அதிகரிக்கும் உடல் பருமன் - சில அலர்ட் குறிப்புகள்

அதிகரிக்கும் உடல் பருமன் - சில அலர்ட் குறிப்புகள்
Updated on
1 min read

இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயதைக் கடந்தவர்களுக்கான உடல் பருமன் அதிகரிப்பு விகிதம் ஆண்டுக்கு 5.2% ஆகவும், குழந்தைகளுக்கு 9.1 % ஆகவும் உள்ளது. ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களே அதிகளவில் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள்.

உலகளவில்: 1990 முதல் 2022 வரையில் குழந்தைகள், இளம் பருவத்தினரிடம் உடல் பருமன் 4 மடங்காக அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 36% மக்கள் அதாவது 260 கோடி பேர் உடல் பருமனுடையவர்களாக உள்ளனர். இதே போக்கு தொடர்ந்தால் அடுத்த 12 ஆண்டுகளில் உலக நாடுகளில் உடல் பருமனுடையவர்களின் எண்ணிக்கை 400 கோடியைத் தாண்டக்கூடும் என்று வேல்ட் ஒபிசிட்டி அட்லாஸ் ( World Obesity Atlas) கூறுகிறது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஆசிய , ஆப்பிரிக்க நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரிடம் உடல் பருமன் அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடல் பருமன் என்றால் என்ன? - பெற்றோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால் மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கும் இது கடத்தப்படும். அடுத்து கட்டுப்பாடற்ற உணவு முறை, தைராய்டு, சில வகை மருத்துகளினாலும் உடல் பருமன் அதிகரிக்கக்கூடும்.

தரவுகள் என்ன சொல்கின்றன? - கடந்த 30 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. 1990இல் 1.2% ஆக இருந்த பெண்களின் உடல் பருமன் விகிதம் 2022இல் 9.8% ஆக அதிகரித்துள்ளது.

2022 இல் இந்தியாவில் 4.4 கோடி பெண்களும், 2.6 கோடி ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் சிறார்களிடத்திலும் உடல் பருமன் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2022 இல் 7.3 கோடி சிறுவர்களும், 5.2 கோடி சிறுமியரும் உடல் பருமன் உடையவர்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்களில் பாதிப்பு அதிகம் ஏன்? - இந்தியப் பெண்களில் பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளில் கவனம் செலுத்தாதது உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாகிறது. குறிப்பாக, குழந்தை பிறப்புக்குப் பிறகு ஹார்மோன்கள் அதீத செயல்பாட்டினால் மிக எளிதாகவே பெண்களின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.

இதைத் தவிர்த்து சரியான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை நேரத்துக்கு எடுத்துக் கொள்ளாததும், உறக்கம் கொள்ளாததும் பெண்களின் உடல் பருமனுக்கான பிற காரணிகளாக உள்ளன.

இதில் கிராமப் புற பெண்களைவிட நகரத்தைச் சேர்ந்த பெண்களே உடல் பருமனால் அதிகளவு பாதிக்கப்படுவதாக, தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு - 5 சுட்டிக் காட்டுகிறது.

உடல் பருமனால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், மன அழுத்தம் போன்ற நோய்களால் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in