

நம் இதயத்துக்குள்ளே ஏற்படுகிற இதயத் துடிப்புப் பிரச்சினை கள், மாரடைப்பு உள்ளிட்ட இதயத் தமனி குழாய்ப் பிரச்சினைகள், இதய வால்வு பிரச்சினைகள், இதய இடைச்சுவர் பிரச்சினைகள் எனப் பலவற்றைத் தொடர்ந்து பார்த்தோம். ‘இதயத் துக்கு உள்ளேதான் பிரச்சினையா? அதன் வெளிப்பக்கம் பிரச்சினையே கிடையாதா?’ என்று கேட்டால், ‘இருக்கிறது’ என்றுதான் சொல்வேன். அந்தப் பிரச்சினை என்ன?
இதயத்தின் மெய்க்காப்பாளர்: நம் உடலில் முக்கிய உறுப்புகளைச் சுற்றியும் ஒரு கவசம் அல்லது ஓர் உறை இருக்கிறது. அது அந்தந்த உறுப்புக்குப் பாதுகாப்பு தருகிறது. மூளையை எடுத்துக்கொண்டால், அது கபாலம் என்னும் எலும்புக் கவசத் துக்குள் பாதுகாப்பாக இருக்கிறது. நுரையீரல்கள் இரண்டும் மார்புக்கூடு என்னும் கவசத்துக்குள் பாதுகாப்பாக இருக்கின்றன.