Last Updated : 28 Apr, 2018 12:16 PM

 

Published : 28 Apr 2018 12:16 PM
Last Updated : 28 Apr 2018 12:16 PM

இனிப்பு தேசம் 03: இனிது இனிது இன்சுலின் இனிது...

ர்க்கரை வியாதிக்காரர்கள் நாய், ஆடு, மாடு, பன்றிக்கெல்லாம் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொன்னால் அது பெரும் உண்மை. அதுவும் குறிப்பாக நாய்க்கு ரொம்பவுமே நன்றியுடையவராய் இருந்தே ஆக வேண்டும்.

மூன்று அல்லது நான்காயிரம் வருடங்களாக உருக்கி உருக்கி உருக்குலைத்துக் கொல்லும் நோயாக, ‘முகம் தெரியா பிசாசு’ என்றழைக்கப்பட்ட நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் விடிவெள்ளிக் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’. நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல இன்சுலின். ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து.

தொடையில் பந்தைத் தேய்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் 140 கி.மீ. வேகத்தில் பந்தை வீசவும், எல்லைகள் தெரியாத கடலில் சின்னதாய் ஒரு கப்பலில் இருந்துகொண்டு ஆண்டன் பாலசிங்கம் தமிழ் ஈழப் போராட்டத்தில் சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு அரசியல் வியூகம் அமைத்து நடத்தியதும் இந்தச் சின்ன ஊசியைப் போட்டுக் கொண்டுதான்!

நாய் தந்த நன்மை

அதெல்லாம் சரி, இதற்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்? நாய்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த இன்சுலின் ஆய்வும் நடந்திருக்கிறது. நாய்களின் கணையத்தைக் கழற்றிப் போட, தடாரென நாய் மெலிந்துபோய் சுகர் பேஷண்ட் ஆனதை ஜெர்மனியில் பல மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர்.

ஆனால், கனடாவைச் சேர்ந்த பேண்டிங் மட்டுமே, ‘அதன் நாளத்தின் வழியாக அல்லாமல், குறிப்பிட்ட பகுதியில் சுரக்கும் பழுப்பான திரவப் பொருள்தான், இந்த இனிப்பு சமாச்சாரத்தைக் கவனமாகக் கையாளுகிறது’ எனும் தகவலைக் கண்டறிந்தார். பேண்டிங் பெரிய மருத்துவப் பட்டம் பெற்ற இளைஞர் கிடையாது. என்றாலும், இந்த நோய்க்கு மருந்து கண்டறியும் ஆர்வம் மட்டுமே அவரிடம் இருந்தது.

28CHVAN_F._G._Banting_1923.jpg பேண்டிங்

ஆய்வுக்காக, கனடாவில் இருந்து கப்பலேறி இங்கிலாந்துக்குப் போய், அங்கே மிகப் பெரிய உடல் இயங்கியல் (physiology) விஞ்ஞானியாக இருந்த பேராசிரியர் மெக்லியாய்டுவின் ஆய்வகத்தில் தன் ஆய்வுச் சிந்தனைக்கு உதவி கேட்டார். பெரும் புறக்கணிப்புக்குப் பின்னர், ‘அட்லீஸ்ட் எல்லோரும் கோடை விடுமுறைக்குப் போகும்போது, எனக்கு ஆய்வகத்தையும் இரண்டு உதவியாளர்களையும் மட்டுமாவது கொடுங்கள்’ எனக் கேட்டுப்பெற்றுத்தான் பேண்டிங் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்திருக்கிறார்.

