

நம் உயிர் தாங்கும் இதயத்துக்கு ஆபத்தைக் கொண்டு வரும் அடுத்த பிரச்சினை, இதயத் திறனிழப்பு (Heart failure). அதாவது, தோற்கும் இதயம். இந்தியாவில் சுமார் 60 லட்சம் பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. முன்பெல்லாம் 60 வயது முதியவர்களுக்கே இது தொல்லை கொடுத்தது. தற்போதுள்ள அழுத்தம் மிகுந்த வாழ்க்கைச் சூழல்/பணிச்சூழல் காரணமாக நடுத்தர வயதினருக்கும் இது வருகிறது.
இதயத் திறனிழப்பு: ‘இதயத் திறனிழப்பு’க்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறோம். ஆரம்பத்தில் நம் விருப்பத்துக்கு அது விறுவிறுப்பாக வேலை செய்யும். அப்போது நாம் விரும்பும் ஏகப்பட்ட செயலிகளை அதில் பதிவிறக்கம் செய்து விடுவோம். சில வருடங்கள் கழித்து அதன் வேகம், செயல்திறன் எல்லாமே குறைந்துவிடும்; அடிக்கடி ‘ஹேங்’ ஆகி நம்மைச் சிரமப்படுத்தும்.