வழிகாட்டும் கையேடு

வழிகாட்டும் கையேடு
Updated on
2 min read

நம் நாட்டின் பூர்விகச் சொத்தான நுண்கலைகளை மாணவர்களுக்குப் பயிற்று விப்பதில் பெருமளவில் ஆர்வம் இருப்பதில்லை. மாறாக, வருங்காலத்தில் பொருள் ஈட்டும் இயந்திரங்களாக அவர்களைத் தயார் செய்யும் பணியே பெரிதும் நடைபெற்றுவருகிறது.

போட்டிகள் நிறைந்த சமூகச் சூழல், சுற்றுச்சூழல் மாசு, போக்கு வரத்து நெரிசல் போன்ற பற்பல காரணங்களால் இன்றைய உலகில் இருபது வயதுக்கு உட்பட்டோர்கூட நீரிழிவு, ரத்த அழுத்தம், முதுகுவலி போன்ற பல நோய்களுக்கும் உபாதை களுக்கும் உள்ளாவதை அன்றாடம் பார்த்தும்கூட, ஒன்றும் செய்ய இயலாத வெறும் பார்வையாளர்களாய் மாறிவருகிறோம்.

இந்நிலையில், மாணவர்களின் நலனை முன்னிட்டு ஏயெம் எழுதியுள்ள ‘யோகா-மாணவர்களுக்கான புதிய உலகம்’ என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. யோகா பற்றிய தெளிந்த, எளிமையான அறிமுகத்துக்குப் பிறகு, யோகத்தால் விளையும் உடல் நன்மைகள், மனோரீதியான மாற்றங்களை இரண்டாம் அத்தியாயத்திலேயே பட்டியலிட்டுவிடுகிறார்.

பலன்களைச் சொன்னால்தானே மக்களை ஈர்க்க முடியும். யோகாவால் பயன்பெற்ற சிலரின் உண்மைக் கதைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். மற்ற உடற்பயிற்சிகளுக்கும் யோகத்துக்கும் மூச்சு என்கிற ஒரு கருவியின் பயன்பாடே முக்கிய வேறுபாடு என்று கூறுவதற்கு முன், யோகாவின் எட்டு அங்கங்களைப் பற்றிய சிறு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.

உடலை வளைத்து ஆசனம் செய்வது ஒன்றே யோகா என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு யோகாவின் மற்ற அங்கங்கள் குறித்த ஒரு அறிமுகம் ஏற்பட இது வழிகோலுகிறது. கேள்வி-பதில் வடிவில், யோகா பற்றி மக்களுக்குப் பொதுவாக ஏற்படும் சந்தேகங்களைக் களையும் விதமாய்ப் பதில்கள் அமைந்துள்ளன.

சிறுவர், இளைஞர் என வெவ்வேறு வயதினருக்கான பயிற்சி முறை எவ்வாறு மாறுபடும் என்று விளக்கியிருக்கிறார். பயிற்சிப் பகுதிக்குச் சென்று ஐந்து விதமான பயிற்சித் தொடர்கள் கொடுத்துப் பயிற்சி செய்யத் தூண்டிய பின்னர், பயனுள்ள எளிதான பல நல்ல ஆசனங்களையும் பிராணாயாமங்களையும் படங்களுடன் விளக்கியுள்ளார்.

பிரசித்தி பெற்ற கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தில் யோகக் கலை பயின்றவர் ஏயெம். அங்கே யோகா ஆசிரியர் பயிற்சியையும் பெற்றவர். கிருஷ்ணமாச்சார்யா ‘நவீன யோகக் கலையின் தந்தை' எனப்படுகிறார். யோகாசனப் பயிற்சியில் அமைப்பு சார்ந்த அணுகுமுறையை (Structured approach) கிருஷ்ணமாச்சார்யா உருவாக்கியிருக்கிறார்.

அதாவது, எந்த ஆசனத்துடன் தொடங்க வேண்டும், லட்சிய ஆசனம் என்ன, எந்தெந்த ஆசனங்கள் மூலம் உடலை லட்சிய ஆசனத்துக்குத் தயார் செய்யலாம், பயிற்சியினூடே எங்கெங்கெல்லாம் எதிர்மறை ஆசனங்களைச் செய்து இறுக்கங்களையும் வலிகளையும் தவிர்க்கலாம், பயிற்சியில் எங்கெல்லாம் உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம், அங்க அசைவுகளுடனான உள் மூச்சு மற்றும் வெளி மூச்சின் இணைப்பு என்பது போன்ற அமைப்பே அந்த அணுகுமுறை.

இதையெல்லாம் ஏயெம் மிக நேர்த்தியாகக் கையாள்வதோடு, அஷ்டாங்க விந்யாசம், ஐயங்கார் யோகா, பிஹார் யோகப்பள்ளி போன்ற வேறு சில யோகப் பாணிகளின் முக்கிய நுணுக்கங்களையும் தன்னுடைய அன்றாடப் பயிற்சியில் ஒருங் கிணைத்துள்ளார். யோகா என்னும் கலைக்குள் எளிதாகக் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த நண்பன்.

- ஹரீஷ் ராகவேந்திரா, பின்னணிப் பாடகர், யோகா ஆசிரியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in