

தலைப்புச் செய்திகளில் மீண்டும் கரோனா இடம் பெற்றிருப்பது மக்களிடம் பீதியையும் பதற்றத் தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரோனாவின் முதல், இரண்டாம் அலைகள் ஏற்படுத்திய உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும்தான் இவற்றுக்கு முக்கியக் காரணங்கள்.
கரோனா வைரஸைப் பொறுத்த வரை அதன் முதல் அலையை 2020ஆம் ஆண்டின் மத்தியிலும் உக்கிரமான இரண்டாம் அலையை 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களிலும் சந்தித்தோம். கரோனா வைரஸ் தன்னகத்தே சில, பல உரு மாற்றங்களை அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஓமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்ட திரிபுகளாக ஆறு முதல் பத்து மாதங்களுக்கு ஒருமுறை தனக்கான சாதகமான சூழல் அமையும்போது மீண்டும் பரவத் தொடங்குகிறது.