குழந்தைகளை வளர்க்கும் உரைமருந்து

குழந்தைகளை வளர்க்கும் உரைமருந்து
Updated on
3 min read

உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தினமும் உலக அளவில் 16,000 குழந்தைகள் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. அதில் 83% மரணங்கள் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது என்பது வருத்தமானது. சிறு குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவினால் சீக்கிரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

கிராமங்களில் குழந்தைகளுக்கு ‘உரசு மருந்து’ என்று தனித்தனியே சில மருந்துகளைத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளின் நாவில் தடவும் வழக்கம் இன்றுவரை தமிழகம், கேரளம், இலங்கை போன்ற பகுதிகளில் உள்ளது. நகர்ப்புறங்களிலும் சிலர் இதை வழக்கத்தில் வைத்துள்ளனர். குழந்தைகள் உரைமருந்து உதவியுடன் ஆரோக்கியமாக, பெரும்பாலும் நோயில்லாமல் வளர்ந்துவிடுகிறார்கள். குழந்தைக்கு உரை மருந்து கொடுப்பதால் குழந்தைகளின் உடல்நலம் அதிகரிக்கும்.

சித்த மருத்துவத்தில் சிறுகுழந்தைகளுக்கு மிகச் சிறந்த பல மருந்துகள் உள்ளன. அதில் ஒன்று உரைமாத்திரை. அக்கரகாரம், அதிமதுரம், சிற்றரத்தை, கடுக்காய், சாதிக்காய், மாசிக்காய், வசம்பு, சுக்கு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், திப்பிலி அடங்கிய கலவை உரை மாத்திரையாகப் பயன்படுகிறது.

* அதிமதுரம்: அதிமதுரம் பயன்படுத்து வதன் மூலமாகச் சளி, இருமல் தொல்லை வராமல் கட்டுக்குள் வைக்கலாம். அதி மதுரப் பொடி கலந்த நீரைக் குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். ஞாபக சக்தி அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இந்த மூலிகை இருக்கும். குழந்தைக்குச் சளி இருக்கும்போது இதை உரசிக் கொடுக்கலாம். நெஞ்சிலிருக்கும் சளி, கோழையை வெளியேற்றும். மூச்சுக்குழாயில் சளி இருந்தால் அதைக் கரைத்து வெளி யேற்றும் தன்மை கொண்டது.

* கடுக்காய்: வாய், தொண்டை, இரைப்பை, குடல், கல்லீரல் ஆகியவற்றின் சக்தியை ஊக்குவிக்கக் கூடியது. பசியைத் தூண்டும், ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலைப்படுத்தும். உடலுக்கு வலிமை தரக்கூடியது. இளைப்பு நோய் வராமல் காக்கும். அஜீரணக் கோளாறைக் குணப்படுத்தக் கூடியது. இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு சுவைகள் அடங்கியது.

* சாதிக்காய்: குழந்தைக்குச் சுவை உணர்வைக் கொடுக்கும். செரிமானத்தை வேகப்படுத்தி ஜீரணச் சக்தியை அதிகரிக்கும். சில குழந்தைகள் தூங்காமல் அழுதபடி சிடுசிடுவென்று இருப்பார் கள். இதைக் கொடுக்கும்போது குழந்தைக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குழந் தைகள் சூடாக மலம் கழிப்பதைத் தடுக்கும். வாயுத்தொல்லை இல்லாமல் காக்கும்.

* மாசிக்காய்: வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும். ஈறுகளுக்கு வலிமை தரும். உடலில் இருக்கும் நஞ்சை நீக்கும்.
சிறுநீர் பெருக்க உதவும். வயிற்றுப்போக்கைக் கட்டுப் படுத்தும். சீதபேதி பிரச்சினை இருக்கும்போது வெறும் மாசிக்காயை மட்டுமே உரசி, தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

* வசம்பு: பேர்சொல்லா மருந்து அல்லது பிள்ளை வளர்த்தி என்று இதைச் சொல்வார்கள். வசம்புவின் மருத்துவக் குணத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வீக்கம், செரிமானம் என அனைத்தையும் போக்கும் வசம்புவை, குழந்தை பிறந்த 15 நாள்களிலேயே பயன்படுத்துவார்கள். ஆனால், அதை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. இல்லையெனில் குழந் தைக்குப் பேச்சு வருவதில் தாமதம் ஏற்படுவதுடன், திக்கித் திக்கிப் பேசும்படியும் ஆகிவிடும்.

