Published : 06 Oct 2018 11:23 AM
Last Updated : 06 Oct 2018 11:23 AM

செயலி என்ன செய்யும்? 02 - ‘இன்ஸ்டா’ புகழுக்கு இன்ஸ்டாகிராம்?

நம் வாழ்வின் அழகிய தருணங்களை அப்படியே பதிவு செய்பவை, ஒளிப்படங்கள். ஒளிப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்று நம் முன்னோர்கள் ஒளிப்படமே எடுக்காமல் இருந்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருப்போம். ஆனால் இன்று, நம் ஸ்மார்ட்போன் உதவியுடன் அந்தத் தருணங்களை உடனுக்குடன் பதிவு செய்வது மட்டுமல்லாமல், நம் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்கிறோம்.  அந்த ஒளிப்படத்தை அற்புதமாக மெருகேற்றவும் செய்யலாம். 

இப்படி நம் ஒளிப்படங்களை அற்புதமாக்கும் செயலிதான் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram). ஆனால், நம் முன்னோர்கள் நினைத்ததுபோல, ஒளிப்படங்கள் நம் ஆயுளைக் குறைக் கின்றனவோ என்ற சந்தேகம் இந்தச் செயலியின் வருகைக்குப் பின்னர் எழத் தொடங்கியுள்ளது.

அழகான ஒரு இன்ஸ்டாகிராம் ஒளிப்படத்துக்காக ஏற்பட்ட மரணங்கள்  எண்ணில் அடங்காதவை. ஒரு செல்ஃபிக்காக ஒரு நொடியில் நடந்த மரணத்தைவிட, இன்ஸ்டாகிராமில் அழகான உடல் தோற்றத்துக்காக நடக்கும் மரணங்கள் அதிகமானவை. குறிப்பாக, பதின் வயது இளைஞர்களின் மரணங்கள்.  பட்டினி கிடந்து, போதிய ஊட்டச்சத்து இல்லாமல், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல், இளைஞர்கள் மரணமடைவதை என்னவென்று சொல்வது?

படங்களை மெருகேற்றும் வசதி

2010-ல் தொடங்கப்பட்ட  இன்ஸ்டாகிராமின் முக்கியச் செயல்பாடு, உங்கள் ஒளிப்படங்கள் அல்லது மிகச் சிறிய காணொளிகளைப் பகிர்வதுதான். இதில் உங்களைப் பின்தொடர்பவர்களும், நீங்கள் பின்தொடர்பவர்களும்  பரஸ்பரம் ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அப்படிப் பகிரும் ஒளிப்படங்களை ‘லைக்’ செய்யலாம்,  ‘கமெண்ட்’ செய்யலாம். உங்கள் ஒளிப்படங்களை, குறிப்பிட்ட ஹேஷ்டேக்கைக் கொண்டு நீங்கள் தொகுக்கவும் முடியும்.

இந்தச் செயலி, உங்கள் படங்களை மேம்படுத்த பல வசதிகளைத் தருகிறது. குறிப்பாக,  ‘ஃபில்டர்’ எனும் வசதியைக்கொண்டு, சாதாரணமாக இருக்கும் உங்கள் ஒளிப்படத்தை சிறப்பாக மேம்படுத்தலாம்.

செயலிக்காக ‘சர்ஜரி..!’

இந்தச் செயலி, ஃபேஸ்புக் நிறுவனத்தினுடையது. ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர், ஆப்பிள் ஐ ஸ்டோர் ஆகியவற்றில் இலவசமாகக் கிடைக்கும். உங்கள் மின்னஞ்சல் அல்லது ஃபேஸ்புக் உதவியுடன் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கான தனிக் கணக்கைத் திறக்கலாம். இன்ஸ்டாகிராமை, ஸ்மார்ட்போனில் மட்டுமல்லாமல் உங்கள் கணினி உதவியுடனும் பார்க்கலாம். ஆனால், உங்கள் செயலியில் இருந்து மட்டுமே, படங்களைப் பதிவேற்ற  முடியும். வலைத்தளத்தில் ஒளிப்படங்களைப் பார்க்கலாம் லைக் செய்யலாம் அல்லது கமெண்ட் போடலாம்.

