

இன்றைய புத்தியல்பு வாழ்க்கைமுறையில் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியப் பிரச்சினை, மன அழுத்தம் (Stress). இயல்பான மனதுக்கு நாம் கொடுக்கும் கூடுதல் சுமையை ‘மன அழுத்தம்’ என்கிறோம். இதை அறிவியல்ரீதியாகச் சொன்னால், மனச்சுமை கூடும்போது மூளையில் செரடோனின் (Serotonin), டோபமின் (Dopamine) ஆகிய வேதிச் சுரப்புகளின் சமநிலை மாறுகிறது. அட்ரீனலின் அதிகரிக்கிறது. அப்போது உடலும் மனமும் ஆற்றுகிற எதிர்வினை மன அழுத்தமாக வெளிப்படுகிறது.
மன அழுத்தம் புரிந்துகொள்வோம்: ‘வழக்கமான வாழ்க்கைப் பயணத் தில் மன அழுத்தமே இல்லாமல் ஒருவர் இருக்க முடியுமா?’ என்று கேட்டால் ‘முடியாது’ என்பதுதான் என் பதில். காரணம், வாழ்க்கையில் சில சவாலான நேரத்தில் நம் இலக்குகளை அடைய மன அழுத்தம் தேவைப்படுகிறது.