

ஒருவருக்கு உளப்பிறழ்வு (மன நோய்) ஏற்பட்டால், அதற்குக் காரணம் பேய், பிசாசு, பூதம் போன்ற தீய சக்திகள்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், ‘மனநோய் களுக்குக் காரணம் தீய சக்திகள் அல்ல, மூளையில் ஏற்படும் மாற்றங்களே’ என்பதை எடுத்து ரைத்தவர்கள் சித்தர்கள். பேய், பிசாசுகள்தான் மனப்பிறழ்விற்கான காரணம் என்று அவற்றின் மீது குற்றம் சுமத்தி, மனநோயால் பாதிக்கப்பட்டவர் களைப் பாடாய்ப்படுத்தும் சூழல் இன்றும் தொடர்கிறது.
மனநோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகள் பற்றி யும் பல்வேறு குறிப்புகள் சித்த மருத்துவத்தில் பொதிந்து கிடக்கின்றன. மனநலம் பற்றி ‘அகத்தியர் மானிட கிறுக்கு நூல்’ விரிவாகப் பேசுகிறது. மேலும், தேரையர், யூகி போன்ற சித்தர்களின் நூல்களும் மனநோய்களைப் பற்றிப்பல்வேறு இடங்களில் கூறியுள்ளன.