மூலிகையே மருந்து 14: நோய்களை மூக்கறுக்கும் முடக்கறுத்தான்

மூலிகையே மருந்து 14: நோய்களை மூக்கறுக்கும் முடக்கறுத்தான்

Published on

மு

டக்கறுத்தான் இட்லி, முடக்கறுத்தான் தோசை, முடக்கறுத்தான் பிரியாணி என நவீன சமையல் உலகத்தில் நீக்கமற இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கும் மூலிகை முடக்கறுத்தான். ஏன் இவ்வளவு மவுசு இந்த மூலிகைக்கு? நோய்களைத் தகர்த்தெறியும் தன்மை முடக்கறுத்தானுக்கு அதிகம் எனும் உண்மை தீயாய்ப் பரவத் தொடங்கியிருப்பதே காரணம்.

பலூன் போன்ற அமைப்பிலிருக்கும் இதன் காய்களை, கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் மத்தியில் இதன் காய்களுக்கு, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் பெயருண்டு.

பெயர்க் காரணம்:உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர். கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்றவை இதன் வேறுபெயர்கள். வாத நோய்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் மூலிகை.

‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன. போர்களின் போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒரு திணையே (உழிஞைத் திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.

அடையாளம்:பிளவுபட்ட இலைகளைக் கொண்டதாய் மெல்லிய தண்டு உடைய ஏறுகொடிவகையைச் சார்ந்தது. மணம் கொண்ட இலைகளையும், சிறுசிறு வெண்ணிற மலர்களையும் உடையது. இறகமைப்புக்குள் விதைகள் காணப்படும். ‘கார்டியோஸ்பெர்மம் ஹெலிகாகேபம்’ (Cardiospermum helicacabum) என்பது முடக்கறுத்தானுக்கு உரிய தாவரவியல் பெயர். ‘சாபின்டேசியே’ (Sapindaceae) குடும்பத்தைச் சார்ந்தது. முடக்கறுத்தான் தாவரத்தில் காலிகோஸின் (Calycosin), குவர்செடின் (Quercetin), அபிஜெனின் (Apigenin), ப்ரோடோகேடிகுயிக் அமிலம் (Protocatechuic acid) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

உணவாக:சிறுவர்களுக்கு ‘பட்டாசுக் காய்’ கொடியாகப் பரவசப்படுத்தும் முடக்கறுத்தான், முதியவர்களுக்கோ வலிநிவாரணி மூலிகையாக உருமாறி ஆச்சர்யப்படுத்தும். வயோதிகத்தின் காரணமாக உண்டாகும் மூட்டு வலியைக் கட்டுப்படுத்துவதால், முதியவர்களின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை இது. முடக்கறுத்தான் இலைகளை சட்னி, துவையலாகச் செய்து சாப்பிடலாம். தோசைக்கு மாவு அரைக்கும் போதே கொஞ்சம் முடக்கறுத்தான் இலைகளையும் சேர்த்து அரைத்து, நோய் போக்கும் முடக்கறுத்தான் தோசைகளாகச் சுவைக்கலாம்.

முடக்கறுத்தான் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ‘கிரீன் – டீ’ சாயலில் உடல் சோர்வடைந்திருக்கும் போது பருக, உடனடியாக உற்சாகம் பிறக்கும். இதன் இலைகள், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் கொண்டு செய்யப்படும் நறுமணம் மிகுந்த முடக்கறுத்தான் ரசம், மலக்கட்டு முதல் மூட்டுவலி வரை நீக்கும் செலவில்லா மருந்து. இதன் இலைகளைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு லேசான உடல் வலி, சோம்பல் இருக்கும்போது உபயோகப்படுத்தலாம். இதன் இலைப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் விரைவில் நீங்கும்.

மருந்தாக: சுரமகற்றி செய்கையும் வலிநிவாரணி குணமும் இதற்கு உண்டு. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் ‘கவுட்’ நோய்க்கான சிறந்த தீர்வினை முடக்கறுத்தான் வழங்கும். எலிகளில் நடைப்பெற்ற ஆய்வில், இதன் இலைச் சாறு ‘டெஸ்டோஸ்டிரான்’ அளவுகளை அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சூலைப்பிடிப்பு… சொறி சிரங்கு… காலைத் தொடுவாய்வு…’ எனத் தொடங்கும் முடக்கறுத்தானைப் பற்றிய அகத்தியரின் பாடல், வாத நோய்கள் மற்றும் தோல் நோய்களுக்குச் சிறந்தது என்பதை விளக்குகிறது.

வீட்டு மருத்துவம்: நல்லெண்ணெயில் இதன் இலைகளைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை அடிபட்ட இடங்களில் தடவ வலி குறையும். முடக்கறுத்தான் முழுத் தாவரம், வாத நாராயணன் இலைகள், நொச்சி வேர், பேய்மிரட்டி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்தரைத்து, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெயை உடல் பிடிப்பு தைலமாகப் பயன்படுத்த வலி, சுளுக்குப் பிடிப்புகள் மறையும். கருப்பையில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்ற, பிரசிவித்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் முடக்கறுத்தான் இலைகளை அரைத்துப் பற்றுப் போடும் வழக்கம் அநேக இடங்களில் உண்டு.

ஈரப்பசை நிறைந்த மண்ணில் முடக்கறுத்தான் விதைகளை விதைக்க, சில வாரங்களிலேயே கொடியாகப் படர்ந்து தோட்டத்தையே ஒரு சுற்று சுற்றி வந்து, மேலும் படர்வதற்கு இடம் இருக்கிறதா என்று செல்லமாக விசாரிக்கும். அந்த முடக்கறுத்தான் கொடிக்கு, நாம் தேர் எல்லாம் கொடுக்க வேண்டாம்… பற்றி வளர வேலி அமைத்து கொடுத்தால் போதும். ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வள்ளல் ஆகும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in