

உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் பாதிப்பு எந்த நாட்டிலும் குறையவில்லை எனக் கடந்த 33 ஆண்டு காலத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், டைப்-2 நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு உடல் எடை அதிகரிப்பே முக்கியக் காரணம் என மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.
நீரிழிவு, உடல் பருமன் போன்ற பாதிப்புகள் உலக அளவில் தொற்றுநோய் பாதிப்புகளின் பரவல் விகிதத்தை எட்டியுள்ளன. இருப்பினும், சில வெப்பமண்டல நாடுகளில், குறிப்பாகத் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தப் பிரச்சினை சற்று வித்தியாசமாக உள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகம். ஆனால், இங்கே உடல் நிறை குறியீட்டெண் (BMI) மூலம் வரையறுக்கப்பட்ட உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.