

சமீபத்தில் சென்னை வேளச்சேரியில் இளம்பெண் ஒருவர், தனது இரண்டு மாதக் குழந்தையைக் கொன்று ஏரியில் வீசியதாக வந்த செய்தியைக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அவர் சொன்ன காரணம் பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கலாம். குழந்தை, தன் மார்பில் பால் குடிக்கும்போதெல்லாம் வலி ஏற்பட்டதாகவும், சம்பவத்தன்று தனக்கு ஏற்பட்ட அதிக வலியில் குழந்தையை அடித்ததில் அது இறந்துவிட்டதாகவும், அதை மறைப்பதற்கே ஏரியில் வீசிவிட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதற்கு வேறு பின்னணியும் இருக்கலாம். ஆனால் இதுபோன்று, அம்மாக்களே, தங்களின் பச்சிளம் குழந்தைகளைக் கொல்லும் செய்தியை கேள்விப்படும் ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு கேள்வி எழக்கூடும். ‘தான் பெற்ற குழந்தையைக் கொல்ல ஒரு தாய்க்கு எப்படி மனம் வருகிறது?’ என்பதுதான் அது.
அப்படி ஒரு தாயால் செய்ய முடியுமா என்று கேட்டால், மனநல மருத்துவத்தின் அடிப்படையில் ‘ஆம்’ என்று நிச்சயமாகக் கூற முடியும். இதுபோன்ற சிசுக் கொலைகள் ‘இன்ஃபான்டிசைடு’ (Infanticide) என்று அழைக்கப்படுகின்றன.
ஹார்மோன் மாற்றங்களால் திகைப்பு
ஒரு பெண்ணுக்கு அதிக அளவில் உடல், மன அழுத்தத்தைத் தரக்கூடிய பருவங்களில் ஒன்று, பேறுகால பிற்பகுதி (postpartum). குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு வாரங்கள் வரையிலான நாட்கள்தான் இந்தக் காலம். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல், மனநிலை மாற்றங்கள் சீரடைந்து, கர்ப்பத்துக்கு முன் இருந்த நிலையை அடையும் காலம் இதுதான். சிலருக்கு இது ஆறு மாதம் வரைக்கும் நீடிக்கும்.
ஏற்கெனவே நிகழ்ந்த ஹார்மோன் மாற்றத்தால், பெரும்பாலும் எல்லாப் பெண்களின் மனநிலையிலும் இந்தக் காலகட்டத்தில் சிறிதளவாவது மாற்றம் ஏற்படும். ஒரு சிலர் இதிலிருந்து எளிதில் மீண்டு விடுவார்கள். சிலருக்கு மனத்தளவில் ஏற்படும் மாற்றங்கள், மனநோய்களாக உருவெடுக்கும். இந்த ஹார்மோன் மாற்றங்களோடு, ‘தாய்’ என்ற புதிய ஸ்தானம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு, திகைப்பு, ஒரு புதிய உயிர் தன்னை மட்டுமே நம்பியுள்ளது என்ற கூடுதல் சுமை, தூக்கமின்மை ஆகியவை தாயின் மன அழுத்தம் அதிகரிக்கக் காரணங்களாக அமைகின்றன.
அரவணைப்பு தடுக்கும் மனநோய்
இந்தச் சூழ்நிலையில் கணவன், குடும்ப நபர்களால், உடல் மற்றும் உளவியல்ரீதியான அரவணைப்பு கிடைக்கும் பெண்கள் லேசான பாதிப்புடன் சீக்கிரமாகவே சகஜ நிலைக்கு வந்துவிடுவார்கள். போதிய ஆதரவு கிடைக்காதவர்கள், ஏற்கெனவே ஏதேனும் மனநோய்க்கு ஆளானவர்கள், ரத்த உறவுகளில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பெண்கள், முழுவீச்சிலான மனநலப் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
பேறுகாலப் பிற்பகுதியில் ஏற்படும் மனநோய்கள் பெரும்பாலும் முதன்முறையாகக் கர்ப்பமானவர்களுக்கு ஏற்பட சாத்தியமுள்ளது. ஏற்கெனவே முதல் குழந்தை பிறந்த பின்பு பாதிக்கப் பட்டவர்கள், இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பாதிக்கப்பட அதிக சாத்தியம் உண்டு.
சேய் அழுதால் அவள் அழுவாள்
சுமார் 40 முதல் 70 சதவீதப் பெண்கள் ‘பேபி புளூ’ என்றழைக்கப் படும் லேசான மன அழுத்தப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தூக்கமின்மை, எளிதில் உணர்ச்சி வசப்படுதல், அழுகைக்கு உள்ளாதல் போன்றவை இதன் அறிகுறிகள். சிலர் குழந்தை அழும்போது தானும் சேர்ந்து அழும் அளவுக்குப் பலவீனமாக இருப்பார்கள். இந்த ‘பேபி புளூ’ என்பது அதிகப்பட்சம் 2 வாரங்கள் மட்டும் காணப்படும். குடும்ப நபர்களின் கனிவான ஆதரவு மற்றும் ஆலோசனைகள் கிடைத்தாலே சரியாகிவிடுவார்கள்.
ஆனால், மன அழுத்த நோய் என்பது பல மாதங்கள் வரை நீடித்து, குழந்தையைச் சரியாகக் கவனிக்க இயலாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எப்போதும் குழம்பிய மன நிலையில் காணப்படுதல், சம்பந்தமில்லாமல் பிதற்றுதல், காதில் மாயக்குரல்கள் கேட்பது, குழந்தையை நாம் சரியாகக் கவனிக்கவில்லை அல்லது இதை வளர்ப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற குற்றவுணர்வு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
தனது உடல் உபாதைகளுக்கு இந்தக் குழந்தைதான் காரணம் என்ற எண்ணம் ஏற்படும்போதோ குழந்தை எதற்காக அழுகிறது என்ற புரிதல் இல்லாமல், அதன் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாத நிலையிலோ இவர்கள் குழந்தையை லேசாக அடிப்பது முதல் கோபத்தில் தூக்கி எறியும் மனநிலைவரை தள்ளப்படுவார்கள். சில நேரத்தில் குழந்தையைக் கொல்லும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களும் ஏற்படும்.
இது சமூகப் பிரச்சினையும்தான்!
குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் நிகழும் பெரும்பாலான சிசுக்கொலைகளும் தற்கொலைகளும் மனநோய்களால்தாம் ஏற்படுகின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது வெறும் மனநலப் பிரச்சினை மட்டுமல்ல; சமூகப் பிரச்சினையும்கூட. குழந்தை வளர்ப்பிலும், உளவியல்ரீதியாகவும் கணவன், குடும்ப நபர்களின் ஆதரவு, போதிய அளவு தூக்கம் போன்றவை மட்டுமே இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் பெருமளவு குறைக்கும்.
‘பச்சை உடம்பைப் பேய் பிடிச்சிடுச்சு’ என்ற மூடநம்பிக்கையில், சிகிச்சைக்கு வராமல், காலம் தாழ்த்தும் பழக்கம் இன்னும் நமது நாட்டில் இருந்து வருகிறது. இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும்போது மனநல மருத்துவரின் உதவியை நாடத் தயங்கக் கூடாது. மனநல சிகிச்சைகள், சிசுக்கொலைகள் தற்கொலைகளைத் தடுப்பதோடு பேறுகால பிற்பகுதியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
தாய் – சேய் நலமாகட்டும்!
கட்டுரையாளர், மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com