

ரத்தக் கொதிப்பின் பல்வேறு நிலைகள், வகைகள் குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம். இப்போது அடிப்படையான இரண்டு ரத்தக் கொதிப்பு வகைகளைப் பார்த்துவிடுவோம். காரணம் எதுவும் தெரியாமல் வருவது முதல் வகை. இதை ‘முதன்மை ரத்தக் கொதிப்பு’ (Primary Hypertension) என்கிறோம். காரணம் தெரிந்து வருவது இரண்டாம் வகை. இதை ‘இரண்டாம் நிலை ரத்தக் கொதிப்பு’ (Secondary Hyper tension) என்கிறோம். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் 100இல் 95 பேர் காரணம் தெரியாத வகையில்தான் இருக்கின்றனர்.
முதன்மை ரத்தக் கொதிப்பு
உலக அளவில் 18 வயதுக்கு மேற்பட் டோரில் மூவரில் ஒருவரைப் பாதிப்பதாகப் பதிவாகியிருக்கும் ஒரு ‘வி.ஐ.பி’ நோய் இது. இந்தியாவில் 22 கோடி பேருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது. அதாவது, மூன்றில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருக்கிறது. இவர்களில் மூன்றில் ஒருவருக்குத்தான் அறிகுறிகள் தெரிகின்றன. மற்றவர்கள் தங்களுக்கு ‘பி.பி.’ அதிகமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கி றார்கள்; அப்படியே தெரிந்தாலும் அவர் களில் மூன்றில் ஒருவர்தான் சிகிச்சை எடுத்து ‘பி.பி.’யை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் இந்த நோயை ஆரம்பத்தி லேயே கவனித்துவிட்டால் மாத்திரை, மருந்து இல்லாமலும் சரிப்படுத்த முடியும் என்கிறது ஒரு தேசியப் புள்ளிவிவரம். இந்த அறியாமைதான் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் அதிகரிக்க முக்கியக் காரணம்.
ரத்தக் கொதிப்பை ‘மெல்ல மெல்லக் கொல்லும் விஷம்’ என்று மருத்துவர்கள் சொல்வார்கள். காரணம், பலருக்கு இது எந்த அறிகுறியும் காட்டாது; எந்த விளைவையும் ஏற்படுத்தாது; ஆனால், உடலுக்குள் வளர்ந்துகொண்டே இருந்து திடீரென்று ஒருநாள் அதன் சுய முகம் காட்டும். அப்போது பலர் ஆடிப்போவார்கள்.
அப்படித்தான் என்னிடம் வந்தார் கனகராஜ். வயது 50. தனியார் நிறுவனத்தில் காசாளர். அன்றைய தினம் ஹோட்டலில் அவர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று வலது கையை வாய்க்குக் கொண்டுபோக முடியவில்லை. வாய் லேசாகக் கோணியது. எச்சில் வழிந்தது. நாக்கு குழறியது. பயந்துபோய் என்னிடம் வந்தார். பரிசோதித்ததில் அவருக்கு ‘பி.பி.’ 180/110 என்று இருந்தது. வியப்பு என்னவென்றால், இதுவரை அவர் தன்னு டைய ‘பி.பி.’யைச் சோதித்ததே இல்லை என்பதுதான்.
“உங்களுக்கு ‘பி.பி.’ மோசமாகக் கூடிஇருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்சினை” என்று சொன்னால், அவர் அதை நம்பத் தயாராக இல்லை. “நான் இதுவரை நன்றாகத்தானே இருந்தேன். எந்தப் பிரச்சினையும் தெரியலையே, டாக்டர்!” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டி ருந்தாரே தவிர, இதுவரை தன்னுடைய ‘பி.பி.’யை அவர் சோதிக்காமல் இருந்தது தவறு என்பதைப் புரிந்துகொள்ள வில்லை.
“இப்போ தாவது உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருப்பதைத் தெரிந்துகொண்டீர்களே, அது போதும். முழுமையான பக்கவாதம், கோமா, மாரடைப்பு எனப் பெரிய ஆபத்துகள் எதுவும் இல்லாமல் தப்பித்துவிட்டீர்கள் என்பதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள்” என்று சொல்லி, அவருக்குச் சிகிச்சை அளித்தேன். அடுத்த சில வாரங்களில் அவருக்கு ‘பி.பி.’ நார்மலுக்கு வந்தது. வலது கை இயக்கமும் சரியாகிவிட்டது. கோணலாகிப்போன வாய் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. குழறிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.
