

‘பிரச்சினை செய்யும் இதயத் துளை’ கட்டுரையில் ‘ஏ.எஸ்.டி’ (ASD) என்னும் ‘இதய மேலறை இடைச்சுவர் துளை’ குறித்துச் சொன்னேன். பெரும் பாலும் நடுத்தர வயதினருக்குத்தான் இது பிரச்சினை செய்கிறது என்றும் சொன்னேன். இப்படி, இதயத்தில் ஏற்படுகிற துளை விஷயத்தில் இன்னொரு வகை துளை இருப்பதைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் பெயர் ‘வி.எஸ்.டி’ (VSD). அதாவது, ‘வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட்’ (Ventricular Septal Defect). இதைத் தமிழில், ‘இதயக் கீழறை இடைச்சுவர் துளை’ என்று சொல்லலாம்.
குழந்தைகள் கவனம்: நான் ஏற்கெனவே சொன்ன ‘ஏ.எஸ்.டி’ (ASD) மாதிரிதான் இதுவும். இதயத்தில் துளை விழும் இடம் மாறியிருப்பது தான் இதன் வித்தியாசம். இதைப் புரிந்துகொள்ள, இதயத்தின் அமைப்பைச் சற்றே நினைவுக்குக் கொண்டு வருவோம். இதயத்தில் மேல் பக்கம் இரண்டு அறை கள்; கீழ்ப்பக்கம் இரண்டு அறைகள் இருக்கின்றன.