

‘இதயம் போற்று’ தொடரில், இதய ஆரோக்கியம் காப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, உறக்கம், உள நலம், உடல் பரிசோதனை ஆகிய ஐந்து ‘உ’க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இவற்றில் முதல் நான்கு ‘உ’க்கள் பற்றி விரிவாகவே பார்த்துவிட்டோம். கடைசி ‘உ’ நம் உடல் பரிசோதனை தொடர்பானது. அவற்றில், இதய ஆரோக்கியத்தைக் கணிக்கும் உடல் பரிசோதனைகளை மட்டும் இப்போது பார்த்துவிடலாம்.
‘டிரெட்மில்’ பரிசோதனை: சிலருடைய இதயத்தில் மாரடைப்பு ஆரம்ப நிலையில் இருக்கும். ஆனால், அவர்கள் சாதாரணமாக இருக்கிறபோது மாரடைப்பின் அறிகுறிகள் வெளியே தெரியாது. இ.சி.ஜி.யிலும் அது தெரியாது. இந்த மாதிரி நேரத்தில் அவர்களை உடற்பயிற்சி செய்ய வைத்து, இதயத்துக்குப் பளுவை அதிகப்படுத்தி, அப்போது இ.சி.ஜி.யை எடுத்துப் பார்ப்பது உண்டு. இதற்கு ‘டிரெட்மில்’ (Treadmill) பரிசோதனை என்று பெயர்.