நீங்கள் சுய மருத்துவரா?

நீங்கள் சுய மருத்துவரா?
Updated on
3 min read

ஒரு நாள் 30 வயதிற்குள் இருக்கும் ஆண் ஒருவர், ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று மருந்துக் கடைக்காரரிடம் கேட்டார். நான் நிற்பது ஹோட்டலா அல்லது மருந்துக் கடையா என்று மருத்துவரான எனக்கு ஒரே குழப்பம். ஏனென்றால் ஹோட்டலில்தான், ஒரு செட் இட்லி, ஒரு செட் பூரி, ஒரு செட் சப்பாத்தி என்று கேட்போம். அதே போல், மருந்துக் கடைகளிலும் ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டால், எப்படிப் புரிந்து கொள்வது?

ஒருவர் ஒரு செட் மாத்திரை வேண்டும் எனக் கேட்டதை, எந்தவிதக் கேள்விகளும் கேட்காமல் மருந்தாளுநர் கொடுக்கிறார் என்றால், இது அவர்களுக்குள் ஒரு தொடர் கதையாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

அதாவது ஒரு செட் மாத்திரை என்றால், மூன்று நேரமும் மாத்திரைகளைச் சாப் பிடும் முறையாகும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஓ.டி.சி’. அதாவது, ‘Over the Counter; என்பார்கள். மருத்துவர் களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே எந்தவித ஆலோசனை-சிகிச்சை எதுவு மில்லாமல், நேரடியாக மருந்து மாத் திரைகளை மருந்தகங்களில் வாங்கும் முறை இது.

சுய மருத்துவம்

இந்தியாவில் தங்களுக்கான நோய்களுக்கு மருந்தகங்களில் சுயமாக மருந்து வாங்கிச் சாப்பிடும் தனிநபர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்திருக்கிறது என்று ‘Cureus Journal’ ஒரு கணக்கெடுப்பை வெளி யிட்டிருக்கிறது. இதில் வலி நிவாரணி மாத்திரைகளின் விற்பனை 66.25%, காய்ச்சல் மாத்திரைகளின் விற்பனை 59.16%.

இந்தியாவில் பெரும்பாலும் மூன்று வகையான மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக விற்பனையாகின்றன. ஓ.டி.சி. (OTC) முறையின்படி, பெரும்பாலும் நிவாரணி கள், ஸ்டீராய்டுகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் ஆகிய மூன்றும்தான் பரவலாக வாங்கப்படுகின்றன. வேறுவித உடல் உபாதைகளுக்கும் மாத்திரைகள் வாங்கப்பட்டாலும், இவை மூன்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாக நினைத்து, மக்கள் தங்களையே இன்னும் வதைத்துக் கொள்கிறார்கள்.

தலை வலிக்கிறது எனத் தொடர்ந்து ஒருவர் மாத்திரை சாப்பிட்டால், அது தலைவலிக்கானது என்று மட்டும் என எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென் றால், தொடர்ந்து தலைவலி ஏற்படுகிறது எனும்போது, அவருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கலாம் அல்லது கண் சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது மூளையில் ஏற்படும் பிரச்சினைகளும் இருக்கலாம். உதாரணத்திற்கு, கண் பார்வை சார்ந்து தலைவலி ஏற்படும் போது, கண்ணுக்கு சிகிச்சை எடுக்கா மல் தலைவலி மாத்திரை மட்டும் தொடர்ந்து உட்கொண்டால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் இன்னும் அதிகரிக்கும்.

மேலும் கண் பரிசோதனை, கண் சார்ந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, வலி மாத்திரைகள் இல்லாமல் கூடத் தலைவலி சரியாகிவிடும். சில நேரம் தலைவலி என்பதைத் தாண்டி, தற்போது மூட்டு வலி, கால் வலி போன்றவற்றுக்கும் தாங்களாகவே மருந்து வாங்கி உட்கொள்வதும் அதி கரித்திருக்கிறது. உண்மையில் மூட்டு வலி என்றால் எலும்புப் பிரச்சினைகளும், கால்வலி என்றால் தசை சார்ந்த பிரச்சினைகளும் இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவதாக, காய்ச்சல், சளி என்றாலே வைரஸால்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகி றோம். சில வகைக் காய்ச்சல் சாதாரண வைரஸால் வருகிறது என்றால், பெரும்பாலும் அதற் கான சிகிச்சையாக வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்கள் மருத்துவர்கள். ஓய்வு, ஆரோக்கிய உண வைச் சரியாக எடுத்துக்கொண்டால் காய்ச்சல், சளி தானாகவே சரியாகி விடும்.

