

‘உதறும் இதயம்’ கட்டுரையில், ‘இதய மின்னடைப்பு’ (Heart block) இருப்பவர்களுக்கு ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) பொருத்திச் சரிப்படுத்தலாம் என்று சொல்லியிருந்தேன். அதை வாசித்த நம் வாசகர் ஒருவர் ‘இதய மின்னடைப்பு’ம் மாரடைப்பும் (Heart Attack) ஒன்றா? ‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன? அதை உடலில் எங்கே பொருத்துகிறார்கள்? இதயத்திலா? உடலுக்கு வெளியிலா? என்று கேட்டிருக்கிறார். இவற்றுக்கான விடைகளை இந்த வாரம் பார்ப்போம்.
இரண்டும் ஒன்றல்ல! - மாரடைப்பும் ‘இதய மின்ன டைப்பு’ம் ஒன்றல்ல; வெவ்வேறு நோய்கள். சுருக்கமாகச் சொன்னால், ‘இதயத் தமனி’ (Coronary artery) என்னும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வருகிறது. ‘ஸ்டென்ட்’ (Stent)என்னும் சுருள் கருவியை அடைப்புள்ள இடத்தில் பொருத்தி இதைச் சரிப்படுத்துகிறார்கள்.