

ரத்தம் சார்ந்த நோய்களில் ‘ஏபிளாஸ்டிக் அனீமியா’ என்பது அரிதானதாகவும் தீவிரம் மிக்கதாகவும் இருக்கிறது. மனித உடலில் கல்லீரல், மூளை, இதயம், தோல் , சிறுநீரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளையும்விட முக்கியமான உறுப்பு, ரத்தமாகும். ரத்தம் ஓர் உறுப்பா? ஆம். பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றைச் சுமந்து நாள்தோறும் களைப்பில்லாமல் ரத்த நாளங் களில் ஓடிக் கொண்டுபோய் சேர்க்கும் நமது ரத்தமும் ஓர் உறுப்பாகும்.
மூன்று வகை அணுக்கள்: ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் ஆகிய மூன்று வகை அணுக்கள் உள்ளன. இவற்றில் வெள்ளை அணுக்கள், நமது உடலுக்குள் வரும் எதிரிகளான கிருமிகள்/ விஷமிகள் போன்றவற்றுடன் தொடர்ந்து போர்புரிந்து போராடும் ராணுவ வீரர்கள். சிவப்பு அணுக்கள் நமது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் மூளை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்களுக்கும் எடுத்துச்செல்லும் பணியைச் செய்கின்றன. தட்டணுக்கள் ரத்த உறைதலில் பங்காற்றுகின்றன.