

நாணயங்கள், தபால் தலைகள் போன்றவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானில் ஒரு மருத்துவர், அறுவைசிகிச்சைகள் மூலம் அகற்றிய சுமார் 2 லட்சம் பித்தப்பை கற்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். தலைநகர் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் லேப்ராஸ்கோபிக், பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணரான ஜீவன் கன்காரியாதான் அந்த மருத்துவர்.
பொதுவாக அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படும் பித்தப்பை கற்களை, உறவினர்களிடம் காண்பித்த பிறகு, அவற்றை மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள். ஆனால், இந்த மருத்துவரோ அவற்றை அக்கறையுடன் பாதுகாத்து வருகிறார். இப்படிச் சேகரிக்கும் பித்தப்பை கற்களைச் சுத்தம் செய்து, திரவம் உள்ள குப்பிகளில் அடைத்துப் பாதுகாத்து வருகிறார். இந்தக் கற்களைக் கொண்டு மருத்துவ ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.