Published : 20 Oct 2018 11:56 AM
Last Updated : 20 Oct 2018 11:56 AM

செயலி என்ன செய்யும்? 04 - பிடி பிடி பிக்காச்சுவைப் பிடி

பொது இடங்களில் யாராவது ஸ்மார்ட்ஃபோனை பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தால், அது ஏதோ முக்கியமான வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் ‘போக்கிமான்’ விளையாடிக் கொண்டிருக்கச் சாத்தியங்கள் உண்டு. 

‘இந்தப் பிள்ளைகள் எப்போது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடு கிறோம் என வீடே கதியாகக் கிடக்கிறார்கள். வெளியே போய் விளையாடுவதே இல்லையே’ எனப் பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். அவர்கள் கவலையை தீர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட வீடியோ கேம்தான் ‘போக்கிமான் கோ’ (Pokemon Go).  இந்த வீடியோ கேமை ஸ்மார்ட்ஃபோனில் விளையாடும் பிள்ளைகள் ஊரெல்லாம் ஓடியாடி விளையாடும் கண்கொள்ளாக் காட்சியைக் காண்பீர்கள். என்ன… அப்படி விளையாடுவதே சில நேரம் வினையாவதும் உண்டு!

நிஜமாக ஒரு கற்பனை உலகம்

சில காலத்துக்கு முன்னர், மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணினி விளையாட்டுகள் வந்துகொண்டிருந்தன. இப்போது ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ எனும் மெய்யும் நிகரும் ஒன்றிணையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு விளையாட்டுதான் ‘போக்கிமான் கோ’. அதாவது, நாம் பார்க்கும் உண்மைக் காட்சியைக் கணினி மென்பொருள் உதவியுடன் மேம்படுத்திக் காட்டுவதுதான் ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’.

உதாரணத்துக்கு, நீங்கள் கடற்கரையில் இருந்துகொண்டு, கடலைப் படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது  உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ‘ஆக்மென்டட்’ மென்பொருள் உதவியுடன், அந்தக் கடலில் டைட்டானிக் கப்பல் மிதந்து வருவதைப் போன்ற காட்சியை உருவாக்கலாம். ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் ஜிபிஎஸ், ஒலி, ஒளி உதவியுடன் இந்தக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக மேம்படுத்தலாம். அதையே வீடியோ கேமாக மாற்றினால்?

‘போக்கிமான் கோ’ அப்படி ஒரு விளையாட்டுதான். ஆனால் இந்த வீடியோ கேமை விளையாடும்போது சில  ‘அப்டேட்’டுகளுக்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டும். 

பிக்காச்சுவை சேகரி… பாயின்ட்டுகளைப் பிடி..

இது எளிதான விளையாட்டுதான்.  ‘பிக்காச்சு’ எனும் கற்பனை விலங்கை நீங்கள் பிடிக்க வேண்டும். பிக்காச்சு எங்கு கிடைக்கும்? சாதாரண வீடியோ கேம் என்றால் எல்லம் உங்கள் திரையிலேயே நிகழும். ஆனால் இது ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ என்பதால், நிஜ உலகிலேயே இந்தக் கற்பனை விலங்கைத் தேடிப் பிடிக்க வேண்டும். ஆம்… பிக்காச்சு உங்கள் வீட்டின் சமையற்கட்டில் இருக்கலாம். பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் பூங்காவில் இருக்கலாம். ஷாப்பிங் மாலில் இருக்கலாம், கோயில்களில் இருக்கலாம்!

இந்த விளையாட்டை வடிவமைத்தவர்கள் ஒவ்வொரு நாட்டின் புவியியல் தகவல்களின் அடிப்படையில்  போக்கிமான்களைச் சில இடங்களில் அரூபமாக உலவ விட்டிருப்பார்கள். அந்த இடத்துக்கான ஜிபிஎஸ் தகவல்களைக்கொண்டு அங்கு இருக்குமாறு நிரலியை எழுதி இருப்பார்கள். நீங்கள் சரியாக உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் செயலியை இயக்கினால், அது இணைய உதவியுடன் போக்கிமான் சர்வர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் ஜிபிஎஸ் தகவலையும் நிறுவனக் கணினித் தகவலையும் பொருத்தி அங்கு பிக்காச்சுவை உங்கள் விளையாட்டில் கற்பனையாகக் காட்டும். நீங்கள் அதைப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். சோலி முடிந்தது. நீங்கள் விளையாட்டில் பிக்காச்சுவைச் சேகரிக்கச் சேகரிக்க உங்களுக்குப் புள்ளிகள் சேரும்.

உடலுக்கு நல்லது..?

இந்த கேம் வந்த புதிதில் பூங்காக்களில் பிக்காச்சுவைப் பிடிக்க வந்தவர்கள் கூட்டத்தில் சில பூங்காக்கள் தடுமாறின. இப்போது இதற்கான ‘கிரேஸ்’ கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாலும், இந்த கேமை மிகவும் விரும்பி விளையாடுபவர்கள், பொது இடங்களில் எங்கேயாவது பிக்காச்சு பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இந்த விளையாட்டு, உண்மையில் உங்கள் பிள்ளைகளை ஓடியாடி விளையாட வைக்கும். வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் பல இடங்களுக்குச் செல்ல வைக்கும். இதை அவர்கள் விளம்பரப்படுத்துவதே ‘எக்ஸர்ஸைஸ் கேம்’ என்றுதான்.

பிக்காச்சுவால் வரும் சிக்கல்கள்

‘பிக்காச்சு பிடிக்கிறேன்’ என்று பிள்ளைகள் ரோட்டில் ஸ்மார்ட்ஃபோனைப் பார்த்தப்படி ஓடுவதும், பெற்றோர் உதவி இல்லாமல் எங்காவது போய் தொலைந்துவிடவும் வாய்ப்பிருகிறது.

அமெரிக்கக் காவல்துறையினர், இந்த விளையாட்டை விளையாடுபவர்களைத் திசை திருப்பி, பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது. இதற்காகப் பல கொள்ளைக் கும்பல்கள் இந்த விளையாட்டில் நுழைந்து, குறிப்பிட்ட நபரைப் பின் தொடர்ந்து அவர்கள் பிக்காச்சுவைத் தேட வெளியே செல்லும்போது வீட்டில் திருடி யிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த கேமை விளையாடும்போது ஸ்மார்ட்ஃபோனில் மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதால், மிக வேகமாக பேட்டரி காலியாகிவிடும். அப்படி வெளியே விளையாட்டு ஆர்வத்தில்  போன பிள்ளைகள், பேட்டரி காலியாகி வழி தெரியாமல் தவித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

உங்கள் பிள்ளைகள் போக்கிமான் விளையாடுகிறார்கள் என்றால் முடிந்த அளவு அவர்களுடன் நீங்களும் விளையாடி, அவர்கள் போகும் இடங்களுக்குச் செல்லுங்கள்.

ஒருவேளை நீங்கள் அவர்களுடன் செல்ல முடியாத நிலையிருந்தால், அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். சாதாரணமாக நண்பர்களுடன் விளையாடச் செல்வது என்பது வேறு. போக்கிமான் விளையாடியபடி செல்வது வேறு. இரண்டாவதில் ஆபத்துகள் அதிகம்.

இந்த விளையாட்டை சைக்கிள், பைக் ஓட்டும்போது விளையாட அனுமதிக்காதீர்கள். இந்த விளையாட்டு சார்ந்து அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்கள்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x