மூலிகையே மருந்து 16: ஆரோக்கியத்துக்கு வேராகும் வெட்டிவேர்

மூலிகையே மருந்து 16: ஆரோக்கியத்துக்கு வேராகும் வெட்டிவேர்
Updated on
2 min read

‘வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…’ பாடல் மட்டுமல்ல, அந்தப் பாடல் உருவாக அடிப்படையாக இருந்த ‘வெட்டிவேர்’ எனும் வாசனைமிக்க மூலிகையும் மனதுக்கு இதமளிக்கக்கூடியதுதான். தாவர உறுப்புகளில் மலர்கள், இலைகள் ஆகியவை நறுமணம் பரப்புவதைப் போல, வெட்டிவேர் தாவரத்தில் அதனுடைய வேர்களும் மணம் பரப்பும் சிறப்புடையவை. ‘சப்தவர்க்கம்’ என்ற தாவரக் குழுவில் வெட்டிவேர் இடம்பிடித்திருக்கிறது.

தண்ணீரை இயற்கையாகக் குளிரூட்ட மற்றும் சுத்திகரிக்கப் பயன்படும் மூலிகைகளுள் வெட்டிவேர் முக்கியமானது. முற்காலத்தில் வாசனைக்காகக் கூந்தலில் வெட்டிவேரைச் சூடிக்கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு இருந்திருக்கிறது. வெப்ப நோய்களைக் குணமாக்க, நெடுங்காலமாகப் பயன்பட்டு வரும் மூலிகை வெட்டிவேர். நீர் மேலாண்மை, அழகியல், மருத்துவம் என அன்றாட வாழ்க்கையோடு கலந்து, நமது இல்லங்களில் மணம் பரப்பும் மூலிகை, வெட்டிவேர். ஆனால் இப்போது அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. புதைந்திருக்கும் வெட்டிவேரின் பெருமைகளை மீண்டும் வெட்டி எடுப்போமா?

பெயர்க்காரணம்: விழல்வேர், விரணம், இருவேலி, குருவேர் போன்ற வேறு பெயர்களை உடையது வெட்டிவேர். புல்லுக்கும் வேருக்கும் இடைப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து பயிரிடப் பயன்படுவதால் ‘வெட்டிவேர்’ எனப் பெயர். ஆற்றங்கரைகளின் இருபுறங்களிலும் வேலியாக அமைந்து மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பயன்பட்டதால் ‘இருவேலி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். 

அடையாளம்: புல் இனத்தைச் சார்ந்த வெட்டிவேர், நீர்ப் படுகைகளில் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது. நீளமான இதன் இலைகள், ஐந்தடி வரை தாராளமாக வளரும். வெட்டிவினின் (Vetivenene) வெட்டிவோன் (Vetivone), குஷிமோன் (Kushimone) ஆகிய தாவர வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. இதன் இலைகளிலிருக்கும் சைசனால் (Zizanal) மற்றும் எபிசைசனால் (Epizizanal) போன்ற ஆல்டிஹைட்கள், இயற்கை பூச்சிவிரட்டியாகச் செயல்படக்கூடியவை. வெட்டிவேரின் தாவரவியல் பெயர் ‘வெட்டிவேரியா சைசானியோய்ட்ஸ்’ (Vetiveria zizanioides). இதன் குடும்பம் ‘பொவாசியே’ (Poaceae).

உணவாக: பனைவெல்லம் மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் வெட்டிவேர் பானத்தை, மண்பானையில் வைத்துப் பருக, இரைக்குழலில் இறங்கும்போதே குளிர்ச்சியை உணர வைக்கும். வெட்டிவேரை நீரில் நன்றாக ஊறவைத்துத் தயாரிக்கப்படும் சர்பத், சுவையிலும் மருத்துவக் குணத்திலும் சளைத்ததல்ல. செரிமானத்தை எளிமையாக்க, வெட்டிவேர் மற்றும் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம். இதன் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை உடலுக்குப் பலம் கொடுக்கும் டானிக்காக உபயோகிக்கலாம்.

மருந்தாக: இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நறுமண எண்ணெய்க்கு, தோலில் ஏற்படும் கருந்திட்டுக்களைக் குறைக்கும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. Cedr-8-en-13-ol எனும் பொருள் இதற்குக் காரணமாகிறது. வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை என பல்வேறு மாசுகளிருந்து வெளியேறி அழியாமல் நமது சூழலோடு கலந்திருக்கும் ‘பென்சோ-பைரீன்’ (Benzo-pyrene) எனப்படும் புற்று விளைவிக்கும் பொருளின் வேதி-இணைப்பை உடைக்கும் தன்மை வெட்டிவேருக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் உடலுக்கும் மிகுந்த நன்மை செய்கிறது. நிலவேம்புக் குடிநீரில், பித்தத்தைத் தணிக்கும் தத்துவார்த்த அடிப்படையில் வெட்டிவேர் சேர்க்கப்படுகிறது.

வீட்டு மருத்துவம்: மண்பானை தண்ணீரில் சிறிது வெட்டிவேரைச் சேர்த்து ஊறவைக்க, நீருக்குச் சுவையும் பலன்களும் பலமடங்கு கூடும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து  ‘ஃபேஸ்-பேக்’ போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம். வெட்டிவேர் நாரினை ஸ்கரப்பராகவும் குளிக்கும்போது பயன்படுத்தலாம்.

‘வாச வெட்டிவேர் விசிறி வன்பித்த கோபமோடு…’ எனத் தொடங்கும் பாடல், வெட்டிவேரால் செய்யப்பட்ட விசிறியால், உடலில் உண்டாகும் எரிச்சல், அதிதாகம் மற்றும் வெப்பம் காரணமாக உண்டாகும் நோய்கள் குறையும் என்பதைப் பதிவிடுகிறது. சாளரங்களில் வெட்டிவேரால் செய்யப்பட்ட தட்டிகளைத் தொங்கவிட்டு, லேசாக நீர்த் தெளிக்க, நறுமணம் கமழும் இயற்கைக் காற்று இலவசமாகக் கிடைக்கும். வெட்டிவேரால் செய்யப்பட்ட பாய்களும் இப்போது பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆக, வெட்டிவேர்… வெட்டியான வேர் அல்ல!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in