

நீங்கள் நன்கு அறிந்த ஒருவருடன் இருக்கும்போது, எந்தக் காரணமும் இல்லாமல் உங்களுக்குப் பதற்றமோ சொல்ல முடியாத பயமோ, மன உளைச்சலோ, நடுக்கமோ உண்டாகிறதா? காரணமே தெரியாமல் ஏற்பட்ட தோல் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தொடந்து சிகிச்சை பெற்றும் எந்தப் பயனும் இல்லையா? இவ்வகையான உடல், மனப் பாதிப்புகள் மாதக்கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில் நீடித்திருந்தால், நீங்கள் ‘நார்சிச’ குணங்கள் கொண்ட ஒருவரால் பாதிக்கப்பட்டிருக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
நார்சிசம்: அண்மைக் காலத்தில் ‘நார்சிசம்’ என்பது மனநல நிபுணர்களால் அதிகம் பேசப்படும் ஒரு மனநிலைச் சிக்கலாகக் கருதப்படுகிறது. இது கணவன்-மனைவி, பெற்றோர், உறவினர்கள், உடன் பணிபுரிவோர், அதிகாரிகள் என யாரிடத்திலும் இருக்கக் கூடியது. நார்சிசத் தன்மைகள் கொண்டவர்களின் தாக்கம், ஒருவரது உடல், மன, உணர்வு நலன் என அனைத்தையும் பாதிக்கக்கூடியது.