இந்தச் செயலியைப் பயன்படுத்த, குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் இல்லை.  இதை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் பதின்ம வயது இளைஞர்கள்தாம்.  உலக அளவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் செயலி இது.

இதில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்லச் சேட்டைகளைப் பகிர்கிறார்கள். இளைஞர்கள் தங்களின் அன்றாடச் செயல்களைப் பகிர்கிறார்கள்.  தாங்கள் உண்ணும் உணவு வகைகளைப் பகிர்கிறார்கள்.  ஒரு படி மேலே போய்த் தங்கள் அந்தரங்கத்தையும் பதிவிட்டு விடுகிறார்கள். இதில் மிக சோகமான செய்தி, இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அழகாகத் தோன்றுவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதுவரை செல்கிறார்கள் என்பதுதான்.

பாதிப்புகள் என்ன?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளைஞர்களை ஆய்வு செய்ததில், அவர்கள்  இன்ஸ்டாகிராமை ஒரு விளையாட்டுப் போலவும், அந்த விளையாட்டில் யார் அதிக லைக்குகள், கமெண்ட்டுகள் வாங்குகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று நினைப்பதாகவும் கூறினார்கள். அதிகமான லைக், அதிகமான கமெண்ட்டுக்காக உங்கள் வீட்டுப் பிள்ளை கள், திடீரெனத் தனது அரைகுறை நிர்வாணப் படத்தைப் பகிர்ந்துவிட்டால் என்ன செய்வது?

பொதுவாக, இந்தச் செயலியிலிருந்து மற்றொருவரின் ஒளிப்படம், வீடியோக்களை யாரும் தரவிறக்கம் செய்ய முடியாது.  கொஞ்சம் பணம் செலவு செய்து, சில செயலி களை வாங்கி, ஸ்மார்ட்போனில் பதிந்து உங்கள் கணக்கிலிருந்து படங்களைப் பிறர் தரவிறக்கிவிடுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

இப்போதெல்லாம், மாணவர்களைத் தேர்ந்தெடுக்க, பல கல்லூரிகள், அந்த மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளைப் பார்த்துவிட்டுத்தான் தங்கள் கல்லூரிகளில் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை  முடிவு செய்கின்றன. ஏற்கெனவே அமெரிக்காவின் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெகு சீக்கிரம் இது இறக்குமதியாகிவிடும். ஆகவே, பள்ளியிலிருந்து கல்லூரிக்கும் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள்... உஷார்!

இன்ஸ்டாகிராமில் பதியப்படும் படங்கள், வீடியோக்களை ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலும் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சொல் ‘#Me’ என்பதுதான்.  அதாவது, ‘நான்’. நான், எனது, என் அழகு, என் செல்ஃபி என்பது மாதிரியான பகிர்வுகள், அந்தப் படங்களுக்குரிய இளைஞர்களைச் சுயமோக மனநிலைக் கோளாறுக்குத் தள்ளிவிடும் சாத்தியங்கள் உண்டு.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

ஒருவேளை உங்கள் பிள்ளைகள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தினால், நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்கள் எந்த மாதிரியான படங்களைப் பகிர்கிறார்கள், அவர்களுக்கு எந்த மாதிரியான கமெண்ட்டு கள் வருகின்றன என்பதைக் கவனியுங்கள்.

உங்கள் பிள்ளைகள் செய்யும் சமூகப் பொறுப்புமிக்க வேலைகள், அவர்கள் படிக்கும் புத்தகங்கள், அவர்கள் எடுத்த இயற்கைக் காட்சிகள் போன்றவற்றைப் பகிர ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்களின் சமூக மதிப்பு உயரும். அவர்களால் தங்களுக்கு நிறைய பலன்கள் உள்ளன என்பதால் கல்லூரிகளும் அவர்களை விரும்பும். எனவே இன்ஸ்டாகிராமை மூடிவிட்டேன் என்பதை விடவும் அதை நேர்மையாகப் பயன்படுத்துகிறேன் என்பது தான் வருங்கால வெற்றியின் அடிப்படை!

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x