| இரண்டாம் நிலை ரத்தக் கொதிப்பு சிறுநீரக நோய், அட்ரீனல் கட்டிகள், ஹார்மோன் குறைபாடுகள், ரத்தக்குழாய்க் கோளாறுகள் போன்ற வற்றால் ‘பி.பி.’ கூடும். இந்தப் பிரச்சினைகள் குழந்தை பிறக்கும்போதே வரலாம். சிறு வயதிலும் வரலாம். இதனால் சிறுவர், சிறுமிகளுக்கும் ‘பி.பி.’ அதிகரிக்கலாம். விசித்திரம் என்னவென்றால், இந்தக் காரணங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்துவிட்டால் அதற்குப் பிறகு இவர்களுக்கு ‘பி.பி.’ சரியாகிவிடும். மாத்திரை, மருந்து எதுவும் தேவைப்படாது. சுகவாசிகள் ஆகிவிடலாம். ஆனால், இப்படிச் சுகவாசிகள் ஆகிறவர்கள் மிகச் சொற்பமே (5%). உதாரணத்துக்கு, சிறுநீரகக் கட்டிதான் பிரச்சினை என்றால், அதை அகற்றியதும் ‘பி.பி.’ நார்மல் ஆகிவிடும். |
தயக்கமும் மயக்கமும்
இதை ஏன் சொல்கிறேன் என்றால், நம்மில் பலரும் ‘பி.பி.’ சோதனை, அதன் முக்கியத்துவம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். “அறிகுறிகள் எதுவும் தோன்றாமல் டாக்டரிடம் ஏன் போக வேண்டும்?” என்று நினைக்கிறார்கள். அப்படிச் சென்றால், ஏதாவது நோய் இருப்பதாகச் சொல்லி விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அடுத்து, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று வீட்டில் யாருக்கும் ரத்தக் கொதிப்பு இல்லை; அதனால் தங்களுக்கும் ரத்தக் கொதிப்பு வராது என்கிற தவறான புரிதலில் இருக்கிறார்கள். ‘பி.பி.’க்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட ஆரம்பித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமே என்று சிகிச்சை எடுக்கத் தயங்குகிறவர்களும் இருக்கிறார்கள். தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் பக்க விளைவு ஏற்பட்டுச் சிறுநீரகம் பாதிக்கப் படுமோ என்று அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் தேவையற்றது. நடைமுறையில், எகிறும் ‘பி.பி.’க்கு மாத்திரை சாப்பிடாத வர்களுக்குத்தான் சிறுநீரகம் சீரழிகிறது.
அடுத்து, நான் தினமும் வாக்கிங் போகிறேன்; யோகா செய்கிறேன். எனக்கு ரத்தக் கொதிப்பு வர வாய்ப்பில்லை என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் வாக்கிங் போய்விட்டுத் திரும்பும்போது ‘பி.பி.’ அதிகமாகி, மயக்கம் அடைந்தவர்கள் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். வாக்கிங் நல்லதுதான். அதேவேளை, ‘பி.பி.’ எகிறுவதற்குப் பல காரணி கள் இருக்கின்றனவே. அவற்றை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
யாருக்கெல்லாம் பிரச்சினை?
இன்றைய வாழ்க்கைச் சூழலில் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தக் கொதிப்பு ஏற்படலாம் என்பதுதான் எதார்த்தம். என்றாலும், குறிப்பிட்ட சிலருக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். யார் அவர்கள்? பரம்பரை வழியில் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள். உடல் பருமன் உள்ளவர்கள். சர்க்கரை நோயாளிகள். உடற்பயிற்சி, உடலுழைப்பு என எதுவும் இல்லாமல் சோம்பேறியாகி, உட்கார்ந்த இடத்திலேயே இருப்பவர்கள். பொழுதுக்கும் அமர்ந்தே வேலை பார்ப்பவர்கள். புகைபிடிப்பவர்கள். மது அருந்துபவர்கள். ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம் கொண்டவர்கள். உதாரணமாக, உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்கிறவர்கள். காற்று மாசு மிகுந்த இடங்களில் வசிப்பவர்கள்.
முன்பெல்லாம் ரத்தக் கொதிப்பு ஏற்படு வதற்கு மூத்த வயது ஓர் ஆபத்துக் காரணி என்று சொல்லி வந்தோம். இப்போது அப்படியில்லை. இளம் வயதிலும் ‘பி.பி.’ அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் இருந்தால் அதற்குக் கூட்டாளி ஆகிறது. தைராய்டு பிரச்சினை ‘பி.பி.’யை அதிகமாக்குகிறது. கொலஸ்டிரால் கூடினால் ‘பி.பி.’யும் கூடு கிறது. மன அழுத்தம் அதிகமாகி, நிம்மதியான உறக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ‘பி.பி.’ பிரச்சினை செய்கிறது. இவ்வளவு ஏன்? உறக்கத்தில் மூச்சு நிற்கும் அளவுக்குக் குறட்டைவிடுபவர்களுக்குக்கூட (Sleep apnea) ‘பி.பி.’ எகிறிவிடுகிறது.
சரி, ‘பி.பி.’ கூடினால் என்ன செய்யும்? அடுத்த வாரம் பார்ப்போம்.
(போற்றுவோம்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.