* சுக்கு: இஞ்சியைக் காயவைத்தால் அதுதான் சுக்கு. உணவில் மாதம் ஒருமுறையாவது சுக்கு பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். வாயுத் தொல்லையையும், வயிற்றுக் கோளாறுகளையும் சரிசெய்வதோடு குளிர்க் காய்ச்சலை விரட்டும் குணம் கொண்டது சுக்கு. காரத்தன்மையும் மணமும் கொண்ட சுக்கு உடலில் வெப்பத்தை உண்டாக்கினாலும் இளைப்புப் பிரச்சினையைப் போக்கக்கூடியது. மூக்கடைப்பு, ஜலதோஷத்தைப் போக்கும்.

* வெள்ளைப்பூண்டு: பூண்டின் ஊட்டச்சத்து மதிப்புப்படி விட்டமின் பி 6, மாங்கனீசு, செலீனியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகிய வற்றின் ஆதாரம். இது பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் குழந்தையை நோய்த்தொற்றி லிருந்து பாதுகாக்கப் பூண்டு உதவும்.

* பெருங்காயம்: பெருங்காயம் குழந்தைக்குச் செரி மானத்தைத் தூண்டுகிறது. அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. மேலும், மலச் சிக்கல் பிரச்சினையிலிருந்தும் விடுவிக்கிறது.

* திப்பிலி: காசநோய்க் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உடம்புவலி, காய்ச்சல், மூட்டுவலி, ஜலதோஷம் எல்லா வற்றுக்கும் சிறந்த நிவாரணி. உரை மாத்திரையின் பயன் வயிற்று நோய்கள், நுரையீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இம்மருந்து பெரிதும் உதவுகிறது.

ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட இம்மாத்திரை பேதி, கடுப்புக்கழிச்சல், சிறுநீரக நோய்களை உண்டு பண்ணும் கிருமிகளை அழிப்பதாக (Anti microbial activity) பதிவு செய்யப்பட்டுள்ளது. உரைமாத்திரையில் சேர்க்கப்படும் தனி மூலிகை மருத்துகள் நோய் எதிர்ப்பாற்றல் சீராக்கி (Immuno modulatory), வீக்கமகற்றி (Anti inflammatory), ஒவ்வாமை போக்கி யாகச் (Anti allergic) செயல்பட்டு உணவு செரிமானத்தைத் தூண்டும் குணங்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இம்மருந்தை குழந்தை பிறந்த பத்து நாள் முதல் ஐந்து வயது வரை தரலாம். வயதுக்கு ஏற்றவாறு தினமும் ஒரு வேளை மட்டும் பயன்படுத்தலாம். இந்த மருந்துகளை ‘Hospital Pharmacopoeia’ என்னும் நூலில் கூறியபடி எடுத்து, சுத்தம் செய்து பொடித்து நீர் விட்டு அரைத்து விரல் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் நன்றாகக் காய வைத்து, இம்மாத்திரை செய்யப்படுகிறது. இதைத் தாய்ப்பால் அல்லது வெந்நீரில் உரைத்துக் குழந்தையின் நாவில் தடவ நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

சென்னை மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்மருந்து கிடைக்கிறது. நோய் எதிர்ப்புக் குணம் நிறைந்த உரைமாத்திரையைக் குழந்தைகளுக்குச் சரியான அளவில் கொடுத்து, குறைவற்ற செல்வமாம் நோயற்ற வாழ்வை உண்டாக்குவோம்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; dharshini874@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in