காய்ச்சலா, உடனே பாரசிட்டமால் வாங்கிச் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது. பாரசிட்டமால் மாத்திரையை மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு எழுதும் முன், செவிலி முதலில் நோயாளியின் உடல் எடை, ரத்தக்கொதிப்பு சார்ந்து எடுக்கும் தகவலை வைத்துத்தான், மருத்து வர்கள் பாரசிட்டமால் மாத்திரையின் அளவைக் குறிப்பிட்டு உட்கொள்ளக் கூறுவார்கள். பொதுவாக, வைரஸால் ஏற்படும் காய்ச்சலை பாரசிட்டமால் கட்டுப்படுத்துமே தவிர, குணப்படுத் தாது. காய்ச்சல் குணமாகச் சில ஊசி மருந்துகள், மாத்திரைகளின் பங்கும் இருக்கிறது என்கிற புரிதலும் மக்களுக்குத் தேவை.

மேலும், வலி நிவாரணியாகவும், சில நேரம் காய்ச்சலுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் சிலர் பயன்படுத்து கிறார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகளைப் பற்றி நாங்கள் கூறுவது என்னவென்றால், மக்கள் சுயமாக வாங்கும் ஸ்டீராய்டுமாத்திரைகள் நோயாளிகளுக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக குணமாகிவிட்டதுபோல நம்ப வைக்கும். இதனால் ஸ்டீராய்டு மாத்திரையை உட்கொள்பவரின் உடலில் உண்டாகும் உண்மையான வலி மற்றும் நோய் ஏற்பட்டதற்கான காரணங்கள் புலப்படாமல் போய் விடுகின்றன.

உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்தினை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்றால், அதனோடு சேர்ந்து, அவருடைய உடலின் தன்மை, வயதுக்கு ஏற்றவாறும், நோயின் வீரியத்தைப் பொறுத்தும் வேறு சில மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்.

தரமற்ற மருந்துகள்

இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி வாங்கும் ஆன்டி பயாட்டிக் மாத்திரைகள் பெரும்பாலும், தரமற்றவையாக இருக்கின்றன என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த மாத்திரைகளை மக்கள் உட்கொள்ளும்போது, ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு மக்களிடையே ஏற்படுகிறது. அதாவது, மருத்துவர் சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை பரிந்துரை செய்யும்போது, அது உடலுக் குள் சென்று மனிதர்களைக் குண மாக்குகிறது என்று வைத்துக்கொள் வோம். ஆனால், மக்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மாத்திரைகளை தொடர்நது உட்கொள்ளும்போது, ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு அதாவது, குணமாக்கும் தன்மை யினை இந்த மாத்திரைகள் இழந்து விடுகின்றன. ஆன்டிபயாடிக் மாத்திரை கள் குணமாக்கும் தன்மையை இழந்து விடுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை.

ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு

உடலுக்கு எந்த நோய் வந்தாலும் நீங்கள் முறையாக மருத்துவரைச் சந்திப்பவராக இருப்பீர்கள். அதே வீட்டில், உங்களுக்கு நெருங்கிய உறவி னர் ஒருவர், மருந்தகங்களில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுபவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நெருங்கிய உறவினருக்கு ஏற்படும் நோய்க் கிருமியின் தொற்றால், நீங்கள் பாதிக்கப்படும்போது, இருவருக்கும் குணப்படுத்தும் தன்மையினை அந்த மாத்திரை இழந்துவிடுகிறது. அதாவது நோய்க்கிருமி எந்த அளவிற்கு மக்க ளிடம் பரவுகிறதோ, அதே அளவிற்கு ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பும் மக்களிடம் வேகமாகப் பரவிவிடும்.

மருத்துவரின் ஆலோசனையின்றி, வலி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது, அது தனிநபரை மட்டும் பாதிக்கும். அதுவே, ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு என்பது தனி நபர் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினையும் அதில் உள்ளடங்கி இருக்கிறது.

மக்கள் சுயமாக மருந்து எடுக்கும் தன்மையால், தற்கொலைக்கும் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல், தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்கிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பாரபட்சமில்லாமல், மருந்துகளைச் சுயமாக வாங்கி உட் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

இது சார்ந்து மருத்துவர்கள், செவிலி யர்கள் தொடர்ந்து விழிப்புணர்வுத் தகவல்களைக் கூறினாலும், இன்னும் பலர் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், காவல் துறையினர் என்று பலரும் சேர்ந்து மருந்துகள் உட்கொள்ளும் முறையைப் பற்றி மக்களிடையே தொடர் விழிப் புணர்வு ஏற்படுத்தினால்தான் மக்களின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

கட்டுரையாளர், பொதுநலச் சிறப்பு மருத்துவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in