

முறையற்ற தூக்கமானது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்ப தாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ (Journal of Epidemiology & Community Health) இதழ் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட உறக்க முறை குறித்த பரிசோதனையில் ஈடுபட்டது.
அந்த ஆய்வின் முடிவில், ‘தினமும் 8 மணி நேரத் தூக்கத்தை ஒருவர் பெற்றாலும் உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறையற்றதாகக் கருதப்படுகிறது. இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம், பதற்றம் போன்ற வற்றால் ஏற்படும் முறையற்ற தூக் கத்திலிருந்து விடுபட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியைப் பின்பற்றலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பதன் மூலம் இரவில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம் எனவும் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.