

என் மருத்துவமனைக்கு நடுத்தர வயதில் ஒரு தம்பதி வந்தி ருந்தனர். “டாக்டர், இவர் என் மனைவி. நாற்பது வயது ஆகிறது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பேரும் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள். இப்போது கல்லூரியில் படிக்கிறார்கள். என் மனைவி எப்போதும் ஏதாவது ஒரு வேலையை இழுத்துப்போட்டுச் செய்பவர். துறுதுறுவென்று இருப்பவர். ஆனால், கடந்த ஒரு மாதமாக எப்போதும் களைப்பாக இருக்கிறார்” என்று அந்தக் கணவர் உடைந்த குரலில் சொன்னார்.
நான் அவருடைய மனைவியைப் பார்த்தேன். கலங்கிய கண்களுடன் காணப்பட்டார். கையில் ஒரு ஃபைலை வைத்திருந்தார். ஏற்கெனவே மருத்துவரிடம் சென்றுவிட்டு, என்னிடம் ‘செகண்ட் ஒப்பீனியன்’ பெறுவதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்தக் கணவரே தொடர்ந்தார். “எந்த வேலை செய்தாலும் மனைவிக்கு மூச்சு வாங்குகிறது. கொஞ்ச தூரம் கூட நடக்க முடியவில்லை. அடிக்கடி படபடப்பும் வரு கிறது. குடும்ப டாக்டரிடம் போனோம்.