

நான் அச்சு ஆபீஸில் வேலை செய்கிறேன். கை விரல்களிலும் பாதங்களிலும் தோல் உறிகிறது. அரிக்கிறது. தண்ணீர் பட்டால் எரிச்சல் ஏற்படுகிறது. அலர்ஜியாக இருக்கலாம் என நினைத்துப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்தேன். பலன் இல்லை.
சமீபத்தில் ஒரு டாக்டரிடம் காண்பித்தபோது, ‘ஜிங்க் சத்துக் குறைபாடு காரணமாக இது வருகிறது சொன்னார். அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். ‘ஜிங்க்’ குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அதன் அவசியத்தைப் பற்றி விவரமாகச் சொன்னால், என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- ஆர். சந்திரமோகன். காஞ்சிபுரம்.
நமக்குத் தேவைப்படுகிற பலதரப்பட்ட தாதுச் சத்துகளில் துத்தநாகம் (Zinc) முக்கிய மானது. நம் உடல் வளர்ச்சி, மூளை நரம்பு மண்டல வளர்ச்சியை நிர்ணயம் செய்வதில் மற்ற சத்துப்பொருட்களுடன் துத்தநாகத்தின் பங்கு அதிகமுண்டு. இதனால் ‘அறிவுசார்ந்த தாதுச்சத்து’ (Intelligent mineral) என்று இதை அழைப்பதுண்டு.
உடல் செல்கள் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி அடைவதற்கு துத்தநாகம் பெரிதும் தேவைப்படுகிறது. முக்கியமாக, செல்களில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறுகள் மிகவும் சரியாக உற்பத்தியாக வேண்டுமானால், துத்தநாகமும் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். செரிமானத்துக்கு உதவும் பல நொதிகளின் உற்பத்திக்குத் துணைப்பொருளாக இந்தத் தாது தேவைப்படுகிறது.
சருமம் இயல்பாக வளர்வதற்கு துத்த நாகம் தேவை. உடலில் காயங்கள், புண்கள் ஏற்படும்போது அவற்றைக் குணப்படுத்த உதவுவதும் துத்தநாகமே. நாக்கில் சுவையை உணர்த்தும் சுவை மொட்டுக்களின் பணிக்கும் சுவை நரம்புகளின் பணிக்கும் இந்தத் தாது தேவை. உமிழ்நீரில் உள்ள ‘கஸ்டென்' (Gusten) எனும் புரதம் உற்பத்தியாவதற்கு இது உதவுகிறது. இந்த கஸ்டென் புரதம் சுவையை உணர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, உணவின் சுவையை அறிய வேண்டுமானால் துத்தநாகம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதுபோல் உணவின் வாசனையை உணர்வதற்கும் இது துணைபுரிகிறது.
தலைமுடி, நகங்களின் வளர்ச்சிக்கு துத்தநாகம் தேவைப் படுகிறது. தலைமுடி உதிராமலும், நகங்கள் உடைந்துவிடாமலும் பாதுகாப்பது துத்தநாகம் செய்யும் முக்கியப் பணிகளில் ஒன்று. இன்சுலின் ஹார்மோன், கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் சுரக்கப்படுவதற்கும் சேமித்து வைக்கப்படுவதற்கும் இது தேவைப்படுகிறது.
இத்தனைக்கும் மேலாக துத்தநாகம் செய்யும் மிக முக்கியமான பணி எதுவென்றால், மனித இனவிருத்திக்கு உதவுவதுதான். இது ஆண்களுக்கு விந்தணுக் களைச் சுரக்கின்ற விரைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. துத்தநாகம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கையும் சரியாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் தந்தை ஆக முடியும்.
எவ்வளவு தேவை? எந்த உணவு தேவை?
நமக்குத் தினமும் 10 மில்லி கிராமிலிருந்து அதிகபட்சமாக 20 மில்லி கிராம்வரை துத்தநாகம் தேவை. நாம் உண்ணும் பல்வேறு தானியங்களிலும், காய்கறிகளிலும், கடல் உணவிலும் இது உள்ளது. அரிசி, கம்பு, கோதுமை, சோளம், மக்காச்சோளம், முந்திரிப் பருப்பு, வாதாம்பருப்பு, தேங்காய், எண்ணெய் வித்துகள், பால், முட்டை, பாலாடைக் கட்டி, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மீன், நண்டு, ஈரல் பச்சிலைக் காய்களில் நம் தேவைக்கு இது உள்ளது.
இன்னும் குறிப்பாகக் கூறினால், பசலைக் கீரை, வெங்காயம், சோயாபீன்ஸ், அவரை, துவரை, கொத்தமல்லி, வேர்க்கடலை, கொத்துக்கடலை, பூசணி, காளான் போன்ற வற்றில் இது மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்று மாற்றி ஒன்றைத் தினசரி உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டால், இது நம் தேவைக்குக் கிடைத்துவிடும்.
குறைந்தால் என்ன செய்யும்?
துத்தநாகம் குறையும்போது சருமம் வறட்சி அடையும். அடிக்கடி சருமத்தில் புண்கள் உண்டாகும். சருமத்தின் கருப்பு நிறம் அடர்த்தியாகும். சருமம் அரிக்கும். பாதங் களில் வெடிப்பு ஏற்படும். உடலில் புண்கள் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் தாமதமாகும்.
தலைமுடி அடர்த்தியின்றி வளரும். தலைமுடி உதிரும். இளமையிலேயே வழுக்கை ஏற்படும். பசி குறையும். நாக்கில் உணவின் சுவை தெரியாது. வாசனையை உணர முடியாது. இவர்களுக்கு ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதாலும், ஹூமோகுளோபின் உற்பத்தி குறைவதாலும் ரத்தசோகை ஏற்படுகிறது. அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். செரிமானம் குறையும்.
குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்பட்டவர்களுக்கு உடல் வளர்ச்சியும் உயர வளர்ச்சியும் நின்று போகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலம் இந்தத் தாது பற்றாக்குறையாக இருக்கும் குழந்தைகளுக்குப் புத்திசாலித் தனம் குறைந்துவிடும். படிப்பதில் ஆர்வம் குறைந்துவிடும். நினைவாற்றல் குறையும்.
ஆண்களுக்கு இது குறைந்தால், விந்தணுக்கள் உற்பத்தியாவது குறையும். ஆண்மை இழப்பு ஏற்படும். ஆகவே, திருமணத்துக்குப் பிறகு இவர்கள் தந்தை ஆவதில் பிரச்சினை ஏற்படும். இந்தத் தாது குறைவாக உள்ள பெண்கள் கர்ப்பமானால், பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க அதிக சாத்தியம் உண்டு.
இந்தத் தாது மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு ‘டி’ நிண அணுக்கள் எண்ணிக்கையில் குறைந்து போவதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படலாம். மனச்சோர்வு உண்டாகலாம். முதியவர்களுக்கு இந்தத் தாது குறைந்தால் ‘அல்சீமர் நோய்' வருவதற்கு வாய்ப்புண்டு.
நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் |