

கல்லீரல் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காய்கறிகளைச் சாப்பிட்டுவந்தால் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 65% குறைவதாகப் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில் கல்லீரல் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப் பட்டவர்களிடம் கல்லீரல் புற்றுநோய் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இவ்வாய்வு முடிவு ’Journal of Hepatology’இல் வெளி யிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், தினமும் குறைந்தது 240 கிராம் காய்கறிகளை எடுத்துக்கொள்ளும் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 65% குறைவது கண்டறியப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகளைத் தினமும் சாப்பிட்டு வருவது கல்லீரல் தொடர்பான புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்குவகிக்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.