

ஒரு மேடைக் கச்சேரி கடைசிவரை கேட்டு ரசிக்கும்படி இருக்க வேண்டுமென்றால், முதன்மைப் பாடகரின் வசீகரக் குரல் மட்டும் போதாது; பக்கவாத்தியங்களும் பிரமாதமாக அமைய வேண்டும். அதுபோலவே ஒருவருக்கு மாரடைப்பு சிகிச்சை சரியான பலனைத் தர வேண்டுமென்றால், இதயத் தமனியின் ரத்த அடைப்பை அகற்றும் முக்கிய சிகிச்சையுடன் அந்த அடைப்புக்குச் ‘சகுனி வேலை’ பார்த்த புகைபிடித்தல், ரத்த கொலஸ்டிரால், மன அழுத்தம் போன்ற சதிகாரர்களைச் சரணடைய வைக்கும் சிகிச்சைகளும் சீராக இருக்க வேண்டும்.
எந்தவொரு நோய்க்கும் இரண்டு வித சிகிச்சைகள் உண்டு. மருந்து, மாத்திரைகளைக் கொண்டு குணப்படுத்துவது ஒரு வழி; மருந்து, மாத்திரை இல்லாமல் குணப்படுத்துவது அடுத்தவழி. ‘மருந்து, மாத்திரை இல்லாமல் ஒரு சிகிச்சை முறையா?’ என்று புருவம் உயர்த்த வேண்டாம். நோயைக் குணப்படுத்தும் எந்தவொரு வழியும் சிகிச்சைமுறைதான் என்கிறது நவீன மருத்துவம். உதாரணத்துக்கு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உறக்கம், ஓய்வு போன்றவை பல நோய்களைத் தீர்த்து வைக்கின்றன. இவையும் சிகிச்சை முறையில்தான் சேர்த்தி. ஆனால், இந்தப் புரிதல் நமக்குக் குறைவாக இருப்பதால், நோயைத் தீர்ப்பதற்கு மருந்து, மாத்தி ரைகளை மட்டுமே நம்புகிறோம்; மாத்திரை அல்லாத இந்தத் துணைவழிகளை நம் வசதிக்கு மறந்து விடுகிறோம். இதனாலேயே பல நோய்களால் அவதிப்படுகிறோம். ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்னும் இதயவலியைப் பொறுத்தவரை மருந்து சிகிச்சை மட்டும் போதாது; மருந்து அல்லாத சிகிச்சையும் தேவை.