

உணவுச் சத்துகளில் அதிகம் குழப்பம் கொண் டது கொழுப்பு மட்டுமே. கொழுப்பு குறித்த கணிப்புகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், நல்ல கொழுப்பு எது, கெட்ட கொழுப்பு எது என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பதில் மருத்துவர்களுக்கே சில நேரம் இடியாப்பச் சிக்கலை உண்டாக்கும். இது பொதுச் சமூகத்திலும் பிரதிபலிக்கும். அந்தச் சிக்கலைத் தீர்க்கும்விதமாக உலக அளவில் இதயநலச் சங்கங்கள் ஏற்றுக்கொண்ட வழிகாட்டுமுறைப்படி எது நல்ல கொழுப்பு உணவு என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
எவ்வளவு கொழுப்பு தேவை?: பொதுவாக, நாம் எடுத்துக் கொள்ளும் மொத்த கலோரிகளில் 30% கொழுப்பு உணவிலிருந்து கிடைக்க வேண்டும் என்று சொல்வார்கள். என் அனுபவத்தில், 25% கொழுப்பும் 5% நார்ச்சத்தும் (Fibre) கிடைத்தால் நல்லது என்பேன். உதாரணத்துக்கு, ஒருவர் தினமும் சராசரியாக 2,000 கலோரிக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்கிறார் என்றால், அதில் 500 கலோரி கொழுப்பு வகை உணவிலிருந்து கிடைக்க வேண்டும். அதற்கு அவர் 40 - 60 கிராம் நல்ல கொழுப்பு உணவைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.