பகிர்ந்துகொண்ட மருத்துவர்

மாதத்துக்கு 100 டாலர் சம்பளம், கூடவே பெஸ்ட் எனும் ஆராய்ச்சி மாணவருடன் இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது. ஆராய்ச்சிக்குப் போதுமான நாய்கள் கிடைக்கவில்லை. இரவு நேரத்தில், தெரு நாய்களை 1 டாலருக்கும் 2 டாலருக்கும் சொந்தப் பணத்தில் பிடித்து வந்து, இரவும் பகலும் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். தொடர்ச்சியான ஆய்வின் முடிவில், 1922-ல் நாயின் கணையத்திலிருக்கும் சாரத்தை (extract) அவர்கள் பிரித்தெடுத்தார்கள். அதற்கு ‘இன்சுலின்’ எனப் பெயரிட்டனர். பிறகு கோலித் எனும் இன்னோர் அறிஞருடன் சேர்ந்து பல ரத்த மாதிரி ஆய்வுகளை நாய்களில் மேற்கொண்டார்கள். கடைசியாக, கனடா நாட்டு டொரண்டோ நகரத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த இளைஞன் ஒருவனின் ரத்தத்தில், அந்தச் சாரத்தை நேரடியாகக் கலந்தபோதுதான், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் உலகுக்குக் கிடைத்தது.

இந்தக் கண்டுபிடிப்புக்காக பேண்டிங், மெக்லியாய்டு இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. அந்த ஆராய்ச்சியில் துணை நின்ற கோலித், பெஸ்ட் உடன் பரிசையும் பரிசுப் பணத்தையும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். பென்சிலின்போல், போலியோ தடுப்பூசிபோல் உலகின் மிகச் சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்பு இன்சுலின். இன்றைக்கு இன்சுலின் என்பது ‘பில்லியன் டாலர்’ லாபம் புழங்கும் வணிகமாக மாறிவிட்டது!

குணப்படுத்தாது… கட்டுப்படுத்தும்!

‘அய்யோ இன்சுலினா?’ எனப் பயப்படுகிற சாமானியர்கள் ஒருபக்கம். ‘இன்சுலினை நேரடியாக அளிக்கும் அணுகுமுறை, முற்றிலும் தவறு’ எனச் சாடும் மருத்துவர்கள் இன்னொரு பக்கம் என்ற நிலை இன்றும் தொடரத்தான் செய்கிறது. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மருந்தல்ல. அதைக் கட்டுப்பாட்டில் வைக்கும் என்சைம். கணையத்தில் உள்ள செல்கள்தாம், என்சைமைச் சுரக்க வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பாற்றல் சரியாக இல்லாமல் போனால், அந்த என்சைம் சுரப்பது நின்று போகும். அந்த நிலையில், இன்றளவில் எந்த மருந்தையும் கொடுத்து, அந்த என்சைமை அதிக அளவில் சுரக்க வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

28CHVAN_J.J.R._Macleod_ca._1928.jpgமெக்லியாய்டுright

அதனால்தான், இளமையில் வரும் குழந்தை நீரிழிவு நோய் (Juvenile diabetes), இன்சுலின் சார்பு நீரிழிவு (Insulin Dependent Diabetes-IDDM) நிலைகளில் இன்சுலினைத் தவிர்த்துவிட்டு, மரபு மருத்துவ முறைகளை, மூலிகை மருந்துகளை, சித்த மருத்துவத்தை மட்டும் நம்பியிருக்க முடியவில்லை. அதே இன்சுலின் சுரப்பு இயல்பாக உள்ளது. ஆனால், அதன் செயல்படும் திறனில் மட்டுமே பிழை என்றால் (Non Insulin Diabetes Mellitus -NIDDM), அத்தனை மரபு மருந்துவ முறைகளிலும் சிகிச்சையை மேற்கொள்ளலாம். சித்த மருத்துவ அனுபவம் இதில் பல வியக்கத்தக்க விஷயங்களை, கூடவே அதன் எல்லைகளை நிறையவே அடையாளம் காட்டுகிறது. ஆவாரம்பூவில் ஆரம்பித்து அழுத்தும் வர்மம், ஆயுர்வேதம், அக்குபிரஷர் சிகிச்சை, ஆசன சிகிச்சைவரை என்னவெல்லாம் நடக்கிறது? தொடர்ந்து பார்க்கலாம்!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x