மூலிகையே மருந்து 14: கோவை ‘குணம்’ காண்!

மூலிகையே மருந்து 14: கோவை ‘குணம்’ காண்!
Updated on
2 min read

 ‘இதழுக்கு உவமை… சுவையில் தனிமை… கொடி நளினத்தில் பதுமை… நோய்களுக்கு எதிராகக் கடுமை…’ இந்த மூலிகைப் புதிருக்கான விடை கோவைப் பழம். மருத்துவக் குணங்களோடு சேர்த்து, கண்களைக் கவரும் சில தாவர உறுப்புகளையும் பல காரணங்களுக்காக இயற்கை படைத்திருக்கிறது. அந்த வகையில் ‘கோவை’ எனப்படும் தாவரத்தின் பழம் செக்கச் சிவப்பாக அமைந்திருப்பது கண்களுக்கு விருந்து.

சங்க இலக்கியப் புலவர்களுக்கும் சரி, நவீனக் கவிஞர்களுக்கும் சரி… உதட்டுக்கும் சிவப்பு நிறத்துக்கும் உவமையாக அதிகம் பயன்பட்டது கோவைப் பழம்தான்! இதன் இலைகளையும் கரியையும் ஒன்றாக அரைத்து வகுப்பறையின் கரும்பலகையை மெருகேற்றிய வித்தை, முந்தைய தலைமுறை மாணவர்களுக்குச் சொந்தம்.

பெயர்க் காரணம்: ‘கொவ்வை’ என்ற வேறு பெயரும் கோவைக்கு உண்டு. இலக்கியங்களில் பெரும்பாலும் கொவ்வை என்ற பெயரே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்…’ எனும் வரி சிறந்த எடுத்துக்காட்டு. கொவ்வை என்பது மருவி, கோவையாக பெயர் பெற்றது. கோவை என்றால் ‘தொகுப்பு’ என்று பொருள்.

அடையாளம்: பற்றுக்கம்பிகளின் உதவியுடன் ஏறும் மெல்லிய தண்டு கொண்ட கொடி வகை. நீண்ட இலைக்காம்பு கொண்டது. பச்சை நிறக் காய்களில் வரிகள் ஓடியிருக்கும். பழங்களாக உருமாறும்போது செக்கச் சிவந்த நிறத்தை அடையும். பூமிக்கடியில் கிழங்கு இருக்கும். ‘காக்சினியா கிராண்டிஸ்’ (Coccinia grandis) என்பது கோவையின் தாவரவியல் பெயர். ‘குகர்பிடேசியே’ (Cucurbitaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. சாபோனின்ஸ் (Saponins), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), ஸ்டீரால்கள் (Sterols) போன்ற வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நல்லக் கோவை, பெருங் கோவை, கார்க் கோவை, கருடக் கோவை, இனிப்புக் கோவை, மணற் கோவை, அப்பக் கோவை போன்ற வகைகளும் உண்டு.

உணவாக: இதன் காயைப் பச்சையாகச் சமையலில் சேர்த்தும் வற்றலாக உலரவைத்தும் பயன்படுத்தலாம். காய்களை வெயிலில் உலர வைத்து, எண்ணெயிலிட்டு லேசாகப் பொறித்த வற்றலுக்கு, சளியை வெளியேற்றும் குணம் உண்டு. சுவையின்மைக்கு கோவைக் காய் வற்றல் சிறந்த தொடு உணவு. கோவைக் காயில் செய்யப்படும் ஊறுகாய் நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. கோவைக் கிழங்கை உணவில் சேர்த்து வர, கப நோய்களின் வீரியம் குறையும். கோவைக்காயைக் கொண்டு செய்யப்படும் அவியல், துவையல் போன்றவை பழங்காலம் முதலே பிரசித்தம்.

மருந்தாக: இதன் பழங்களுக்கு இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்து ஆய்வுகள் நடைப்பெற்றிருக்கின்றன. குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் இருக்கக்கூடிய சில நொதிகளைக் கட்டுப்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இனிப்பு நீர்… கூட்டோடு அகற்றும்… கோவைக் கிழங்கு காண்…’ எனும் பாடலில் சுட்டப்பட்டுள்ள இனிப்பு நீர், நீரிழிவு நோயில் முக்கிய குறிகுணமான அதிகமாகச் சிறுநீர்க் கழிதல், சிறுநீரில் சர்க்கரை கலந்து வெளியேறுவதைக் குறிப்பதாக இருக்கலாம்.

கோழையகற்றி, இசிவகற்றி, வியர்வைப் பெருக்கி போன்ற செய்கைகளை உடையது கோவை. ‘கொவ்வை சிவப்புக் கொடியின்… மூலமிவை செம்பு’ எனும் தேரையர் அந்தாதி பாடல், செம்புச் சத்து நிறைந்த மூலிகைகளைப் பட்டியலிடுகிறது. அதில் ‘கோவை’ இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு மருந்தாக: வியர்வை வெளியேறாமல் அவதிப்படுபவர்கள், இதன் இலைச் சாற்றை உடலில் பூசலாம். வேனிற் காலத்தில் உடலில் கொப்புளங்கள் உருவாகும்போது, நுங்குச் சாற்றுடன் கோவை இலைச் சாற்றையும் அரைத்து உடல் முழுவதும் தடவலாம். இதன் இலையை குடிநீரிலிட்டோ இலையை உலர வைத்துப் பொடி செய்தோ சிறிதளவு தண்ணீரில் கலந்து வழங்க, கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். சிறுநீர் அடைப்பு குணமாகும். கோவைக்காயை வாயிலிட்டு நன்றாகச் சவைத்த பின் துப்ப, நாக்கு - உதடுகளில் உண்டாகும் புண்கள் குணமாகும். சிறுநீர் எரிச்சலை குணமாக்க, கோவைக் கொடியை இடித்துச் சாறெடுத்து, வெள்ளரி விதைகள் கலந்து கொடுப்பது சில கிராமங்களில் முதலுதவி மருந்து. இதன் இலைச் சாற்றை வெண்ணெயோடு சேர்த்தரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசும் உத்தியை காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.

உதட்டைச் சிவப்புக்கு உதாரணமான கோவை, உடலைச் சிறப்பாக்கும்!

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in