

மஞ்சள் காமாலை எனும் அறிகுறியானது கண்களில் மஞ்சள் பூத்து, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதாக வெளிப்படுகிறது. இது ஏன் நோயல்ல, அது நோயின் அறிகுறி என்கிறேன் தெரியுமா? உடலில் பிலிருபின் எனும் பித்த நிறமியானது அதன் சராசரி அளவுகளைவிட அதிகரிக்கும்போது கண்கள் மஞ்சள் பூத்து, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுவதைத்தான் மஞ்சள் காமாலை (JAUNDICE) என்கிறோம். மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிவதற்கு பிலிருபின் குறித்து முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
பிலிருபின் என்றால் என்ன? - உடலில் உள்ள ரத்தச் சிவப்பு அணுக்களில் ‘ஹீம்’ எனும் இரும்புச் சத்தானது ‘குளோபின்’ எனும் புரதத்துடன் ஒட்டியிருக்கும். சிவப்பு அணுக்களின் சராசரி ஆயுள் காலமான 3 முதல் 4 மாதங்கள் நிறைவுறும்போது, அவை சிதைவுற்றுப் புதிய சிவப்பு அணுக்களை எலும்பு மஜ்ஜைகள் உருவாக்கும்.