி, கீரைகள், தக்காளி ஆகியவற்றைப் பச்சையாகக் கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடுவது நல்லது.

தித்திப்புப் பலகாரங்களை அடியோடு விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாகச் சிறிய அளவாக வெல்லத்தையோ சர்க்கரையையோ பாலுடனோ ரொட்டியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்’.

- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தொகுப்பு: ந.வினோத் குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in